இதய, செரிமான ஆரோக்கியத்துக்கு உதவும் புல்லட் காபி! காபியில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இதய, செரிமான ஆரோக்கியத்துக்கு உதவும் புல்லட் காபி! காபியில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இதய, செரிமான ஆரோக்கியத்துக்கு உதவும் புல்லட் காபி! காபியில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 26, 2025 11:15 AM IST

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைக்கவும், உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும் ஒரு சிறந்த பானமாக புல்லட் காபி இருக்கிறது. சூடான காபியின் சிறிது அளவு நெய் கலந்து குடிப்பதே புல்லட் காபி என்று அழைக்கப்படுகிறது. இதிலுள்ள நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

இதய, செரிமான ஆரோக்கியத்துக்கு உதவும் புல்லட் காபி! காபியில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இதய, செரிமான ஆரோக்கியத்துக்கு உதவும் புல்லட் காபி! காபியில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Adobe Stock)

ஊட்டச்சத்து நிபுணர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் 'நெய் காபி' அல்லது 'நெய் டீ' பற்றி பதிவுகளை பகிர்கிறார்கள். இது ஒரு ஆயுர்வேத மருந்து எனவும், குழந்தை பருவத்திலிருந்தே குடித்து வரும் பானம் எனவும் கூறுகிறார்கள்.

உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு வகைகளில் நன்மை தரக்கூடியதாக இருந்து வரும் இந்த எளிய பானம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மாதவிடாய் வலியைக் குறைக்கவும் உதவும் என கூறப்படுகிறது. நெய் காபி ஏன் ஒரு நவநாகரீக பானமாக திகழ்கிறது என்பதன் காரணத்தை பார்க்கலாம்

நெய் காபி என்றால் என்ன?

நெய் காபி, புல்லட் காபி என்று அழைக்கப்படும் இந்த காபி, பிளாக் காபி மற்றும் நெய்யின் கலவையாகும். இது ஒரு கிரீமி, அடர்த்தியான பானம். இது காலையில் குடிக்கப்படுகிறது. நெய் மூலம் காபியில் ஆரோக்கியமான கொழுப்பை சேர்ப்பது, உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது. செறிவுதன்மையை அதிகரிக்கிறது. நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதன் மூலம் குறைந்த கார்ப் மற்றும் ஆயுர்வேத உணவுகளில் பிரபலமானதாக திகழ்கிறது.

காபியில் நெய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் காபியில் நெய் சேர்ப்பதன் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி பார்க்கலாம்

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்

அனைத்து கொழுப்புகளும் நம் ஆரோக்கியத்துக்கு மோசமானவை அல்ல. நெய்யில் ஒமேகா-3, ஒமேகா-6 மற்றும் ஒமேகா-9 போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் கே ஆகியவற்றின் இயற்கையான மூலமாகும். காபியில் காஃபின், கஃபேஸ்டால், காவியோல் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கின்றன.

செரிமானத்தை ஊக்குவிக்கிறது

வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் அமிலத்தன்மை ஏற்படும் என்று கூறப்பட்டாலும், அதிலிருந்து விடுபட நெய்யுடன் கருப்பு காபியை முயற்சிக்கலாம். நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் செரிமானத்துக்கு உதவுகிறது. இது குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. நெய் காபி வயிற்று உப்புசத்தால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறது

நெய்யுடன் கருப்பு காபியைக் கலப்பது இதய ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். நெய் வீக்கத்தைக் குறைத்து கொழுப்பை சமநிலைப்படுத்த உதவுகிறது. காபி இதய நோய் அபாயத்தைக் குறைக்கும், இரத்த அழுத்தத்தை குறைக்கும் மற்றும் கொழுப்பின் அளவை மேம்படுத்தும் என கூறப்படுகிறது

மாதவிடாய் வலிக்கு உதவுகிறது

நெய்யில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளன. இவை மாதவிடாய் பிடிப்புகளின் தீவிரத்தைக் குறைக்கும். பெண்களுக்கு உடல் ஆற்றலை அதிகரிக்கவும் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை ஆதரிக்கவும் ஹார்மோன் சமநிலையை வழங்கவும் செய்கிறது

பசியைக் குறைக்கிறது

காலையில் நெய் காபி குடிப்பது பசியைக் கட்டுப்படுத்தும். ஆரோக்கியமான கொழுப்புகள் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை தரும். எனவே நீங்கள் தேவையற்ற சிற்றுண்டிகளை சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இது ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

ஆற்றலை வழங்குகிறது

காபி உடனடி ஆற்றலைக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நெய்யில் உள்ள கொழுப்புகள் காஃபின் உறிஞ்சுதலை மெதுவாக்குகின்றன. இது உங்களுக்கு நிலையான ஆற்றலை அளிக்கிறது. 'சர்வதேச விளையாட்டு ஊட்டச்சத்து சங்கத்தின் இதழில்' வெளியிடப்பட்ட ஆய்வின்படி, கொழுப்புகள் மற்றும் காஃபின் கலவையால் இந்த நீடித்த ஆற்றல் வெளியீடு ஏற்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது

நெய்யுடன் கருப்பு காபி குடிப்பதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?

நீங்கள் இந்த புல்லட் காபி அல்லது நெய் காபியை தினமும் குடிக்கலாம். ஆனால் அதை அளவை அதிரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெய்யில் நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளன. எனவே அதை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பு, அதிக கொழுப்பு அல்லது அதிக கலோரி நுகர்வுக்கு வழிவகுக்கும்.

இதய நோய் அல்லது அதிக கொழுப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு அதிக கப் காபி குடிப்பது உங்கள் காஃபின் உட்கொள்ளலை அதிகரிக்கும். இது செரிமான அசௌகரியம் அல்லது பிற பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, நெய்யுடன் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் கருப்பு காபி குடிக்கவும்.

வீட்டில் நெய் காபி செய்வது எப்படி?

  • ஒரு பானை எடுத்து, 1 கப் தண்ணீர், 1 தேக்கரண்டி காபி தூள் சேர்க்கவும் (நீங்கள் அதை அடர்த்தியாக விரும்பினால் மேலும் காபி சேர்க்கவும்).
  • அதை மெதுவாக கொதிக்க வைக்கவும்.
  • சூடான காபியில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • வெப்பத்தை அணைத்து, கலக்கும் முன் சிறிது ஆற விடவும்.
  • காபியை ஒரு பிளெண்டரில் ஊற்றவும். அல்லது ஒரு ஹேண்ட் பிளெண்டரைப் பயன்படுத்தவும்.
  • நீங்கள் விரும்பினால் பால் சேர்க்கலாம்.
  • மென்மையாகவும் கிரீமியாகவும் வரும் வரை 15-20 வினாடிகள் கலக்கவும்.
  • ஒரு கோப்பையில் ஊற்றி, சூடாக இருக்கும்போதே குடிக்க வேண்டும். (அதிகமாக கலக்க வேண்டாம். ஏனெனில் அதிகமாக கலக்குவது கொழுப்பைப் பிரிக்கும்.)

நெய் காபி அல்லது புல்லட் காபியை எப்போது குடிக்க வேண்டும்?

சிறந்த முடிவுகளை பெற, காலையில் வெறும் வயிற்றில் நெய் காபியைக் குடிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தொடங்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும், நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. உண்மையில், ஆரஞ்சு சாறு அல்லது தேநீர் போன்ற சர்க்கரை நிறைந்த காலை பானங்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாகும்.

నెయ్యి కాఫీ
నెయ్యి కాఫీ (Adobe Stock)