Piles: மூலநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்-haemorrhoids or piles causes symptoms treatment and prevention tips - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Piles: மூலநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

Piles: மூலநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

Marimuthu M HT Tamil
Jan 21, 2024 06:59 PM IST

மூல நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்களைக் கீழே படித்து அறிந்துகொள்வோம்.

மூலநோய்: காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்
மூலநோய்: காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் (Image by 愚木混株 Cdd20 from Pixabay)

ஆரம்பத்தில், இது வலியற்ற ரத்தப்போக்குக்கு வழிவகுக்கும். இது பின்னர் வலி மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். மூல நோய் ஆசனவாய் பகுதியின் அருகில் அரிப்பு மற்றும் வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

மூல நோயின் வகைப்பாடு

பெங்களூருவில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனை ஜெயநகர் ஹைடெக் ஹெர்னியா மையத்தின் பொது, லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எண்டோஸ்கோப்பிஸ்ட் டாக்டர் ராஜீவ் பிரேம்நாத் நமது ஊடகத்துக்கு மூலநோய் தொடர்பாகப் பேட்டியளித்துள்ளார். அதன் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

மூல நோயானது வலி, அரிப்பு, ரத்தப்போக்கு, சளி வெளியேற்றம் மற்றும் அசௌகரியம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன என்றும்; அவை இந்த அறிகுறிகளின் அடிப்படையில் வெவ்வேறு நிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன என்றும் பகிர்ந்து மருத்துவர் ராஜீவ் பிரேம்நாத் தகவல் பகிர்ந்தார். 

  • முதல் நிலை: இந்த மூல நோய் உட்புற மற்றும் ஆசனவாய்க்கு வெளியே குறிப்பிடத்தக்க வீக்கம் இல்லாமல், வலியற்ற ரத்தப்போக்கை உண்டு செய்கிறது. புரோக்டோஸ்கோப் கருவி மூலம் நோய் அறியலாம்.
  • இரண்டாம் நிலை: இந்த கட்டத்தில், இது ஆசன வாயில் இருந்து வளரத் தொடங்குகிறது. ஆனால் பொதுவாக குடல் இயக்கத்திற்குப் பிறகு தானாகவே பின்வாங்குகிறது.
  • மூன்றாம் நிலை: இந்த நிலையில், இது குடல் இயக்கங்களின்போது வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும். இதனை அறுவை சிகிச்சை மூலம் நீக்காவிட்டால், அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.
  • நான்காவது நிலை: இவை வெளிப்புற மூல நோய் எனப்படுகிறது. இவை எல்லா நேரங்களிலும் ஆசனவாய்க்கு வெளியே இருக்கும். இதனால் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது.
  • ஐந்தாவது நிலை (த்ரோம்போஸ்டு ஹெமோர்ஹாய்டு): இந்த கட்டத்தில், மூல நோய் மிகவும் வேதனை தரக்கூடியதாக மாறும்.

மூல நோய்க்கான காரணங்கள்

டாக்டர் ராஜீவ் பிரேம்நாத், "மூல நோய் பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். பலவீனமான மலக்குடல் திசுக்கள் மற்றும் கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை மூலநோய்க்குக் காரணங்களாகும். இது கர்ப்பிணிகளில் சுமார் 35% பேரை மூல நோய்ப் பாதிக்கிறது.

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூலநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். நாள்பட்ட வயிற்றுப்போக்கு, மலச்சிக்கலின்போது அழுத்தம் கொடுத்து மலம்கழிக்க சிரமப்படுவது, ரத்த நாளங்களில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவற்றின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. 

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது, கனமான பொருட்களைத் தூக்குதல் ஆகியவை மூல நோய் வருவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கக்கூடும். மேலும் அதிக எடை, புகைப்பிடித்தல், மரபியல் கோளாறுகள் கூட மூல நோய் உருவாவதை அதிகரிக்கிறது.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

உட்புற மூல நோய் பெரும்பாலும் வலியற்றது மற்றும் கவனிக்கப்படாமல் போகலாம் என்பதை சுட்டிக்காட்டிய டாக்டர் ராஜீவ் பிரேம்நாத், "அவை மலக்குடல் ரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும். வெளிப்புற மூல நோய் மிகவும் கவனிக்கத்தக்கது. ஆசனவாய் மற்றும் மலக்குடல் ரத்தப்போக்கு ஆகியவற்றுடன் வலி ஏற்படுகிறது. நீண்டகால மூல நோய் வலிமிகுந்ததாக இருக்கும்.

நோயறிதல்: 

உங்கள் நிலையை மதிப்பிடுவதற்கும், மூல நோயின் தீவிரத்தை தீர்மானிப்பதற்கும் மற்றும் சிகிச்சை திட்டத்தை உருவாக்குவதற்கும் ஒரு பொது அறுவை சிகிச்சை நிபுணரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவது நல்லது. கூடுதலாக, மூல நோய் வளர்ச்சிக்கான அடிப்படை காரணங்களை ஆராய சிக்மாய்டோஸ்கோபி அல்லது கொலோனோஸ்கோபி செய்யலாம்’’ எனத் தெரிவித்தார்.

மூலநோயில் இருந்து விடுபட மருத்துவரின் பரிந்துரைகள்:

  • அதிக நார்ச்சத்துள்ள உணவு மற்றும் போதுமான திரவ உணவுகளை உட்கொள்ளல், வாழ்க்கை முறை மாற்றங்கள் நிலை I மற்றும் நிலை II மூல நோய் தீர முதன்மை சிகிச்சைகளாகும்.
  • நிலை I மற்றும் II-க்கு மருத்துவ சிகிச்சை பயனற்றது என்று மருத்துவப் பரிசோதனை முடிவுகள் தெரியப்படுத்தினால், அறுவை சிகிச்சை நடைமுறைகள் பரிந்துரைக்கப்படலாம்.
  • நிலை III மற்றும் IV மூல நோய்க்கு பொதுவாக அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. 
  • நிலை V மூல நோய்க்கு, ஆரம்ப சிகிச்சையில் வீக்கத்தைக் குறைப்பதற்கான மருந்துகள் எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

லேசர் மூல நோய் சிகிச்சை:

டாக்டர் ராஜீவ் பிரேம்நாத் இதுகுறித்து கூறுகையில், "லேசர் சிகிச்சை பாரம்பரிய மூல நோய் அறுவை சிகிச்சையை விட தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது. இது குறைவான சிக்கல்கள் மற்றும் ஆசன வாய்ப்பகுதியின் பாதுகாப்பினை உறுதிசெய்கிறது.

லேசர் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன: CO2 லேசர் அல்லது டையோடு லேசர் பயன்படுத்தப்படுகிறது. 

லேசர் சிகிச்சை ஃபோட்டோஅப்லேஷன் எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் செயல்படுகிறது. அங்கு லேசர் தண்ணீரைக் கடந்து, நீர் மூலக்கூறு பிணைப்பை சீர்குலைக்கிறது. இந்த இடையூறு மூல நோய் திசுக்களின் அளவைக் குறைக்க வழிவகுக்கிறது. 

புகைப்பட ஆவியாதல் என்பது லேசர் சிகிச்சையின் இன்னொரு சிகிச்சையாகும். இதில் லேசர் மூல நோய்ப் பாதிப்பை உறிஞ்சி, 6-8 வாரங்களுக்குள் திசுக்களின் சரிசெய்தலுக்கு வழிவகுக்கிறது. 

இதற்கு வலி நிவாரண மருந்துகளின் பயன்பாடு அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், இந்த அசௌகரியம் வழக்கமான அறுவை சிகிச்சை அணுகுமுறைகளுடன் ஒப்பிடுகையில் எளிமையானது’’ என்றார்.

தடுப்பு முறை மாற்றங்கள்

 "முதலாவதாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்தி, நல்ல செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவு வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது அவசியம். ஒட்டுமொத்த குடல் செயல்பாட்டை பராமரிக்க ஒழுங்காக நீர்ச்சத்துமிக்க பானங்களை அடிக்கடி குடிப்பது முக்கியம். மேலும் நல்ல உடற்பயிற்சி, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

 குடல் இயக்கத்திற்கான ஆரோக்கியமான உணவுப் பழக்கம், மலம் கழிக்கும்போது சிரமப்படும் அபாயத்தைக் குறைக்கும். கடைசியாக, மூல நோய் அல்லது செரிமான ஆரோக்கியம் தொடர்பான சாத்தியமான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பதற்கு வழக்கமான சுகாதார பரிசோதனைகளை திட்டமிடுவது நல்லது’’டாக்டர் ராஜீவ் பிரேம்நாத் அறிவுறுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.