காலை மற்றும் இரவு உணவுடன் சாப்பிட ஏதுவான சட்னி வேண்டுமா? இதோ 2 சட்னி ரெசிபி இருக்கே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  காலை மற்றும் இரவு உணவுடன் சாப்பிட ஏதுவான சட்னி வேண்டுமா? இதோ 2 சட்னி ரெசிபி இருக்கே!

காலை மற்றும் இரவு உணவுடன் சாப்பிட ஏதுவான சட்னி வேண்டுமா? இதோ 2 சட்னி ரெசிபி இருக்கே!

Suguna Devi P HT Tamil
Published Jun 17, 2025 11:00 AM IST

சிலருக்கு வழக்கமான சட்னி போர் அடித்து போக வாய்ப்புள்ளது. இன்று இட்லி, தோசை மட்டுமில்லாமல் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏதுவாக கொள்ளு சட்னி மற்றும் பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி என இங்கு பார்ப்போம்.

காலை மற்றும் இரவு உணவுடன் சாப்பிட ஏதுவான சட்னி வேண்டுமா? இதோ 2 சட்னி ரெசிபி இருக்கே!
காலை மற்றும் இரவு உணவுடன் சாப்பிட ஏதுவான சட்னி வேண்டுமா? இதோ 2 சட்னி ரெசிபி இருக்கே!

கொள்ளு சட்னி செய்யத் தேவையான பொருட்கள்

கொள்ளு – 1 கப்

வெங்காயம் – 2

தக்காளி – 1

பூண்டு – 6 பல்லு

சீரகம் – 1 டீஸ்பூன்

தனியா – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

புளி - சிறிது

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கொள்ளு, நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், சீரகம், தனியா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த கொள்ளு, தக்காளியுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.

பின்னர் இதனுடன் ஊற வைத்த புளி, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.இப்போது சுவையான கொள்ளு சட்னி தயார். குறிப்பு : சட்னி அரைக்கும் போது கொள்ளு வேக வைத்த நீரை பயன்படுத்தவும். அரைக்கும் போது 5 நறுக்கிய சின்ன வெங்காயத்தை பச்சையாக சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

பொட்டுக்கடலை சட்னி தேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை - 1/2 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

மிளகாய் வத்தல் - 2

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பூண்டுப்பல் - 2

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள் :-

நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை

முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் வெட்டி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், மிளகாய் வத்தல் சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். இப்போது சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.