கமகமக்கும் ஹைதராபாத் பிரியாணி சாப்பிட வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாமே! இதோ அசத்தலான ரெசிபி!
ஹைதராபாத் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஆகும். இங்கு பல விஷயங்கள் பிரபலமாக இருந்து வருகிறது. அதில் ஒன்று தான் அந்த ஊரின் உணவு. இதில் சுவை மிக்க ஹைதராபாத் பிரியாணியை எப்படி செய்வது என இங்கு பார்க்கப்போகிறோம்.

இந்தியாவில் பொதுவான பல பழக்க வழக்கங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் உணவு முறை. மொழி, உடை, பழக்க வழக்கம் என பலவற்றில் வேறுபட்டாலும் பல உணவு முறைகளில் நாம் ஒத்துப் போகிறோம். அதில் முக்கியமான உணவாக பிரியாணி இருந்து வருகிறது. இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மக்களும் பிரியாணி சாப்பிடுவார்கள். இதில் பல வகையான பிரியாணிக்கள் உள்ளன. அப்படி பிரபலமான பிரியாணி தான் ஹைதராபாத் பிரியாணி. இனி இந்த பிரியாணியை சாப்பிட வேண்டும் என்றால் ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். இங்கே அதன் செய்முறையை காண்போம்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ மட்டன்
4 கப் பாஸ்மதி அரிசி
3 பச்சை மிளகாய்
கால் கப் வறுத்த வெங்காயம்
ஒரு கப் தயிர்
ஒரு டேபிள்ஸ்பூன் வற மிளகாய்த்தூள்
ஒரு கைப்பிடி அளவு புதினா
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை
1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 டீஸ்பூன் எண்ணெய்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு நெய்
1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு
1 டேபிள்ஸ்பூன் இளஞ்சூடான பால்
சிறிதளவு குங்கமப்பூ
1 துண்டு பட்டை
3 கிராம்பு
2 பிரியாணி இலை
2 முதல் 4 ஏலக்காய்
பிரியாணி மசாலா தயாரிக்க
அரை டேபிள்ஸ்பூன் மல்லித்தூள்
அரை டேபிள்ஸ்பூன் வற மிளகாய்த்தூள்
1 டீஸ்பூன் காய்ந்த வெந்தயக்கீரை
1 துண்டு பட்டை
3 கிராம்பு
3 பச்சை ஏலக்காய்
2 கறுப்பு ஏலக்காய்
3 பிரியாணி இலை
1 ஜாதிபத்திரி
1 டீஸ்பூன் வறுத்த வெங்காயம்
கால் டீஸ்பூன் மிளகு
அரை டீஸ்பூன் சீரகம்
செய்முறை
முதலில் மசாலாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக பொடிக்கவும். பின்னர் சுத்தம் செய்த மட்டனில், பிரியாணி மசாலா, தயிர், உப்பு, வற மிளகாய்த்தூள், கீறிய பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக கலந்து 1 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும் அல்லது முதல்நாள் இரவே கலந்து வைக்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, தேவையான அளவு உப்பு, அரிசி சேர்த்து அரை வேக்காடாய் பதமாக வடித்து ஆறவைக்கவும். இப்பொழுது பிரஷர் குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் இஞ்சி பூண்டு, புதினா, கொத்தமல்லியை லேசாக வதக்கி ஊறவைத்த மட்டனை சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.
ஒரு பாத்திரத்தில் வேகவைத்த மட்டன் கலவை சாதம் நெய் வறுத்த வெங்காயம் வறுத்த முந்திரி(விரும்பினால்)போட்டு எலுமிச்சை சாறு பாலில் சிறிது குங்கமப்பூ கரைத்து ஊற்றவும். இப்படியாக கலவையை போட்டதும் 10 நிமிடம் தம்மில் போடவும் அல்லது 190°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைக்கவும். இவ்வாறு தம் போட்டு செய்வதால் சுவையான பிரியாணி கிடைக்கும். இதனை உங்களது வீட்டிலேயே செய்து பார்த்து சாப்பிட்டு பாருங்கள்.

டாபிக்ஸ்