Hidden Camera: வெளி இடங்களில் அடிக்கடி வசிப்பவரா? உங்கள் இடத்தில் ரகசிய கேமரா இருப்பதை கண்டறிய எளிய வழிகள்
Hidden Camera: உங்களை அறியாமலேயே ரகசிய கேமரா, ஸ்பை கேமராக்கள் மூலம் நீங்கள் கண்காணிப்படுவது பலருக்கும் தெரியாது. இதனால் தனியுரிமை பாதுகாப்பு மீறப்படுவதுடன், உங்களின் உடமைகளும் திருடப்பட வாய்ப்பு உள்ளது. எனவே வெளி இடங்களில் தங்கும்போது ரகசிய கேமரா போன்றவை இருப்பதை கண்டறிவதற்கான எளிய வழிகள் இதோ

வீட்டை விட்டு நாம் எங்கு சென்றாலும் பாதுகாப்புடனும், விழிப்புடனும் இருப்பது பல்வேறு ஆபத்துகள், பிரச்னைகளில் இருந்து தற்காத்து கொள்ள உதவும். அந்த வகையில் தனிப்பட்ட முறையிலோ அல்லது அலுவல் பணி காரணமாகவோ வீட்டை விட்டு வெளி இடங்கள், குறிப்பாக வெளியூர் பயணங்களின்போது ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவதற்கான சூழல் பலருக்கும் உருவாகும்.
இதுபோன்ற நேரங்களில் உங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது மிக மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. அதாவது நீங்கள் வசிக்க இருக்கும் இடத்தில் ரகசிய கேமராக்கள் எங்காவது இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்களது தனியுரிமை பாதுகாப்பு என்பது ரகசிய கேமராக்களின் மூலம் உங்களை அறியாமலேயே மீறப்படும்.
பல்வேறு நோக்கங்களுக்காகவும், காரணங்களுக்காகவும் வெவ்வேறு நகரங்களுக்கு பலரும் செல்வதுண்டு. பயணம், அலுவல் மீட்டிங், ஹனிமூன், பிறந்தநாள் கொண்டாட்டம் என பல சந்தர்ப்பங்களில் புதிய இடங்களுக்கு செல்வதும், அங்கே தங்குவதும் வழக்கமான விஷயமாக இருந்தாலும், நமக்கு எதிர்காலத்தில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாதவாறு தனியுரிமை மீறப்படாமல், நமது மதிப்புமிக்க பொருள்கள் திருடப்படமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ரகசிய கேமராக்களால் வரும் சிக்கல்கள்
நீங்கள் அறியாமலேயே ரகசிய கேமராக்கள் மூலம் உங்கள் தனிப்பட்ட காட்சிகள் படம்பிடிக்கப்படுகிறது. இது மட்டுமே ஆபத்தை விளைவிக்கும் என கருதிவிட முடியாது. ஏனென்றால் ரகசிய கேமராக்கள் மூலம் உங்களது வணிக விவரங்கள், நிதி பரிவர்த்தனைகள், தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் கண்காணிக்கலாம்.
அத்துடன் உங்களின் மதிப்புமிக்க பொருள்கள், விலை உயர்ந்த கேஜெட்டுகள் போன்றவற்றை ரகசிய கேமரா மூலம் நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிடும் அபாயமும் உள்ளது. வீட்டை விட்ட வெளி சென்று எங்கு தங்கினாலும் தம்பதிகள் மட்டுமல்ல, தனியாக செல்பவரும் ரகசிய கேமராக்கள் குறித்து விழிப்புடன் இருப்பது மிக அவசியம்.
இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்கவும், ரகசிய கேமரா பயன்பாடு இருக்கிறதா என்பதை அறியவும் சில வழிகள் இருக்கின்றன. அவை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்
ரகசிய கேமராவை கண்டறிவதற்கான டிப்ஸ்
சந்தையில் உள்ள பல்வேறு வகையான கேஜெட்டுகள் ரகசிய கேமராக்களை கண்டறிய உதவுகின்றன. அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களும், வெளி இடங்களில் தங்குபவர்களும் இந்த கேட்ஜெட்களை பற்றி அறிந்திருக்க வேண்டும். நீங்கள் வசிக்கும் அறையில் ரகசிய கேமராக்கள் வைத்திருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி அதை எளிதாகக் கண்டறியலாம். அதற்கு பின்னபற்ற வேண்டிய சில எளிய முறைகள் இதோ
உங்கள் ஸ்மார்ட்போன் டார்ச்லைட்டை இயக்கவும்
உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் டார்ச்லைட் இருந்தால், நீங்கள் வசிக்கும் அறையில் சந்தேகப்படும்படியான எந்தப் பொருளின் மீதும் வைத்து கவனமாக கவனிக்க வேண்டும். கேமரா எங்கேயும் இருந்தால், அதன் லென்ஸில் வெளிச்சம் விழும்போது, பிரதிபலிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு நேர்ந்தால் ரகசிய கேமரா இருக்கலாம் என்பதை புரித்துகொள்ளலாம்
இன்ப்ரா ரெட் கதிர்கள்
ரகசிய கேமராவில் உள்ள இன்ப்ரா ரெட் கதிர்களை மொபைல் கேமரா மூலம் கண்டறியலாம். அவை வெறும் கண்களால் நேரடியாகத் பார்க்க முடியாவிட்டாலும் மொபைல் கேமராவில் தெளிவாக தெரியும். ஓட்டல் அறை, கழிப்பறையில் கேமரா மூலம் வீடியோவை நீங்கள் பதிவு செய்தால், அங்கு ரகசிய கேமரா நிறுவப்பட்டிருந்தால், அதன் இன்ப்ரா ரெட் கதிர்கள் உங்கள் மொபைல் கேமராவில் படம்பிடிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த முறை மூலமும் ரகசிய கேமரா இருப்பை கண்டறியும் வாய்ப்பு உள்ளது
கேமரா டிடெக்டர் செயலி
கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஐபோன் ஆப் ஸ்டோரில் ரகசிய கேமராக்களை கண்டறிவதற்கு என பல்வேறு செயலிகள் உள்ளன. இதன் மூலம் ரகசிய கேமரா இருக்கிறதா என்பதை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம்.
டிடெக்டிஃபை, ஹிடன் ஐஆர் கேமரா டிடெக்டர், ஹிடன் ஸ்பை கேமரா ஃபைண்டர் ப்ரோ போன்ற செயலிகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்காம், இவற்றை நிறுவி ரகசிய கேமரா இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்
வைஃபை நெட்வொர்க்கை கவனிக்க
அறையில் உங்கள் மொபைலில் தோன்றும் வைஃபை நெட்வொர்க்கைப் பாருங்கள். இதில் சில சந்தேகத்துக்கு இடமான வைஃபை, புளூடூத் சாதனம் தோன்றினால் அதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் இவற்றின் மூலம் ரகசிய கேமராக்கள் இயக்கப்படலாம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்