புவி வெப்பமடைதல் பிரச்னை, பல்லுயிர் பெருக்கம், சுகாதாரம் – வழிகாட்டும் உலக நாடுகள்! - நிபுணர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  புவி வெப்பமடைதல் பிரச்னை, பல்லுயிர் பெருக்கம், சுகாதாரம் – வழிகாட்டும் உலக நாடுகள்! - நிபுணர் விளக்கம்!

புவி வெப்பமடைதல் பிரச்னை, பல்லுயிர் பெருக்கம், சுகாதாரம் – வழிகாட்டும் உலக நாடுகள்! - நிபுணர் விளக்கம்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 07, 2025 09:46 AM IST

சிறிய, ஒரே ஒருமுறை செயல்படுத்தும் திட்டங்களை, எடுத்துக்காட்டாக மரம்நடுதலைக் காட்டிலும் மிகச் சிறந்த பலனை இயற்கையோடு இணைந்த திட்டங்கள் கொடுக்கும்.

புவி வெப்பமடைதல் பிரச்னை, பல்லுயிர் பெருக்கம், சுகாதாரம் – வழிகாட்டும் உலக நாடுகள்! - நிபுணர் விளக்கம்!
புவி வெப்பமடைதல் பிரச்னை, பல்லுயிர் பெருக்கம், சுகாதாரம் – வழிகாட்டும் உலக நாடுகள்! - நிபுணர் விளக்கம்!

Discover Cities பத்திரிக்கையில், மே 2025ல் வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில் உள்ள புவிவெப்பமடைதல், பல்லுயிர் பெருக்கம், மக்கள் சுகாதாரம், நகர்புறத் திட்டமிடல் சார்ந்த விஷயங்களை சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் பின்பற்றினால், சிறந்த தீர்வு கிடைக்கும்.

கரோலின் பீட்டர்சன், டன்கன் ரஸ்ஸல், நிக் கிர்சாப் டெய்லர்- Exeter பல்கலைக்கழகம் – UK, ஆனிஜென்சன், ஆன்டர்ஸ் பிராந்த் பீடர்சன் - Aarhus பல்கலைக்கழகம், டென்மார்க் இணைந்து நடத்திய ஆய்வில், Nature Based Solutions-NBS--இயற்கையோடு இணைந்த திட்டங்களை வலியுறுத்தியுள்ளது.

1. அரசியல் ஆதரவு,

2. போதுமான நிதி,

3. மக்கள் பங்களிப்பு இருந்தால், மிகச் சிறந்த பலனை பல்லுயிர் பெருக்கத்தை காப்பதில் கொடுப்பதோடு, நகரங்களில், பருவநிலை மாற்றம், மக்களின் சுகாதாரம், வெப்பத் தணிப்பு, வெள்ளத்திலிருந்து காத்துக் கொள்ளுதல் போன்றவையும் மிகச் சிறப்புற இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. நீடித்த பலனையும் அது கொடுக்கும்.

சிறிய, ஒரே ஒருமுறை செயல்படுத்தும் திட்டங்களை, எடுத்துக்காட்டாக மரம்நடுதலைக் காட்டிலும் மிகச் சிறந்த பலனை இயற்கையோடு இணைந்த திட்டங்கள் கொடுக்கும்.

முறையற்ற நகர்புற வளர்ச்சி இருப்பது, அதன் விளைவாக அதிக சாக்கடைக் கழிவுகளை கையாளுதல், அதிக குப்பைகளை கிடங்கில் கொட்டுதல் (கொடுங்கையூர், பெருங்குடி), குப்பை எரிப்பு, குப்பைகளை சிகிச்சை செய்யாமல், அறிவியல் ரீதியாக கையாளாமல் விடுவது போன்ற அவலங்கள் நிகழும். (சென்னையில் கூட 20 சதவீத கழிவுகள் மட்டுமே அறிவியல் ரீதியாக கையாளபபடுகிறது. எஞ்சிய 80 சதவீத குப்பை கிடங்கில் முறையாகக் கையாளாமலும், சிகிச்சை செய்யாமலும் அப்படியே விடப்படுகிறது)

நகர்ப்புற வளர்ச்சி காரணமாக இயற்கையின் இடங்கள் - நீர்நிலைகள், பசுமைப் பரப்புகள், ஈர நிலங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கிறது. இதனால், பறவைகள், தேனீக்கள், பூச்சிகள், தாவரங்கள், மெல்ல அழிந்து வருவது பல்லுயிர் பெருக்கத்திற்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பூங்காக்கள், தோட்டங்கள் இருந்த நகர்புறத்தில் அவை இல்லாமல் கான்கிரீட் தளங்களின் வளர்ச்சி மற்றும் சாலை விரிவாக்கம், வெப்பத்தீவு விளைவிற்கும், புவிவெப்பமடைதல் கூடுதல் பாதிப்பிற்கும் காரணமாக உள்ளது. இயற்கை நமக்கு சுத்தமான காற்று, நீர், மண், உணவு, ஆனந்தம் போன்றவற்றை அள்ளிக்கொடுத்துள்ளது. இயற்கையோடு இணைந்த திட்டங்கள் மூலம் பள்ளிக்கூடங்களில் உள்ள காலியிடங்களில் உள்ளூர் மரங்கள், தாவரங்கள் வைத்து பசுமைப் பரப்பை அதிகரிக்க முடியும்.

காடுகளை நகர்புறத்தில் உருவாக்குதல் (Rewilding), ஆறுகள், நீர்நிலைகள் அதற்கான இயற்கை பாதையில் செல்ல திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற இயற்கையோடு இணைந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் சிறந்த பலன் கிட்டும்.

பசுமை மேற்கூரை வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் சிறந்த பலனைக் கொடுக்கும்.மேற்கூறப்பட்ட திட்டங்கள் நகரின்,

1. வெப்பத்தை கட்டுப்படுத்துதல்

2. வெள்ள பாதிப்பிலிருந்து காத்தல்

3. மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல்,

4. பல்லுயிர் பெருக்கத்தை உறுதிபடுத்துதல் போன்றவற்றை சிறப்புற செய்யும்.

இதை விட்டுவிட்டு, சில இடங்களில் மரத்தை நடுவது (நடுவது மட்டும் போதுமானதல்ல) முறையாக பராமரிக்காமல் போனால் 0%-50 -80% வரை அவை வளராமல் போகும்) போதுமானதல்ல.

ஆய்விற்கு, பிரான்ஸின் பாரிஸ், டென்மார்க்கின் ஆர்ஹஸ், குரோசியாவின் வெளிகா கோரிக்கா நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

பாரிஸின் பள்ளிகளில் உள்ள காலி இடங்களில் மரங்கள்,

தாவரங்கள் வளர்க்கப்பட்டு பசுமைப்பரப்பு அதிகமாக்கப்பட்டது.

ஆர்ஹஸ் நகரில் காடுகள் நீரோடைகள் புதிதாக உருவாக்கப்பட்டு, அங்கு பறவைகள், பூச்சிகள், பட்டாம் பூச்சிகள் போன்றவை அதிகமாகி பல்லுயிர் பெருக்கமே முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வெளிக்கா கோரிக்கா நகரில் ஆறுகள் நீர்நிலைகள், ஈரநிலங்கள் காக்கப்பட்டதோடு, வீடுகள், கட்டிடங்களின் மேற்கூரை பசுமை மயமாக்கப்பட்டது. இது அரசியல் ஆதரவு. போதுமான நிதி,மக்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம்.

மேலும், நகர்புறத் திட்டமிடல் அதிகாரிகள், பருவநிலை மாற்ற நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், பல்லுயிர்பெருக்க வல்லுநர்கள் போன்றோர் இணைந்து செயல்படுவதும் அவசியம். ஆனால், அப்படி செய்தால், அதன் விளைவோ, நீடித்த சுற்றுச்சூழல் பாதிப்பு, நகரை பேரிடர்களிடமிருந்து காத்தல், போன்ற பணிகள் மிகச் சிறப்பாக நடந்தேறும் என்பதில் துளியளவும் ஐயம் இல்லை.

புவிவெப்பமடைதல், பல்லுயிர் பெருக்கம், நகரப் பாதுகாப்பு, போன்றவைகளுக்கு வெறும் பசுமைச்சாயம் மட்டும் பூசுவது நிச்சயம் போதுமானதல்ல. மாறாக, இயற்கையோடு இணைந்த திட்டங்கள் முழு அளவில் செயல்படுத்தப்பட்டால், அது மிகச்சிறந்த, நீடித்த பலனைக்கொடுக்கும் என்ற அறிவியல் ஆய்வு முடிவுகளை சென்னையிலும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.

சென்னை மேயர் சுற்றுச்சூழல் தினத்தில் சென்னையில் ஒரு லட்சம் உள்ளூர் மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருப்பது போதுமானதல்ல.

மாறாக, அறிவியல் ஆய்வுகளின் படி, பள்ளிக்கூடங்களில் காலியிடங்களில் பசுமைப் பரப்பை அதிகரித்தல், சென்னையில் புதிதாக காடுகளை உருவாக்குதல், ஆறுகள், நீர்நிலைகைள், ஈரநிலங்களை காத்தல் (பரந்தூர் விமான நிலையம் அமைய இருக்கும் இடத்தில், 2,605 ஏக்கர் பரப்பில் ஈரநிலங்கள் உள்ளன) வாய்ப்பிருக்கும் இடத்தில் பசுமை மேற்கூரை அமைத்தல் போன்றவைகளை செய்தால், அது சிறந்த பலனைக் கொடுக்கும் என்பதால் அதை மக்கள் பங்களிப்போடு, இயற்கையோடு இணைந்த திட்டங்கள் மூலம் நிறைவேற்றுவது சிறப்பாக இருக்கும்.

மேலும், எற்கனவே இருக்கும் சூழல் பாதிப்புகளை அதிகப்படுத்தும் கொடுங்கையூரின் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட்டு, அறிவியல் ரீதியான தீர்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும் சிறப்பாக இருக்கும். மக்களும், அரசும் இணைந்து, இயற்கையோடு இணைந்த திட்டங்களை செயல்படுத்துவது தான் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்கும் சிறந்த வழியாகும்.

இயற்கையை காத்தல் அவசியம். அது இருந்தால் பல்லுயிர் பெருக்கம் மெல்ல வளரும். அது வரை அது ஓய்வெடுக்கட்டும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.