Heart Care: உங்கள் இதய ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளும் வழிகள்!
உங்கள் இதய ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளும் வழிகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
இன்றைய பரப்பான சூழலில் உயர் ரத்த அழுத்தம், மன உளைச்சல், வேலைப்பளு, பொருளாதார நெருக்கடி, குடும்பப் பிரச்னைகள், பிள்ளைகள் படிப்பு, வயதான பெற்றோர் உடல்நலம் போன்ற பல்வேறு இக்கட்டான கட்டங்களை பெரும்பாலனவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
இதைத் தாங்க முடியாமல் இதயக் கோளாறுகள் உண்டாகலாம். எனவே எப்போதும் உடங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
மனித உடலில் இன்றியமையாத உறுப்பு இதயம். உடல் முழுவதும் ரத்தத்தை விநியோகம் செய்யும் பிரதான உறுப்பான இதயத்துக்கு வரும் ஆபத்துகளில் பெரும்பாலானவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும். உண்ணும் உணவும், வாழ்க்கை முறையுமே இதய நோய்களை கட்டுப்படுத்தும் கருவிகளாகும்.
எல்லா வகையான இதய நோய்களுக்கும் அறிகுறிகள் தெளிவாக புலப்படுவதில்லை. அப்படியிருக்க, நம் இதயம் ஆரோக்கியமாக துடிக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது? குறிப்பிட்ட இடைவெளிகளில் உடற் பரிசோதனை செய்வதன் மூலம் இதய நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
இதயத்தில் நோய் இருந்தால் நெஞ்சில் வலி ஏற்படுவதுதான் ஒரே அறிகுறி எனும் தவறாக புரிதல் பலரிடம் உள்ளது. இதய நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சு வலி மட்டுமல்லாது மேலும் பல அறிகுறிகள் தென்படலாம்.
அவை கீழ்வருமாறு:
சீரற்ற இதயத்துடிப்பு
நெஞ்சில் அசௌகரியம்
உடலின் இடப்புறத்தில் தோன்றும் வலி
மயக்க உணர்வு
தலைசுற்றல்
தொண்டை அல்லது தாடை வலி
உடற்சோர்வு
தீராத இருமல்
கால்கள், கணுக்கால், அடிவயிறு ஆகியவற்றில் வீக்கம்
குறட்டை மற்றும் தூக்கக் கோளாறு
துவக்கத்திலேயே கண்டறிந்தால் இதய நோய்களை குணப்படுத்துவது எளிது. எனவே, இதய நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.
ஆரோக்கியமான உணவுடன் போதியளவு உடற்பயிற்சியும் மேற்கொண்டால் இதயம் நலமுடன் துடிக்கும்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பயறு வகைகள் ஆகியவற்றை போதியளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்புச்சத்து, சோடியம், இனிப்பு உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
சீரான உடல் எடை பேணுவதுடன், புகைப்பதை தவிர்த்து, மன இறுக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை இதய நோய்களுக்கு வழிவகுக்கலாம் என்பதால் அவற்றை கட்டுக்குள் வைக்கவேண்டியது அவசியமாகும்.
40 வயதைக் கடந்தவர்கள் ஆண்டுக்கொருமுறையும், 50 வயதைக் கடந்தவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை இசிஜி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அதேபோல் டிரட் மில் டெஸ்ட்டையும் எடுக்கவேண்டும். வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது தங்கள் இஷ்டம் போல் டிரட் மில்லில் பயிற்சி செய்யக் கூடாது. அது இதயத்தைப் பாதித்து மாரடைப்பு வர வழிவகுக்கும்.
மருத்துவரின் அறிவுறுத்தலின்படியே இந்த டிரட் மில்லில் பயிற்சி செய்யலாம்.
உடல் ஆரோக்கியத்தைப் பேண மெல்ல நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளலாம்.