Pearl Millet Rice: நாவில் எச்சில் ஊறும் நாட்டுக்கம்பு சோறு செய்வது எப்படி மற்றும் நாட்டுக்கம்பில் இருக்கும் நன்மைகள்?
Pearl Millet Rice: நாவில் எச்சில் ஊறும் நாட்டுக்கம்பு சோறு செய்வது எப்படி மற்றும் நாட்டுக்கம்பில் இருக்கும் நன்மைகள் குறித்து அறிவோம்.
Pearl Millet Rice: நம் உடம்பு என்னும் தொழிற்சாலை தொய்வு இல்லாமல் இயங்க, நாம் உண்ணும் பாரம்பரிய உணவு நமக்கு ஆரோக்கியத்தை மீட்டுத்தரக்கூடியவை.
அப்படி ஒரு பாரம்பரிய உணவான கம்பு சோறினை செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நாட்டுக்கம்பு - அரை கிலோ;
நீர் - 7 சின்ன டம்ளர்
நாட்டுக்கம்பு சோறு செய்வது எப்படி?
கம்மஞ்சோறு செய்ய ஏற்றது, நாட்டுக் கம்புதான். முதலில் நாட்டுக்கம்பு ஒரு அரை கிலோ வாங்கி அதனை மிக்ஸி ஜாரில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி, மேல்பகுதி தோலை நீக்கும் அளவுக்கு நீக்கவேண்டும். அதன்பின், அந்த நாட்டுக்கம்பினை ஒரு சோளகு என்னும் முறத்தில் போட்டு, ஒரு புடை புடைக்கவேண்டும். பின் அந்த கம்பினை நீரில் கலந்து கல், தூசி இவற்றை எல்லாம் தேடி எடுத்து அப்புறப்படுத்திவிடவேண்டும். ஈரப்பதம் ஓரளவுக்கு குறைந்தபின், அந்த நாட்டுக்கம்பினை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளலாம். அது பார்ப்பதற்கு ரவை பதத்தில் இருக்கவேண்டும். அதாவது ரொம்பவும் வலுவலுவென அரைத்து எடுக்கக்கூடாது. முதலில் அரைத்தபின் சோளகு அல்லது முறத்தில்போட்டு, இரண்டு தடவை அரைக்கும்போது, பொடியானது முன்பகுதியில் இருக்கும். அதைத்தான் பயன்படுத்த எடுத்து வைக்கவும். பின்பகுதியில் சற்று பெரிதான நாட்டுக்கம்பு இருக்கும். அதை அப்படியே எடுத்து மீண்டும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துவிட்டு, ரவை பதத்தில் ரெடி செய்துகொள்ளவேண்டும்.
அதன்பின் சட்டியில் நீர் ஊற்றி கொதிக்க வைத்துக்கொள்ளவேண்டும். அரைத்த நாட்டுக்கம்பினை அதனுள் போடுவதற்கு முன், சிறிது குளிர்ந்த நீரை அதனுள் ஊற்றிக்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதால், கம்மஞ்சோறு கட்டியாகாது. இப்போது அரைத்த நாட்டுக்கம்பினை சிறிதுபோடுங்கள். பின் கரண்டியை வைத்து நன்கு கிளறுங்கள். அதேபோல், அரைத்த நாட்டுக்கம்பினை சிறிது போடுங்கள். பின் நன்கு கலக்குங்கள். இந்த செயல்முறைக்குப் பின், 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக கிளறுங்கள்.
சிறிதுநேரத்தில் கிடைக்கும் கம்பு பதத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதனை ஒரு குக்கரில் இரண்டு டம்ளர் நீர் விட்டு, அதில் நாம் ரெடி செய்துவைத்த கம்பு பதத்தை அந்த பாத்திரத்துடன் தூக்கி வைக்கவும். அதன்பிறகு, குக்கரின் மேல் மூடியை மூடி, மூன்றில் இருந்து நான்கு விசில் வைத்து இறக்கிவைத்துவிடுங்கள். அதன்பின் ஒரு பத்து நிமிடங்கள் கழித்து குக்கரை ஓபன் செய்யுங்கள். தற்போது, கமகம கம்புச்சோறு அல்லது கம்மஞ்சோறு தயார். இதனை தக்காளி தொக்கு, புளிக்குழம்பு, கருவாட்டுக்குழம்பு வைத்து தின்றால் ருசியாக இருக்கும். ஊறுகாய் மற்றும் சின்ன வெங்காயத்தையும் தொட்டுக்கொள்ள எடுத்துக்கொள்ளலாம்.
நாம் அரைக்கும் நாட்டுக்கம்பினை எவ்வளவு அரைத்தோமோ அப்படியே பயன்படுத்திவிடவேண்டும். அப்படி பயன்படுத்தவில்லையென்றால், அந்த கம்பு காரல் அடித்துவிடும்.
நாட்டுக்கம்பில் இருக்கும் மருத்துவப் பயன்கள்:
நாட்டுக்கம்பில் இருக்கும் மருத்துவப் பயன்கள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் மைதிலி தனது யூட்யூப் சேனலில் பேட்டி அளித்துள்ளார். அதன் தொகுப்பு பின்வருமாறு:-
- நாட்டுக்கம்பில் லிக்னின் என்னும் ஊட்டச்சத்து இருக்கிறது. இது மாரடைப்பினை குறைக்க உதவும்.
- நாட்டுக்கம்பில் நுரையீரலை சீராகப் பாதுகாக்க உதவும். இதனால் ஆஸ்துமா போன்ற நோய் வராது.
- நாட்டுக்கம்பில் நார்ச்சத்து அதிகமிருப்பதால், இது பசி உணர்வைத்தூண்டாது. இதனால் உடல் எடையை சீராக வைத்திருக்கும்.
- நாட்டுக்கம்பு நினைவுத்திறனை மேம்படுத்தும்.
- நாட்டுக்கம்பு டைப் 2 நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்தவும்; இன்சுலின் சுரப்பினை சீராக வைக்க உதவும்.
- கம்மங்கூழ் குடிப்பது வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவற்றை சீராக குணப்படுத்தக்கூடியது.
- நாட்டுக்கம்பில் இருக்கும் வைட்டமின் ஏ, கண்சார்ந்த மாலைக்கண் நோய், கண் புரை போன்றவற்றைத் தடுக்க உதவும்.
டாபிக்ஸ்