Health Budget : சுகாதார பட்ஜெட்; பயனளிக்குமா புற்றுநோய் டே கேர் சென்டர்கள்? – மருத்துவர் விளக்கம்!
Health Budget : சுகாதார பட்ஜெட் வெளியாகியுள்ள நிலையில் அதற்கான நிதி போதுமானதா மற்றும் அதில் உள்ள திட்டங்கள் பயனிளிக்குமா என்பது குறித்து மருத்துவர் புகழேந்தி கூறியுள்ளார்.

மத்திய சுகாதார பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து மருத்துவர் புகழேந்தி விளக்குகிறார்.
கடந்தாண்டைவிட இந்தாண்டு சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட் அதிகமாகத் தெரிந்தாலும், இது போதுமானதா? என்ற கேள்வி எழுகிறது? சுகாதாரத்துக்கு ஜிடிபியில் 2.5 சதவீதம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படவேண்டும் என்ற விதி உள்ளது. எனினும் உலக சுகாதார நிறுவனம் 5 சதவீதம் என விதித்துள்ளது. ஆனால் குறைந்தபட்சம் 2.5 சதவீதமாவது ஒதுக்கப்படவேண்டும். ஆனால் அந்தளவுக்கு ஒதுக்கப்படவில்லை. கடந்தாண்டைக்காட்டிலும் 9.5 சதவீதம் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், வளர்ந்து வரும் சுகாதார சவால்களுக்கு இது போதுமானதா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.
தமிழகத்தில் கூட தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகம் வருகிறது. அதனால் ஏற்படும் இழப்புக்களும் அதிகரித்துள்ள நிலையில் நாம் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய சூழலில் உள்ளோம். எனவே இவற்றை சரிபடுத்த இந்த பட்ஜெட் போதுமானதா என்றால் அது நிச்சயமாக இல்லை. அது கூடுதலாக ஒதுக்கப்படவேண்டும் என்பது முக்கியமானது.
இதில் குறிப்பான ஒன்றாக நமது எல்லை எதுவாக இருக்கவேண்டும் என்றால், நமது சுகாதாரத்தை பெருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், நோய் தடுப்பிலும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. நோய் தடுப்பைக் காட்டிலும், நோய் வந்தால் அதற்கான சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் டேகேர் சென்டர்கள்
எடுத்துக்காட்டாக புற்றுநோய்க்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும்தான் புற்றுநோய் மையங்கள் உள்ளன. அது அனைத்து இடங்களிலும் கிடையாது. ஒரு சில இடங்களில் மட்டும்தான் உள்ளது. இப்போது புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. புற்றுநோய் டே கேர் சென்டர்கள் என கொண்டுவரப்பட்டுள்ளது. துவக்கத்தில் 200 மையங்கள் உருவாக்கப்படவுள்ளன. இவையனைத்தும் நோய் தடுப்பை நோக்கி அல்ல. நோய் தடுப்பை நோக்கி இல்லாமல் இருப்பது இதன் முக்கிய பாதகமான அம்சமாக உள்ளது.
புற்றுநோய் வந்தவுடன் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவேண்டும். அதாவது நோய் வந்தவுடன் பரிசோதனை மையங்கள், ஆட்கள், உபகரணங்கள், துவக்கத்தில் கண்டறியும் வழிவகைகள், சிகிச்சை மையங்கள் என உருவாக்கப்படவேண்டும். அதற்கான வழிகாட்டிகள் இல்லாமல் இந்த டே கேர் சென்டர்கள் பயனளிக்காது.
சில புற்றுநோய் சிகிச்சை மருந்துகளுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அது நல்லதுதான். ஆனால் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ள அனைத்து மருந்துகளுக்கும் வரியைக் குறைக்கவேண்டும். அப்போதுதான் அது அனைத்து மக்களும் உதவும்.
நோய் தடுப்புக்கு முக்கியத்துவம் வேண்டும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தடுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். இதனால் உட்கட்டமைப்புகள் அதிகம் தேவைப்படாது.
தேசிய சுகாதார திட்டம் என்பது ஆரம்ப சிகிச்சைக்கு அடித்தளமாக உள்ளது. அதற்கு 3.77 சதவீதம்தான் உயர்த்தப்பட்டுள்ளது. அது போதிய அளவு கிடையாது.
மருத்துவ சீட்டுகள் அதிகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது மருத்துவர் அதிகரித்தாலே சுகாதாரம் கிடைத்துவிடுமா? இது அரசு மருத்துக்கல்லூரிகளில் மட்டுமா என்ற சந்தேகம் உள்ளது. புற்றுநோய் பாதுகாப்பு கட்டாயம் அரசு கையில் இருக்கவேண்டும். மாற்று மருத்துவத்துக்கான பல திட்டங்களில் அதன் அளவு, ஒரே அளவில் உள்ளது. இது பல ஆண்டுகளாக அதே அளவில் உள்ளதும் போதியது கிடையாது. ஆராய்ச்சிக்கான தேவை அதிகம் உள்ள நிலையில், அதுவும் அதிகரிக்கப்படவேண்டும்.
பொருளாதார ஆய்வுக் கமிஷனின் அறிக்கை
தேசிய பொருளாதார ஆராய்ச்சி கமிஷனின் அறிக்கைப்படி 350 மில்லியன் பேருக்கு இந்தியாவில் அடிப்படை சுகாதார வசதியின்றி வாழ்கிறார்கள் என குறிப்பிடுகிறது. மருத்துவத்துக்கு தனிநபர் செலவழிக்கும் தொகைதான் அதிகமாக உள்ளது. இந்தியாவில் அது மிகவும் அதிகம் உள்ளது. 50 முதல் 60 சதவீதம் மக்கள் தங்கள் சொந்த காசை செலவழித்துதான் மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய நிலை உள்ளது. பொருளாதார ஆய்வுகளை மேற்கோள் காட்டி சில நிபுணர்கள், கடந்த 5 ஆண்டுகளாக பணியாளர்களின் உண்மை வருமானம் (Real wages) மாற்றம் காணாமல் ஏற்றமின்றி உள்ளது. போதிய வருமானமின்றி மக்கள் சுகாதாரத்தை எவ்வாறு பேணிக்காக்க முடியும். இதுகுறித்தும் அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் குழந்தைகளின் வளர்ச்சி, ரத்த சோகை பாதிப்பு அதிகம் உள்ளது. பல பத்தாண்டுகளாக திட்டங்கள் அமலில் இருந்தும் முன்னேற்றம் வரவில்லை. அதற்கான காரணங்களை கண்டுபிடிக்கவேண்டும். அதுவும் இங்கு முக்கிய பிரச்னையாக உள்ளது.
இவ்வாறு மருத்துவர் புகழேந்தி தெரிவித்தார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்