Gardening : வீட்டுத்தோட்டத்தில் ஆர்வம் கொண்டவரா? முதலில் இந்த பூச்செடிகள் வளர்த்து அனுபவம் பெறலாம்!
Gardening : வீட்டில் தோட்டம் அமைப்பதில் ஆர்வம் கொண்டவரா? முதலில் இந்த பூச்செடிகள் வளர்த்து அனுபவம் பெற்று பின்னர், சிறந்த தோட்டக்கலை வல்லுனர் ஆகலாம்.
நீங்கள் தோட்டம் அமைக்க துவங்கியுள்ளீர்கள் என்றால், இந்த 10 செடிகள் உங்களுக்கு நல்ல அனுபவ பாடத்தை கற்றுத்தரும். அதை கற்றுக்கொண்டு பின்னர் பெரிய செடிகளை வளர்க்கலாம். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
தோட்டம்
பூக்கள்தான் உங்கள் தோட்டத்துக்கு அழகு சேர்ப்பவை. உங்கள் தோட்டம் முழுவதிலும் மலர்கள் இருந்தால் அது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். மூலிகைச் செடிகள் இருக்கலாம். ஆனால் பூக்களைதான் தோட்டத்துக்கு எழிலைத்தரும். நீங்கள் தோட்டம் அமைக்க துவங்கியிருக்கிறீர்கள் என்றால், அது மிகவும் நல்லது. நீங்கள் என்ன மலர்களை வளர்த்தால் அது உங்களுக்கு தோட்டக்கலையில் அனுபவத்தை அதிகரிக்கும் என்று பாருங்கள்.
சாமந்திப்பூ
சாமந்திப்பூக்களை நீங்கள் உங்கள் தோட்டத்தில் எளிதாக வளர்த்துவிடலாம். பார்ப்பவரை மயக்கும் வண்ணத்தில், கவர்ந்து இழுக்கும். இது தோட்டம் அமைக்க துவங்குபவர்கள், அனுபவம் பெறுவதற்கு ஏற்ற பூச்செடியாகும். பிரகாசமான வண்ணங்களில் இந்தப்பூக்கள் இருக்கும். ஆரஞ்ச், மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணத்தில் இதன் பூக்கள் இருக்கும். இந்த செடிகளை எந்த வகை மண்ணிலும் எளிதாக வளரும் தன்மை கொண்டவை.
பேப்பர் ரோஸ் எனப்படும் காகிதப்பூக்கள்
காகிதபூக்கள், வளர்க்கவும், பராமரிக்கவும் எளிதான செடியாகும். இதை நீங்கள் வீட்டில் பால்கனிகளிலே வளர்த்துவிடலாம். இதன் பூக்களும் மிருதுவானதாக இருக்கும். இது பிங்க், சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல்வேறு வண்ணங்களில் இருக்கும். பார்ப்பவர் கண்களை கவர்ந்து இழுக்கம் வண்ணங்களைக் கொண்டிருக்கும்.
செம்பருத்தி
செம்பருத்தி பூக்களை தொட்டியில் வைத்தும் அல்லது தோட்டத்தில் வைத்தும் எளிதாக வளர்த்துவிடலாம். குறிப்பாக சிவப்பு நிற செம்பருத்தி செடியை வளர்ப்பது எளிது, வெள்ளை, அடுக்கு செம்பருத்தி என பல்வேறு வகை செம்பருத்தி செடிகள் உள்ளன. ரத்தசிவப்பு வண்ண மலர்கள் கொண்ட செம்பருத்தி செடிகளை வளர்ப்பது நல்லது. அதன் மொட்டுகள் மற்றும் பூக்களை உட்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத்தரும்.
மல்லிகை
மல்லிகை, இனிமையான மணத்துக்கும், அதன் வெண்ணிற மலர்களுக்காகவும் மிகவும் விரும்பப்படும் பூச்செடிகளுள் ஒன்றாகும். இதுவும் தோட்டம் அமைக்க துவங்கியுள்ளவர்களுக்கு நல்ல தேர்வு. இதை எளிதாக தொட்டியில் அல்லது தோட்டத்தில் அல்லது தொங்கும் தொட்டிகளில் என எதிர் வேண்டுமானாலும் வளர்த்துவிடலாம்.
நித்ய கல்யாணி
நித்ய கல்யாணி மலர்கள், பர்பிள், பிங்க் மற்றும் வெள்ளை மலர்களைக் கொண்டது. இந்த பூச்செடிகளையும் எளிதாக வளர்த்துவிடலாம். இதன் அழகான மணம் உங்களை கவர்ந்து இழுக்கும். இதை பார்க்கும்போது பார்ப்பவரின் கண்களுக்கு இதமளிக்கும். இதை உங்கள் தோட்டத்தில் கட்டாயம் வளர்க்கவேண்டும். இது மருத்துவ குணங்கள் நிறைந்ததும் ஆகும்.
செண்பகப்பூ
செண்பகப் பூக்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் மலர்ந்து மணப்பரப்பி, மனதைக்கவரும் தன்மைகொண்டவை. இது பார்ப்பவருக்கு இதத்தை தரும். இது சூரியஒளி அதிகம் உள்ள இடத்தில் மலரும் தன்மைகொண்டது. இதற்கு ஓரிரு நாட்கள் வரை தண்ணீர் தேவையில்லை. இது ஒரு வெப்பமண்டல தாவரமாகும்.
ரோஜா
ரோஜாப்பூக்களை எளிதாக தொட்டிகளில் வளர்த்துவிடலாம். பல வண்ணங்களில் ரோஜாக்கள் மலர்ந்து மனம் பரப்பி உங்கள் மனதை கவரும். சிவப்பு வண்ண ரோஜாக்கள் அதிக புகழ்பெற்றவை. தவிர மஞ்சள், வெள்ளை, பிங்க் என பல வண்ணங்களில் ரோஜாக்கள் உள்ளது. இதன் மிருதுவான இதழ்கள் மலர்ந்து விரியும்போது உங்கள் கண்களுக்கு இதமளிக்கும்.
அல்லி
அல்லிச்செடி நீண்ட டிரம்பீட் போன்ற பூக்களை கொண்ட தாவரம் ஆகும். இதை வீடுகளில் வளர்ப்பதும் எளிது. இது பல்வேறு வகை மண்ணிலும் வளரக்கூடியது. இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை.
டேபிள் ரோஸ்
எளிதாக வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று. பல்வேறு வண்ணத்தில் மலர்ந்து பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கும். சிறிய செடி, சிறிய பூக்கள் மனதை மயக்கும். இது வறட்சியைத்தாங்கி வளரக்கூடிய தாவரம் ஆகும். அனைத்து கோடை வெப்பத்தையும் தாங்கும் தன்மைகொண்டது. காலையில் மலர்ந்து மாலையில் சுருங்கும் அழகான பூக்களை கொண்ட இந்தச் செடியை உங்கள் பால்கனிகளிலே அழகுக்காக வளர்க்கலாம்.
இட்லிப்பூக்கள்
இட்லிப்பூக்களை தோட்டம் அமைக்க துவங்குபவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதுவும் பிரகாசமான வண்ண மலர்களால் பார்ப்பவரை கவர்ந்து இழுக்கும் தன்மைகொண்டது. இதை விதைகள் மற்றும் செடிகளை வைத்து வளர்க்கலாம். இதற்கு முழு சூரியவெளிச்சம் தேவை. மண்ணும், ஈரப்பதத்துடன் இருக்கவேண்டும். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்