Global Warming : அதிகரிக்கும் புவி வெப்பமடைதல் பிரச்னை - கடலோர தாவரங்களுக்கு என்ன ஆனது? – அதிர்ச்சி ஆய்வு!
Global Warming : புவிவெப்பமடைதல் பிரச்னை அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துவரும் வேளையில், கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் கடலோர தாவரங்கள் 12 சதவீம் குறைந்துள்ளது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
2023ம் ஆண்டு தான் இதுவரையில் உள்ள ஆண்டுகளிலே வெப்பம் மிகுந்த ஆண்டாக உள்ளது.
2023, உலக வானிலை மாற்ற நிறுவனத்தின்,"State of the climate in Asia" ஆய்வறிக்கையில்,1960க்குப் பின், ஆசியா கண்டம், உலகின் பிற பகுதிகளைவிட அதிகமாக வெப்பமடைந்து வருகிறது எனும் செய்தி உள்ளது.
மேலும், அதிக கரியமிலவாயு வெளியீட்டின் காரணமாக, இந்தியப் பெருங்கடலின் வெப்பம் 1950-2020 காலத்தில், நூற்றாண்டிற்கு, 1.2°C அதிகரித்திருந்தது, தற்போதைய ஆய்வுகளின்படி, 2100ல் 1.7°C - 3.8°C வரை வெப்பம் உயரும் (தற்போதைய அளவில் கரியமிலவாயுவின் வெளியீடு தொடர்ந்தால்) எனத் தெரியவந்துள்ளது.
கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவிற்குள் உள்ள தாவரங்களை, கடலோர தாவரங்கள் (Coastal Vegetation) என அழைப்பர்.
2013ல் தமிழகத்தில், கடலோர தாவரங்களின் பரப்பு 11,131 சதுர கி.மீ. என இருந்தது, 2018ல் 10,128 சதுர கி.மீ. எனக் குறைந்து, பின்னர், 2023ல் 9,726 சதுர கி.மீ. ஆக மேலும் குறைந்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், அலையாத்திக் காடுகளின் (Mangroves) பரப்பு முறையே, 34.92 சதவீதம்,11.83 சதவீதம் எனக் குறைந்துள்ளது. இப்பகுதிகளில் உள்ள முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளின் பரப்பு குறைந்ததே இதற்கு காரணம்.
பிச்சாவரம் காப்பு காடுகளில், அலையாத்திக் காடுகளின் பரப்பில் பெருமளவு மாற்றம் இல்லை.
மயிலாடுதுறை காட்டூர் அலையாத்திக் காடுகளின் பரப்பு 61.96 சதவீதம் அதிகரித்துள்ளதால், அங்கு மேலும் அலையாத்திக் காடுகளை வளர்க்க முடியும்.
2021, இந்திய வனத்துறை ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டில் 4500 எக்டேர் பரப்பில் அலையாத்திக் காடுகள் உள்ளதெனும் செய்தி இருக்கிறது. தமிழக கடலோரம் உள்ள சிறு,சிறு அலையாத்திக் காடுகளையும் இணைத்துக்கொண்டால், அது 6,473 எக்டேர் என அதிகமாகும்.
2023ல், கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள், 2,437 எக்டேர் பரப்பில், மணல் மேடுகள் (Sand dunes) உள்ளதெனும் தகவல் உள்ளது.
தமிழகத்தில், 5,120 எக்டேர் பரப்பில் அலையாத்திக் காடுகளும், 7,123 எக்டேர் பரப்பில், கடலோர தாவரங்களும், 2,437 எக்டேர் பரப்பில், மணல் மேடுகளும் இருந்து, பேரிடரின்போது அரணாக இருந்து தமிழகத்தைக் காக்கிறது.
சென்னையில், 59 எக்டேர் பரப்பில் மணல் மேடுகள், 24 எக்டேர் பரப்பில் கடலோர தாவரங்கள், 85 எக்டேர் பரப்பில் அலையாத்திக் காடுகள் இருந்தாலும், சென்னைக்கு ஏற்படும் பேரிடரிலிருந்து, அவை காக்க உதவாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
NCCRன் செயற்கைக்கோள் தரவுகளின்படி, தமிழ்நாட்டில், 1,309 எக்டேர் பரப்பில் அலையாத்திக் காடுகள், 24,000 எக்டேர் பரப்பில் கடலோரத் தாவரங்கள், 1,013 எக்டேர் பரப்பில் மணல் மேடுகளை உருவாக்கும் வாய்ப்புள்ளது என்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், 2004 சுனாமி பாதிப்பின்போது, கடலோரம் உள்ள Casuarinas, Borassus மற்றும் அடர்த்தியான பிற தாவரங்கள் சுனாமியின் பாதிப்பை குறைத்தன என ஆய்வறிக்கை கூறுகிறது.
தமிழக கடற்கரையிலும் (Beaches) பெருமளவு மாற்றம் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில், 41 சதவீதம் கடலோரம் மண் அரிப்பு ஏற்படும் (Erosion), 23 சதவீதம் மண் சேரும் பகுதியாக உள்ளது. (Accretion) – 36 சதவீதம் நிலைத்த தன்மையில் (Stable) இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடற்கரை அகலம் (Beach Width), ராமேஸ்வரம் பகுதியில் பெருமளவு குறைந்துள்ளது.
சென்னை மற்றும் திருவள்ளூரில் தலா 2 எக்டேர், காஞ்சிபுரத்தில் 5 எக்டேர், கன்னியாகுமரியில் 22 எக்டேர் பரப்பு கடற்கரை அகலம் குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடலோரங்களில், அலையாத்திக் காடுகள், கடலோர தாவரங்கள், மணல் மேடுகளை காப்பது அல்லது அதிகம் உருவாக்குவது, இயற்கை பேரிடரில் (சுனாமி, வெள்ளம் போன்ற) இருந்து நம்மை காப்பதுடன், கார்பனை உள்வாங்கி புவிவெப்பமடைதல் பிரச்னைகளில் இருந்து மக்களை காக்கவும் உதவும் என்பதால், பத்தாண்டுகளில் 12 சதவீதம் அழிந்த கடலோர தாவரங்களை மீட்டெடுக்கும் பணியை தமிழக அரசு விரைந்து நடைமுறைப்படுத்த முன்வருவது சிறப்பாக இருக்கும்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்