Foxtail Millet Tomato Rice : சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதற்கு ஏதுவாக தினை அரிசியில் தக்காளி சாதம் செய்யலாம்!
Thinai Tomato Rice : திணையில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உருவாக உதவுகிறது. நார்ச்சத்து பித்தப்பை கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது. குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.

தேவையான பொருட்கள்
தினை அரிசி – அரை கப்
சின்ன வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 3
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
சாம்பார் பொடி - அரை ஸ்பூன்
மிளகுத்தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – கைப்பிடியளவு
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் – ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தினை அரிசியை மூன்று முறை கழுவி ஒரு கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் ஊறவைத்த தினை அரிசியை சேர்த்து வேகவிடவேண்டும்.
அரிசி வேகும்போது நடுவே கிளறி விடவேண்டும். அரிசி மிதமான சூட்டில் 12 நிமிடங்கள் பதமாக குழையாமல் வெந்ததும் வடிகட்டியில் தண்ணீரை முழுவதும் வடித்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு அகலமான தட்டில் வேகவைத்த தினை அரிசியை ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.
தக்காளியை ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரில் வேகவிடவேண்டும். தக்காளி வெந்ததும் தோலை மெதுவாக நீக்கி ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் கறிவேப்பிலை மற்றும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவேண்டும்.
தக்காளி விழுது லேசாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து சாம்பார் பொடி மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.
பின் வேகவைத்து ஆறவைத்த தினை சாதத்தை சேர்த்து மெதுவாக கலந்துகொள்ளவேண்டும். தக்காளி தொக்கு தினை சாதத்தோடு சமமாக கலந்ததும் ஒரு கை பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் சிறிது நெய் சேர்த்து கலந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும்.
நன்றி – விருந்தோம்பல்.
தினையில் உள்ள நன்மைகள் மற்றும் சத்துக்கள்
100 கிராம் திணையில் 331 கலோரிகள் உள்ளது. இதில் புரதச்சத்து 12.3 கிராம், நார்ச்சத்து 8 கிராம், கொழுப்பு 4.3 கிராம், பாஸ்பரஸ் 290 மில்லி கிராம், பொட்டாசியம் 250 மில்லி கிராம், மெக்னீசியம் 81 மில்லி கிராம், வைட்டமின் ஏ 32 மில்லி கிராம், ஃபோலிக் ஆசிட் 15 மில்லி கிராம், சோடியம் 4.6 மில்லி கிராம், நியாசின் 3.2 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.8 மில்லி கிராம், துத்தநாகச்சத்து 2.4 மில்லி கிராம் இருந்தது.
திணையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. குளுக்கோஸை குறைக்கும் தன்மை உள்ளது. நிரிழிவு நோயை குறைக்கும் தன்மை கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்த சர்க்கரை உயர்வதை குறைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது.
பெருங்குடல் புற்றுநோயை தடுக்கிறது. திணையில் உள்ள பூஞ்ஜைக்கு எதிரான தன்மைகள் நமது உடலில் பூஞ்ஜை தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது.
திணையில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உருவாக உதவுகிறது. நார்ச்சத்து பித்தப்பை கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது. குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.

டாபிக்ஸ்