Food Adulteration: நெய்யில் கலப்படம் இருப்பதை கண்டறிவது எப்படி? வீட்டிலேயே செய்ய வேண்டிய எளிய சோதனைகள் இதோ
Food Adulteration: உணவில் செய்யப்படும் கலப்படம் உடல் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். அந்த வகையில் பல்வேறு தேவையில்லாத பொருள்களில் அதிகம் கலப்படம் செய்யும் உணவாக நெய் இருந்து வருகிறது. நெய்யின் தரம் குறித்தும், அதில் கலப்படம் உள்ளதா என்பது சில எளிய சோதனைகள் மூலம் கண்டறியலாம்

பாலில் இருந்து வெண்ணெய் எடுக்கப்பட்டு அதிலிருந்து நெய் உருவாக்கப்படுகிறது. நெய்யானது உணவின் சுவையை மெருகேற்றுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. நெய் அரிசி சோறு முதல் இட்லி, தோசை, சப்பாத்தி என டிபன் உணவுகள் வரை என அனைத்திலும் சேர்த்து ருசித்து சாப்பிடக்கூடியதாக உள்ளது. நெய்யின் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவரும் விதமாக உள்ளது.
சுத்தமான நெய் ஆரோக்கிய கொழுப்புகளை கொண்டிருக்கிறது. இது சீரான செரிமானத்துக்கு உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் இதில் வேறு பொருள்கள் எதுவும் கலப்படம் செய்யப்பட்டால் அதன் தரம் அப்படியே குறைந்துவிடும். வீட்டில் இருக்கும் பாலை வைத்து நெய்யை பலரும் வீட்டிலேயே தயாரிப்பதுண்டு. அத்துடன் கடைகளிலும் நெய் வாங்கி பலரும் பயன்படுத்துகிறார்கள்.
நெய்யில் கலப்படம் இருக்கிறதா என்பதை கண்டறிய சில எளிய வழிகள் இருக்கின்றன. அந்த வகையில் நீங்கள் வாங்கி பயன்படுத்தும் நெய் சுத்தமானதா, கலப்படம் ஏதேனும் இருக்கிறதா என்பதை வீட்டில் இருந்தபடியே கண்டறிய உதவும் சில எளிய டிப்ஸ்களை பார்க்கலாம்
1. உறைபனி சோதனை
ஒரு கண்ணாடி பாட்டிலில் சிறிது நெய்யை ஊற்றி, சில மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். தூய நெய் சீராக கெட்டியாகும், ஆனால் நெய் தனித்தனி அடுக்குகளில் கெட்டியானால் அல்லது முழுமையாக கெட்டியாகவில்லை என்றால் அதில் சோயாபீன், தேங்காய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றில் எவையேனும் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம்.
2. வெப்ப சோதனை
ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி குறைந்த வெப்பத்தில் சூடாக்கவும். தூய நெய்யாக இருந்தால், அது விரைவாக உருகி தெளிவான திரவமாக மாறும். அது உருகுவதற்கு அதிக நேரம் எடுத்தாலோ அல்லது வேறு எதாவது எச்சத்தை விட்டுச் சென்றால், நெய் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம்.
3. அயோடின் சோதனை
சிறிதளவு நெய்யில் சில துளிகள் அயோடின் கரைசலைச் சேர்க்கவும். நெய் நீல நிறமாக மாறினால் அதில் ஸ்டார்ச் இருப்பதைக் குறிக்கிறது. அதாவது அதில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்
4. உள்ளங்கை சோதனை
உங்கள் உள்ளங்கையில் சிறிது நெய்யை வைத்து அப்படியே காத்திருக்கவும். அது உங்கள் உடல் வெப்பத்துக்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பாருங்கள். தூய நெய் சில நொடிகளில் தானாவே உருகும். அது திடமாக இருந்தால் உருகுவதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே இதில் தாவர எண்ணெய்கள் அல்லது கொழுப்புகளுடன் கலந்திருக்கலாம்
5. கரைதிறன் சோதனை
ரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் நெய்யைக் கரைக்கவும். சுத்தமான நெய் மேற்பரப்பில் மிதக்கும், ஆனால் அது தண்ணீரில் கலந்தாலோ அல்லது கீழே மூழ்கினாலோ, அது எண்ணெய்களுடன் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம்.
6. கரண்டி சோதனை
ஒரு சிறிய ஸ்பூன் நெய்யை எடுத்து தீயில் சூடாக்கவும். தூய நெய் முழுவதுமாக உருகி, எச்சம் இல்லாத தெளிவான திரவமாக மாறும். ஒட்டும் எச்சம் இருந்தால் அல்லது வாசனை இல்லாமல் இருந்தால், நெய் தூய்மையற்றதாக இருக்கலாம்.
7. சுவை சோதனை
சிறிதளவு நெய்யை எடுத்து சுவைத்து பார்க்கவும். தூய நெய் அழுத்தமான சுவையைக் கொண்டிருக்கும்.
எண்ணெய் போல் பிசுபிசுப்பாக சுவை இருந்தால் கலப்படம் இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளலாம்
8. காகித சோதனை
ஒரு வெள்ளை காகிதம் அல்லது துணியில் ஒரு துளி நெய்யை வைத்து சில நிமிடங்கள் அப்படியே விடவும். தூய நெய் எண்ணெய் கறையை வெளிப்படுத்தி படிப்படியாக மறைந்துவிடும். கறை நீடித்து வழக்கத்துக்கு மாறாக க்ரீஸ் போன்று இருந்தால், அது தாவர எண்ணெய்கள் இருப்பதை குறிக்கும்.
கலப்பட நெய்யால் ஏற்படும் பாதிப்புகள்
- கலப்பட நெய்யில் பெரும்பாலும் ஸ்டார்ச், ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்பு அல்லது பிற தரம் குறைந்த எண்ணெய்கள் போன்ற சேர்க்கைகள் இருக்கலாம். அவை அஜீரணம், வீக்கம், வாயு, வயிறு அசௌகரியம் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
- கலப்பட நெய்யில் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்களிலிருந்து வரும் ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கலாம். இது கொழுப்பின் அளவை அதிகரித்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
- கலப்பட நெய்யில் உள்ள சேர்க்கைகள் ஒவ்வாமை ஏற்படுத்தும். குறிப்பாக லேசான தடிப்புகள் முதல் கடுமையான சுவாசப் பிரச்னைகள் வரை ஏற்படுத்தலாம்
- தூய நெய்யில் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் ஊட்டச்சத்துக்கள் இருக்காது. கண் பார்வை திறன், எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் தோல் ஆரோக்கியத்தை பாதிப்பை ஏற்படுத்தலாம்
- கலப்பட நெய்யில் தூய நெய்யின் இயல்பான சுவை இருக்காது. இது உணவுகளின் சுவை மற்றும் தரத்தை சமரசம் செய்கிறது. அத்துடன் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்

டாபிக்ஸ்