Tamil News  /  Lifestyle  /  How To Make Tasty Prawn Balls Fry
மொறுமொறுப்பான இறால் பால்ஸ்
மொறுமொறுப்பான இறால் பால்ஸ்

Tasty Recipe: மிருதுவான மொறுமொறுப்பான இறால் பால்ஸ் செய்வது எப்படி?

18 March 2023, 23:27 ISTI Jayachandran
18 March 2023, 23:27 IST

மிருதுவான மொறுமொறுப்பான இறால் பால்ஸ் செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

ஒரு முறை இறாலை ருசி பார்த்தவர்கள் அதனை கண்டிப்பாக அடிக்கடி உண்ண விரும்புவார்கள். அசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும். இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது.

இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. அதனால் சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும்.

இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். முக்கியமாக கணினி திரை முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும்.

இறால் பால்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் : .

இறால் - 500 கிராம்

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

முட்டை - 1

சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

சோளமாவு - 2 தேக்கரண்டி

ரொட்டித் தூள் / நுணுக்கிய பொறை - 8 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் பெரியது - 1

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

இறால் பால்ஸ் செய்முறை : .

இறாலை நன்றாக சுத்தம் செய்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதுடன், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஊற வைத்த இறாலை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இறாலுடன் மிளகுத்தூள், உப்பு, சோயா சாஸ், அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாகக் கிளறவும்.

பின்பு முட்டையை சிறிய பாத்திரத்தில் நன்றாக அடித்துக் கலக்கவும். அதனை இறாலுடன் சேர்த்துக் கிளறவும்.

பின்னர் அதில் சோள மாவு, 4 தேக்கரண்டி ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையை சேர்த்து நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

இந்த இறால் உருண்டைகளை மீதமிருக்கும் ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் மென்மையாக உருட்டி 30 நிமிடங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

பின்பு அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

அது நன்றாக சூடானதும், அதில் இறால் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

அதன் மேல் சிறிது கொத்தமல்லித் தழையைத் தூவவும். இப்பொழுது மொறுமொறு இறால் பால்ஸ் தயார். இதனுடன் சில்லி சாஸ் கலந்த மயோனைஸையும் சேர்த்து சாப்பிடலாம்.

டாபிக்ஸ்