உங்கள் வீட்டுக்குள் பாஸிடிவ் எனர்ஜி உருவாக வேண்டுமா? இதோ 7 டிப்ஸ்!
உங்கள் வீட்டுக்குள் பாஸிடிவ் எனர்ஜி உருவாகுவதற்கான குறிப்புகள் குறித்து இங்கு காண்போம்.
நம்மைச் சுற்றி எப்போதும் ஒரு நேர்மறையான சக்தி சூழ்ந்திருந்தாலே நமது உள்ளமும், செயல்களும், உடல்நலமும் சிறப்பாக இருக்கும். அதேபோல் வீடுகளிலும் லட்சுமி கடாட்சம் நிறைந்து செல்வச் செழிப்புடனும் குடும்பத்தார் ஆரோக்கியத்துடனும் விளங்குவதற்கும் இந்த நேர்மறை ஆற்றல் எனப்படும் பாஸிடிவ் எனர்ஜி தேவை.
அந்த நேர்மறை ஆற்றலை உருவாக்கக்கூடிய 7 வழிமுறைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
1. நமது வாழ்விடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தாலே போதும் பாதிப் பிரச்னைகள் தீர்ந்துவிடும். அதற்கு உங்கள் வீட்டின் ஆற்றலைச் சுத்தம் செய்வது முக்கியம், ஏனென்றால் உடல் ஒழுங்கீனம் மற்றும் அழுக்குகளைப் போலவே எதிர்மறை ஆற்றலும் உங்கள் வாழும் இடத்தில் குவிந்து உங்கள் மனநிலை, மன ஆரோக்கியம் என ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கும். இதற்கு உங்கள் வீட்டின் ஆற்றலைச் சுத்தம் செய்வது இந்த எதிர்மறை ஆற்றலை அகற்றி நேர்மறையான, இணக்கமான சூழலை உருவாக்க உதவும்.
வீட்டுக்குள் தேவையற்ற பொருட்கள், பயன்படுத்தாத பொருட்கள் அடைந்திருப்பதால் தூசு, சுவாசக் கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படும். மனதைப் பதற்றமடையச் செய்யும் இரைச்சல், ஒழுங்கற்ற வீடு உங்களை படபடப்பில் ஆழ்த்தும். எனவே வீட்டில் தேவையற்ற, பயன்படுத்தாத பொருட்களை அகற்றினாலே நேர்மறை ஆற்றல் உருவாகும். இது சுத்தமான, அமைதியான இடத்தை உருவாக்க உதவும்.
2. அழுக்கு துர்நாற்றம், அடைசல் இருந்தால் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. மனதுக்கு இதமான வாசனை நிரம்பிய ஊதுபத்திகள், நறுமண மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தால் வீடு வாசனையுடனும் மயக்கும் சூழ்நிலையையும் ஏற்படுத்தும்.
3. வீட்டின் சுவர்களில் பூசும் வர்ணங்களையும் கண்களை உறுத்தாமல் இருக்க வேண்டும். அடர்த்தியான நிறங்களைத் தவிர்த்து மனதுக்கு அமைதி தரும் பேஸ்டல் கலர்களை பயன்படுத்தினால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும்.
சுற்றுச்சூழல் வசதியான அமைப்புகளைக் கொண்டிருந்தால் வீட்டில் லட்சுமி குடிபுகுவாள். படுக்கையறை, தலையணை மெத்தை உறைகள், ஜன்னல் திரைகளை பளிச்சென வைத்திருங்கள். அதற்கு அதிகம் செலவழித்தால் தவறில்லை. அவற்றைப் பார்ப்பதால் மனம் உற்சாகம் பெரும்.
4. வீட்டுக்குள் யோகா, உடற்பயிற்சிகளை செய்தால் நேர்மறையான ஆற்றல்கள் ஏற்படும். தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்ற நினைவாற்றல் பயிற்சிகள் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்க உதவும். வீட்டில் அமைதியைக் கொண்டுவரும்.
5. வீட்டில் எப்போதும் இருள் நிறைந்திருக்கக் கூடாது. இயற்கை ஒளி நமது மனநிலை மற்றும் ஆற்றல் மட்டங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பகலில் திரைச்சீலைகளைத் திறந்து வைத்து இயற்கையான சூரிய ஒளிபடும் விதமாக வைத்திருந்தால் நேர்மறை ஆற்றல் உருவாகும். வீடும் மனதும் பளிச்சென்றிருக்கும்.
6. வீட்டு சுவர்களில் அழகிய படங்கள், போஸ்டர்களை பொருத்தினால் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டுக்குள் அர்த்தமுள்ள அலங்காரத்தை செய்ய வேண்டும். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் நினைவுகளை நினைவூட்டும் புகைப்படங்கள், கலைப்பொருட்களை நிரப்பி வையுங்கள்.
7. இயற்கைச் சூழல் எந்தவொரு இடத்திலும் குளிர்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். வீட்டுக்குள் வளர்க்கும் சிறிய செடிகளை வைத்தால் இயற்கை ஆற்றல் பெருகும். சிறிய செயற்கை நீரூற்றுகள், நீர்வீழ்ச்சிகளை சாளரங்களில் அமைக்கலாம்.