'இப்படி செய்யுங்க கசக்காத பாகற்காய் குழம்பு’: எளியமுறையில் பாகற்காய் புளிக்குழம்பு செய்முறை!
குழந்தைகளும் விரும்பி உண்ணும் வகையில் கசப்பு குறைவான பாகற்காய் புளிக்குழம்பு செய்முறையினைப் பார்க்கலாம்.

கசப்புமிகுந்த பாகற்காய் புளிக்குழம்பை இந்த மாதிரி செய்தால் சிறுகுழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கேட்டு வாங்கி பாகற்காய் புளிக்குழம்பினை உண்பார்கள்.
பாகற்காய் புளிக்குழம்பு செய்யத்தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
பாகற்காய் - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
உளுந்து - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
பூண்டு - ஒரு கைப்பிடி அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
வெங்காயம் - பெரிய அளவில் ஆனது,
தக்காளி - இரண்டு,
நீர் - தேவையான அளவு,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு
பாகற்காய் புளிக்குழம்பு செய்வது எப்படி?
ஒரு அடுப்பில் கடாயை வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அதனை நன்கு சூடுபடுத்திக்கொள்ளவும். நல்லெண்ணெய் இல்லையென்றால் ஏதாவது ஒரு எண்ணெய்யைச் சேர்த்துக்கொள்ளவும். இப்போது இதில் சின்னதாய் நறுக்கிவைத்திருக்கும் பாகற்காயைச் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். அதற்குமுன்பு பாகற்காயை நன்கு கழுவிவிட்டு, அதில் இருக்கும் ஈரப்பதம் போகும்வகையில் சமையல் துணியை வைத்துவிட்டு துடைத்துக்கொள்ளுங்கள். பின் அதனை நறுக்கிக்கொண்டு, இவ்வாறு வதக்கவும். இப்போது இதன்மேல் ஒரு அரை டீஸ்பூன் அளவு உப்புசேர்த்துக்கொள்ளவும்.
பின் அடுப்பினை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள். இப்போது பாகற்காயை நன்கு வதக்கிவிட்டு, அதனை வெளியில் எடுத்துவைத்துவிடுங்கள். அந்த எண்ணெய் அப்படியே கடாயில் இருக்கட்டும். அந்த சூடான எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் உளுந்து, கால் டீஸ்பூன் அளவு வெந்தயம், அரை டீஸ்பூன் அளவு சீரகமும் சேர்த்து நன்கு பொரியவிடுங்கள். இதில் ஒரு கைப்பிடி அளவு பூண்டினைசேர்த்துவிட்டு, சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்துவிட்டு மிதமான சூட்டில் வைத்து வதக்கிக்கொள்ளவும்.
கறிவேப்பிலை நன்கு பொரிந்ததும் இரண்டு பெரிய அளவிலான வெங்காயத்தை அதில் சேர்த்துக்கொள்ளுங்கள். கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்துவிட்டு, நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம் ஓரளவு வதங்கிய பின், தக்காளி அரைத்த விழுதைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் முன்னதாக இரண்டு பெரிய தக்காளிகளை விழுதாக்கி வைத்திருக்கவேண்டும். இப்போது இதனையும் நன்கு வதக்கிக்கொள்ளுங்கள். பின், மிக்ஸி ஜாரிலும் நீர் ஊற்றி அடுப்பில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மசாலாப்பொருட்களை எப்போது சேர்க்கலாம்?
இப்போது கூடுதலாக கால் கப் அளவு நீர் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக எண்ணெய் பிரிந்து வரும் அளவுக்கு கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் பிரிந்து வந்ததும் இதனுள் மசாலாப்பொருட்களைச் சேர்க்கவும். இப்போது ஒரு டீஸ்பூன் அளவு மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள், கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் இதெல்லாம் சேர்த்திட்டு, நன்கு இதனைக் கலந்துகொள்ளவும். மசாலாப்பொருட்கள் சேர்த்தபின், அடுப்பினை குறைந்த தீயில் வைத்துக்கொள்ளவும்.
நன்கு இது கலந்தபின், ஒருகொதி அடுப்பில் வரட்டும். கொதி வந்ததும் இதில் ஒரு புளிக்கரைசலைச் சேர்த்துக்கொள்ளுங்கள். முன்னதாக, எலுமிச்சை அளவு புளியை எடுத்து நன்கு நீரில் ஊறவைத்துவிட்டு, அதனை அடுப்பில் சேர்த்துக்கொள்ளவும். சின்ன எலுமிச்சை அளவு புளி ஊறவைத்தால் போதும்.
இந்த சமயத்தில் தேவையான நீர் சேர்த்துவிட்டு, கிரேவி மாதிரி கொதித்து வரும் வரை காத்திருக்கவும். நன்கு கொதித்து, அந்த தண்ணீர் எல்லாம் வற்றிவிட்டு, கிரேவி பதத்திற்கு வந்தவுடன் நாம் ஏற்கனவே வறுத்துவைத்திருக்கும் பாகற்காயை அதில் சேர்த்துவிடுங்கள். பின் அதை மெதுவாக மிக்ஸ் செய்துவிடுங்கள்.
இப்போது தேவைப்பட்டால் உங்களுக்கு கொஞ்சம் நீர் சேர்த்துக்கொள்ளுங்கள். மூடிப்போட்டு மூடி, இடையே இடையே கிளறிவிடவும். 15 நிமிடத்தில் பாகற்காய் கிரேவி சூப்பராக தயார் ஆகிவிட்டது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்