தலைமுடி பராமரிப்பு: எந்த ரசாயனமும் தேவையில்லை.. இயற்கையாக தலைமுடியை வீட்டில் இருந்தபடியே பளபளபாக்கும் எளிய டிப்ஸ்
பல்வேறு ரசாயனங்களின் பயன்பாடு தலைமுடியை சேதமடைய செய்து, பாதிப்புகளையும் ஏற்படுத்தும். உங்கள் தலைமுடிக்கு இயற்கையான முறையில் பளபளப்பை அளித்து, முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கோடை காலத்தில் தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமல் வறட்சி ஏற்படுவது இயற்கையான விஷயம்தான். தலை முடி வறட்சி காரணமாக முடிகள் சேதமடைவது, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது போன்ற நிலையை தவிர்க்கவும், முடி இயற்கையான பளபளப்பை பெறவும் , சரியான ஊட்டச்சத்து கிடைப்பது மிக முக்கியம்.
புரதம், பயோட்டின், இரும்பு மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தலைமுடி வேர்களை வலுப்படுத்தி இயற்கையான பளபளப்பை அளிக்கிறது. அத்துடன் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வது முடிக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. இதன் மூலம் தலைமுடி வலிமை பெறுவதோடு, நீண்ட காலம் ஆரோக்கியமான பளபளப்பை தக்கவைக்கிறது.
தலைமுடிக்கு தீங்கு ஏற்படுத்தும் ரசாயன பொருள்கள்
இயற்கையான பொருள்களையும் தாண்டி சில தலைமுடி பராமரிப்புக்காக பல்வேறு விதமான கெமிக்கல், சீரம், ஜெல் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஸ்ட்ரைட்னர்கள் மற்றும் ஹேர் ட்ரையர்களை போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவற்றால் விரும்பியவாறு தலைமுடியை மாற்றி அமைத்து கொள்ளலாம் என்றாலும், முடியின் ஆரோக்கியத்துக்கு கெடுதலை விளைவிக்கின்றன. முடியும் வறட்சி அடைந்து பளபளப்பை இழக்கிறது.\
கோடை காலத்தில் அதிகம் வியர்வை ஏற்படுவதால், பலர் அடிக்கடி குளிக்கிறார்கள். அப்போது ஷாம்புக்களும் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு அடிக்கடி ஷாம்பு பயன்படுத்துவது முடியின் பளபளப்பை இழக்கச் செய்கிறது. இதைச் செய்வது முடியிலிருந்து இயற்கையான எண்ணெய்களை நீக்கி உலர்த்துகிறது. குறிப்பாக சிலிகான் மற்றும் ஆல்கஹால் கொண்ட ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவது முடியை மந்தமாகவும் உயிரற்றதாகவும் மாற்றும்.
ஈரமான முடியை கடினமாக சீவுவது, இறுக்கமான பின்னலில் வைப்பது மற்றும் ரப்பர் பேண்டுகளைப் பயன்படுத்துவது முடி உடைவதற்கு வழிவகுக்கும். மிகவும் சூடான நீரில் அடிக்கடி குளிப்பதால் உச்சந்தலை வறண்டு, முடி எளிதில் உடையக்கூடியதாகிவிடும். இது அதன் இயற்கையான பளபளப்பை இழக்கச் செய்கிறது.
உங்கள் முடி வகையைப் புரிந்து கொள்ளாமல் எந்த எண்ணெயையும் பயன்படுத்துவது நல்லதல்ல. அதையும் மீறி செய்வது முடியின் ஆரோக்கியத்தையும் சேதப்படுத்தும். ஹேர் டை மற்றும் ப்ளீச்சை அடிக்கடி பயன்படுத்துவது முடியின் இயற்கையான பளபளப்பை இழக்கச் செய்யும்.
இயற்கையான முறையில் தலை முடிக்கு பளபளப்பைக் கொடுக்கும் சில பேக்குகளை பார்க்கலாம்
எலுமிச்சை சாறு மற்றும் சூரிய ஒளி
எலுமிச்சை சாறு முடியில் உள்ள க்யூட்டிகல்களைத் திறக்கிறது. சூரிய ஒளி மெதுவாக முடியின் நிறத்தை அதிகரிக்கிறது. இதற்கு, முதலில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் நான்கு தேக்கரண்டி தண்ணீரை கலந்து கலந்து, தலைமுடியில் தெளித்து, 30 முதல் 60 நிமிடங்கள் சூரிய ஒளி படும்விதமாக நிற்க வேண்டும். பின்னர் உங்கள் தலைமுடியை சுத்தமாக கழுவி, குளித்த பிறகு கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். உங்கள் தலைமுடி பளபளப்பும், பொலிவும் பெறும்.
மேலும் படிக்க: தலை முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சிக்கு உதவும் தாவரங்கள்
கெமோமில் கோல்டன் க்ளோ பேக்
கெமோமில் டீ உங்கள் தலைமுடிக்கு இயற்கையான நிறத்தை தக்க வைக்க உதவுகிறது . இது வெளிர் பழுப்பு அல்லது பழுப்பு நிற முடி உள்ளவர்களுக்கு மிகவும் நன்றாக வேலை செய்கிறது. முதலில், 3-4 கெமோமில் டீ பைகளை வெந்நீரில் ஊறவைத்து ஒரு தேநீர் தயாரிக்கவும். அது குளிர்ந்த பிறகு, அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு உங்கள் தலைமுடி முழுவதும் தெளிக்கவும். பின்னர், அதை 30-40 நிமிடங்கள் வெயிலில் விடவும். பின்னர், குளித்து, லேசான கண்டிஷனரைப் பயன்படுத்தினால் பலன் பெறலாம்.
தேன் கண்டிஷனர் பேக்
தேனில் உள்ள இயற்கை ஹைட்ரஜன் பெராக்சைடு முடி நிறத்தை மெதுவாக ஒளிரச் செய்ய உதவுகிறது. இதற்காக, ஒரு தேக்கரண்டி தேன், இரண்டு தேக்கரண்டி கண்டிஷனருடன் கலந்து ஒரு தடிமனான பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த கலவையை ஈரமான கூந்தலில் தடவி, ஷவர் கேப்பில் போட்டு, குறைந்தது இரண்டு மணி நேரம் விடவும். இரவில் பயன்படுத்தினால் இரவு முழுவதும் அப்படியே விடுவது நல்லது. பின்னர், உங்கள் தலைமுடியை லேசாக கழுவி, கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.
ஆப்பிள் சீடர் வினிகர் பேக்
ஆப்பிள் சீடர் வினிகர், முடியை சுத்தம் செய்து இயற்கையாகவே பளபளப்பாக்குகிறது. இதற்காக, நீங்கள் இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை 12 தேக்கரண்டி தண்ணீருடன் கலந்து ஒரு கலவையை உருவாக்க வேண்டும். ஷாம்பு செய்த பிறகு, இந்த தண்ணீரை தலைமுடியில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் அதை சுத்தமாக கழுவவும். இது முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.

டாபிக்ஸ்