Gongura Chutney: நாக்கில் எச்சிலை ஊறவைக்கும் ஆந்திர ஃபேமஸ் கோங்கூரா சட்னி செய்வது எப்படி?
ஆந்திராவின் பிரபலமான கோங்கூரா சட்னி செய்வது எப்படி என்பது குறித்துக் காணலாம்.

நாம் மதியத்துக்கு சாப்பாடு வைத்துவிட்டு, எப்போதும்போல் சாம்பார் அல்லது குழம்பு வைக்காமல், புளிச்ச கீரையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் புகழ்பெற்ற ‘கோங்குரா சட்னி’ செய்து, அதனை வடித்த சாதத்தில் பிணைந்து சாப்பிட்டால், அதன் ருசி சொல்லிமாளாது. அந்த அளவுக்கு ருசியானது ‘கோங்குரா சட்னி’.
கோங்குரா சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய் - ஆறூ டேபிள் ஸ்பூன்,
உளுந்தம்பருப்பு -அரை டேபிள் ஸ்பூன்,
கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் - ஐந்து,
மிளகாய் வத்தல் - ஐந்து,
தக்காளி - ஒன்று,
புளிச்ச கீரை - 100 கிராம்,
வெள்ளைப்பூண்டு - ஆறு பல்;
உப்பு - தேவையான அளவு,
மிளகாய் வத்தல் - இரண்டு,
கடுகு - சிறிதளவு,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
கோங்குரா சட்னி செய்முறை: ஒரு வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெயை ஊற்றவும். வாணலி சூடானதும் உளுந்தம்பருப்பு அரை டேபிள் ஸ்பூனும், கடலைப் பருப்பு அரை டேபிள் ஸ்பூனும் போட்டும் நன்கு வறுத்துக் கொள்ளவும். கொஞ்சம் நன்கு வதங்கியபின், 5 பச்சை மிளகாயையும், 5 மிளகாய் வத்தலையும் வாணலியில் போட்டு வதக்கிக் கொள்ளவும். பின், அதை எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.
பின், அதே வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெயை ஊற்றி சூடானதும், ஒரு அளவான தக்காளியை அறுத்து, வாணலியில் போட்டுக்கொண்டு, நன்கு வதக்கவும். அதன்பின், அந்த கடாயில் அலசி எடுத்து, ஆய்ந்து எடுத்துவைத்த புளிச்ச கீரை இலைகளைப் போடவும்.
முன்பே இருந்த தக்காளியையும் தற்போது போட்ட புளிச்ச கீரையையும் ஒன்றாகக் கலந்து, நன்கு பிரட்டி எடுத்துக்கொண்டு, அதன்மேல் மூடியை வைத்து மூடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, இதையும் மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதன்பின், முன்பே நாம் வதக்கி எடுத்து வைத்து இருந்த மிளகாய் வத்தல், பச்சை மிளகாய், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய நான்கையும் மிக்ஸியில் எடுத்துக்கொள்ளவும். அதனுள் ஐந்து, ஆறு வெள்ளைப் பூண்டினை சேர்க்கவும். சிறிது புளியைப் போட்டுக்கொள்ளவும். தேவையான அளவு உப்பினைச் சேர்த்துக் கொள்ளவும். பின்பு, அதை நன்கு அரைத்துக் கொள்ளவும். அதன்மேல், வதக்கிவைத்த புளிச்ச கீரையையும் தக்காளி கலவையையும் சேர்த்துக்கொண்டு, மறுபடியும் மிக்ஸியில் அரைக்கவும். பின் இதைத் தயார் செய்து வைத்த இந்த பச்சடியைத் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
அதன்பின், கடாயை சுத்தப்படுத்திவிட்டு, அதன்மேல், இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெயை ஊற்றிக்கொள்ளவும். மிளகாய் வத்தல் இரண்டு, கடுகு சிறிதளவு, சீரகம் சிறிதளவு, கறிவேப்பிலை சிறிதளவு, வெட்டிய வெங்காயம் சிறிதளவு, மஞ்சள் தூள் சிறிதளவுபோட்டு நன்கு வதக்கிக்கொள்ளவும். இதன்மேல், தனியாக தயார் செய்து வைத்த புளிச்ச கீரை பச்சடியை ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் கலக்கிவிட்டு சூடாக இறக்கவும். தற்போது சுவையான ஆந்திரா கோங்கூரா பச்சடி தயார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்