சுவையான சுழியம் செய்வது எப்படி? டீக்கடை ஸ்டைல் ரெசிபி இதோ!
சுழியம் அல்லது சுசியம் எனக் கூறப்படும் ஒரு வகை வடை தமிழ்நாட்டு டீக்கடைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். கிறாமப்புறங்களில் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் இந்த சுசியம் வடை நிச்சயமாக இருக்கும்.
சுழியம் அல்லது சுசியம் எனக் கூறப்படும் ஒரு வகை வடை தமிழ்நாட்டு டீக்கடைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். கிறாமப்புறங்களில் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் இந்த சுசியம் வடை நிச்சயமாக இருக்கும். மேலும் இது சாப்பிடுவதற்கு மிகவும் ருசியான சுவையாக இருக்கும். சுற்றி மெதுவான வடை நடுவில் வெல்லம், கடலை பருப்பு சேர்த்து செய்த இனிப்பும் இருக்கும். இதன் காரணமாகவே இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு வடையாக இருந்து வருகிறது. நகரங்களில் உள்ள டீக்கடைகளில் இது கிடைப்பது அரிதான ஒன்றாகும். இந்த சுசியத்தை செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
1கப் கடலை பருப்பு
1 கப் வெல்லம்
அரை கப் மைதா மாவு
கால் கப் அரிசி மாவு
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையானஅளவு உப்பு
2 ஏலக்காய்
அரை கப் துருவிய தேங்காய்
1 டீஸ்பூன் நெய்
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை நன்றாகக் கழுவி 2மணி நேரம் ஊறவைத்து, பின்பு குக்கரில் பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் அளவில் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடலைப் பருப்பில் உள்ள தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஏலக்காயை தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இவ்வாறு வடிகட்டிய வெல்லத்தை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். இந்த கரைசல் சற்று கெட்டியானால் போதும். கெட்டியானதும்,அதில் தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து கிளறி பின்,கடலை பருப்பு சேர்த்து கிளறவும். பின்னர் வேகவைத்து எடுத்து வைத்திருந்த கடலை பருப்பு நன்றாக மசிந்து கெட்டியாக வரும் வரை மீண்டும் மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும். இதில் சில முழு பருப்பும் இருக்க வேண்டும். அப்போதுதான் சாப்பிடும் போது நல்ல சுவையை கொடுக்கும். பாத்திரத்தில் கடலை பருப்பு ஒட்டாமல் வந்ததும் இறக்கி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.இப்பொழுது,கலவை அதிக கெட்டியாக மாறி இருக்கும். 20 நிமிடம் கழித்து,கெட்டியான கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு,அரிசி மாவு, உப்பு,மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பதத்தை விட சிறிதளவு கெட்டியாக கரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவை மிகவும் தண்ணீராக இருந்தால், பொரிக்கும் போது,வெளிப்பக்கம் மொறு மொறுப்பாக வராது. பின்பு, ஒவ்வொரு கடலைபருப்பு உருண்டைகளாக எடுத்து அதில் நாம் செய்து வைத்திருந்த மாவு கலவையில் இரண்டு முறை நன்றாக முக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அடுப்பில் சூடாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும்,மிதமான தீயில் நாம் எடுத்து வைத்திருந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான். வெளியே மொறுமொறுப்பும், உள்ளே சாப்ட்டும்,சுவையுமான சுழியம் ரெடி.
டாபிக்ஸ்