Heat Days : நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம்! 60 சதவீதம் மக்களை பாதிக்கிறது! ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்!
Heat Days : நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தால் 60 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வு முன்வைக்கிறது.

Heat Days : 59 சதவீத தமிழக மக்கள் 35 டிகிரி செல்சியஸ் வெப்ப பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
அரசின் அறிக்கையில் சொல்வது என்ன?
தமிழக திட்டக்குழு, தமிழக அரசிடம் சமீபத்தில் சமர்பித்த அறிக்கையில், மதுரை, சென்னை, தூத்துக்குடி மாவட்டங்கள், 2003-23 இடைப்பட்ட காலத்தில், அதிக வெப்ப பாதிப்பிற்கு ஆளாகி, பகல் மற்றும் இரவு வெப்ப நிலையில் பெறும் மாறுதல் (வேறுபாடு) இல்லாத சூழல் நிலவுவது குறிப்பிடப்பட்டுள்ளது.
59 சதவீத தமிழக மக்கள் வெப்ப அசவுகர்யம் ஏற்படும் 35 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமான சூழலுக்கு தள்ளப்படுவதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக அதிக வெப்ப பாதிப்பிற்கு மக்கள் இனிவரும் காலங்களில் தள்ளப்பட உள்ள நிலையில், வெப்ப பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.
"Beating the Heat: Tamilnadu Heat Mitigation Strategy" எனும் அறிக்கையில், தமிழக, இரவு வெப்பநிலை அதிகம் இருப்பதால், தனிநபர் ஒருவரின் சுகாதாரத்தையும், நலனையும் பேணிகாப்பது முக்கியமாகிறது என்ற செய்தி பதிவாகியுள்ளது.
மக்களுக்கு தொல்லை தராத, வசதியான வெப்பம் என்பது 25-30 டிகிரி செல்சியஸ்க்குள் இருக்க வேண்டும். ஈரப்பதத்தின் அளவும் 60 சதவீதம் என இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் பல இடங்களில் இந்த வசதியான வெப்பநிலை அதிகரித்து, மக்களின் சுகாதாரத்தையும், வாழ்வாதாரங்களையும் பாதித்து வருகிறது என அறிக்கை தெளிவாக பதிவு செய்கிறது.
இந்த அறிக்கை பல தரப்பு தொடர்புடைய துறைகளிடம் இருந்து தரவுகளை சேகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புவிவெப்பமடைதல்
Heat Action Network என்பதை தொடர்புடைய துறைகளின் உதவியுடன் தமிழகம் முழுதும் ஏற்படுத்தி, 3 முக்கிய பணிகளை கையில் எடுத்து மக்களை பாதுகாக்கும் பணியில் அரசு ஈடுபட திட்டங்கள் உள்ளன.
மக்களின் சுகாதாரத்தையும், நலனையும் மேம்படுத்தத் தேவையான திட்டங்கள்
சமூக-சூழல் மாற்றங்களை நடைமுறைப்படுத்த திட்டங்கள்
திட்டங்களை நிறைவேற்ற நிதி மற்றும் ஆதாரங்களை ஒதுக்கி, நீடித்த திட்டங்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துதல்
தமிழக அரசு, வெப்ப அலை தடுப்புக்குத் தேவையான நடைமுறைத் திட்டங்களை உருவாக்கி, தேவையான கொள்கை முடிவுகளை எடுக்கவும் அறிக்கை உதவும்.
வெப்பத்தை குறைக்க தேவையான முதல்நிலை குளிர்விப்பு முறைகளை உள் மற்றும் வெளி அரங்குகளில் அறிமுகப்படுத்தி மக்கள் வசதியுடன் வாழும் சூழலை உருவாக்கவும் திட்டங்களைத் தீட்ட அறிக்கை உதவிகரமாக இருக்கும்.
இந்தியாவில் 9 சதவீதம் வீடுகளில் மட்டுமே குளிர்விப்பான் (Ac) வசதி உள்ளதென்றும், 2050ல் Acயின் வளர்ச்சி 20 மடங்கு அதிகரிக்கும் எனவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆற்றல் பயன்பாடும், அதன் காரணமாக புவிவெப்பமடைதல் பிரச்னையும் அதிகமாகும் என்பதால், பசுமைப்பரப்புகளை அதிகரிக்கும் திட்டங்கள் நிச்சயம் தேவை என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
Ac பற்றி அதிகம் பேசாமல், உள்ளூர் மரங்களை நட்டு பாதுகாப்பது (அதன் மூலம் வெப்பத்தைக் குறைத்து) குறித்து அதிகம் நாம் பேச வேண்டும்.
வெப்ப அலை
1992-2015 இடைப்பட்ட காலத்தில் வெப்ப அலை காரணமாக 24, 223 இறப்புகள் இந்தியாவில் நிகழ்ந்த பின்னரும், தேசிய அளவில், வெப்ப அலையை பேரிடராகப் பார்த்து, அதைத் தடுக்க திட்டங்களோ அல்லது பார்வையோ இல்லாதிருப்பதில் இருந்து, மத்திய அரசின் அக்கறையின்மையை மக்கள் அறிந்துகொள்ள முடியும்.
சமீபத்திய புயல் ஈரப்பதத்தை அதிகம் எடுத்துக்கொண்டதால், 26.5.24 அன்று சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் 40.6°C என பதிவாகியுள்ளது. இது நுங்கம்பாக்கத்தில் வழக்கத்தை விட 2.6°C அதிகமாகவும், மீனம்பாக்கத்தில் 1.7°C அதிகமாகவும் பதிவாகியுள்ளது.
வறண்ட Westerlies காரணமாக கடல்காற்று வீசுவது தடைப்பட்டுள்ளதால், நுங்கம்பாக்கத்தில் மாலை 5.30க்கு கூட 39.5°C வெப்பம் பதிவாகியுள்ளது.
வசதிபடைத்த நடிகர் ஷாரூக்கானே Heat Strokeகால் பாதிக்கப்படும்போது, சாதாரண மக்கள் வெப்பஅலையின் பாதிப்பிற்கு ஆளாவதை கருத்தில்கொண்டு, புவிவெப்பமடைதல் காரணமாக பெருகிவரும் வெப்ப அலையிலிருந்து மக்களை காக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.

டாபிக்ஸ்