Stray Dogs Attack Escape Tips: தெரு நாய்கள் திடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்
தெரு நாய்கள் திடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழிகள் ஆக இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள். அதுமாதிரியான இக்கட்டான நேரத்தில் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டிய எளிய டிப்ஸ்களை பார்க்கலாம்.
![தெரு நாய்கள் திடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள் தெரு நாய்கள் திடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்](https://images.hindustantimes.com/tamil/img/2024/07/24/550x309/dogs_attacking_1721808003835_1721843054660.jpg)
தெருநாய்கள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் என்பது நாடு முழுவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்வாகவே இருந்து வருகிறது. சமீபகலமாக இந்த தாக்குதல்கள் என்பது சற்று அதிகமாகவே காணப்படுகிறது. குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என தெருநாய் கடியில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை எந்த நேரத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.
தெரு நாய்கள் கடிப்பது தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துவதும் உண்டு. தெரு நாய் தாக்குதலில் பாதிக்கப்பட்டதில் பலர் உயரிழந்த சம்பவங்களும் இருக்கின்றன.
அந்த வகையில் தெரு நாய் தாக்குதலில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
நாய்கள் துரத்தும்போது, அமைதியாக இருங்கள்
தெருநாய் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி என்னவென்றால், நாய்கள் சத்தமாக குரைக்கும் போதெல்லாம், பீதி அல்லது பதட்டத்தம் அடைவதற்கு பதிலாக, உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
அவை துரத்தினால் வேகமாக ஓடுவதற்கு பதிலாக, அமைதியாக நில்லுங்கள். நாய்கள் உங்களைப் பின்தொடர்ந்து வந்து நீங்கள் வேகமாக ஓடத் தொடங்கினால் அல்லது நாய்களைக் கண்டு பீதியடைந்து வேகமாக நடக்கத் தொடங்கினால், அவை அதிக ஆக்ரோஷமாக மாறும். எனவே, அத்தகைய சூழ்நிலையில், ஒருவர் நிதானமாக செயல்படுவது முக்கியமான விஷயமாக உள்ளது.
உங்களை பாதுகாத்து கொள்ள இந்த நடவடிக்கைகளை எடுக்கவும்
தெருவில் அல்லது சாலையில் திடீரென்று நாய்கள் உங்களைத் தாக்கினால், அத்தகைய சூழ்நிலையில், பீதியடைந்து ஓடுவதற்குப் பதிலாக, அங்கேயே நின்று நாய் கடியில் இருந்து தற்காத்து கொள்ள சண்டையிடுங்கள்.
உங்கள் கையில் இருக்கும் பொருள்களையோ அல்லது, குச்சி, குடை என வேறு ஏதேனும் பொருள் இருந்தால், அதைக் கொண்டு நாய்களை அச்சமூட்ட முயற்சிக்கவும்.
உங்களிடம் ஏதேனும் உணவுப் பொருள் இருந்தால், அதை நாய்களின் முன் எறிந்து நாய்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கவும், பின்னர் மெதுவாக அங்கிருந்து வெளியேறவும்.
பீதி அடைய வேண்டாம்
நாய்களை கண்டு வியப்படைபவர்கள், பயப்படுபவர்கள், நேருக்கு நேர் பார்ப்பவர்களை தெருநாய்கள் அதிகமாக தாக்குகிறது. எனவே, நாய்களைப் பார்த்து மேற்கூறிய செய்கைகளை, உடல் மொழிகளை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் கவனத்துடனும் உங்கள் வழியில் மெதுவாக முன்னேறுங்கள்.
பல சமயங்களில், எதிரில் இருப்பவர்களால் நாய்கள் அச்சுறுத்தப்படுவதாக உணரும்போது, அவையும் தாக்க முன்வருகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தெருநாய்களைக் கண்டால் கிண்டல் செய்யாமல் நேராக உங்கள் வழியில் நடந்து செல்லுங்கள்.
உதவியை நாடுதல்
நாய்கள் உங்களைத் தாக்க முயற்சித்தாலோ அல்லது தாக்கினாலோ, உங்களது தற்காப்பு முயற்சிக்கு அவை எந்த வகையிலும் பின்வாங்கவில்லை என்றாலோ, மற்றவரின் உதவியை பெறுவது மிகவும் முக்கியம். அருகில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்துக்குச் செல்ல முயற்சிக்கவும்.
நாய்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய எந்த வீட்டையோ அல்லது அத்தகைய இடத்தையோ நீங்கள் கண்டால், அங்கு செல்ல முயற்சிக்கவும். சத்தம் போட்டு மற்றவர்களையும் உதவிக்கு அழைக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)