குண்டூர் காரப்பொடி மினி இட்லி; குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை சுண்டி இழுக்கும்! இதோ ரெசிபி!
குண்டூர் காரப்பொடி மினி இட்லி செய்வது எப்படி என்று பாருங்கள்.
இட்லியைக் குறித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவு இட்லி. இலங்கையிலும் இது பிரபலம். அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த மாவை புளிக்கவைத்து இட்லி தயாரிக்கப்படுகிறது. வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து இரண்டும் இட்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை உளுந்தை அப்படியேவும், கருப்பு உளுந்தென்றால் அதன் தோலை கொஞ்சம் நீக்கிவிட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். புளிக்க வைக்கும்போதும் அதில் உள்ள மாவுச்சத்துக்கள் மற்றும் கஞ்சிப்பதம் நீக்கப்படுகிறது. இதனால் உடல் இதை எளிதாக செரித்துவிடுகிறது. இட்லியில் ரவை, ஜவ்வரிசி, சம்ம ராவை, சேமியா ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது. கன்னட மொழியில் வரலாற்று புத்தங்களில் இட்லி வெறும் கருப்பு உளுந்தை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளது.
கருப்பு உளுந்தை மோரில் ஊறவைத்து அரைத்து இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தயிரின் தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இட்லி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் நவீன இட்லி நமக்கு இந்தோனேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் புளிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறை பாராம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் இந்து அரசர்கள் அமர்த்திய சமையல் கலைஞர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம். அங்கிருந்து இந்த உணவு இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் கெட்லி என்ற உணவு இட்லிபோலேவே இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் புளிக்கவைக்கும் செயல்பாடு இயற்கையில் நடக்கும் ஒன்று என்பதால் அது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இங்கு அனைத்து கலாச்சாரங்களிலும் புளிக்க வைக்கும் பழக்கம் உள்ளது.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – ஒரு கப்
வர மிளகாய் – 15 முதல் 20 வரை (உங்கள் காரண அளவுக்கு ஏற்ப எடுத்துக்கொள்வேண்டும்)
கடலைப்பருப்பு – 50 கிராம்
வர மல்லி விதைகள் – 25 கிராம்
சீரகம் – ஒரு ஸ்பூன்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கருவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
வெங்காயம் – 1
செய்முறை
8 மணி நேரம் மட்டும் புளிக்க வைத்த இட்லி மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து மினி இட்லி தட்டில் ஊற்றி, மினி இட்லிகளாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் வரமிளகாயை சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். அதை எடுத்துவிட்டு, கடலைப்பருப்பு, வரமல்லி, கறிவேப்பிலை, சீரகம் மற்றும் புளி சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். வறுத்த பொருட்களின் சூடு ஆறியவுடன், மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும். மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவேண்டும். பின்னர் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ள குண்டூர் காரம் பொடியை சேர்த்து நன்றாகக் கிளறி, மினி இட்லிகளை சேர்த்து பொடி அனைத்து இட்லிகளிலும் படும்படி பிரட்டி எடுத்தால், சூப்பர் சுவையான குண்டூர் காரப்பொடி இட்லி தயார்.
மேலே தேவைப்பட்டால் சிறிது மல்லித்தூவி பரிமாறலாம். இதற்கு தொட்டுக்கொள்ள வேறு எதுவும் தேவையில்லை. இருந்தாலும் தேங்காய்ச் சட்னி அல்லது சாம்பார் சேர்த்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்