தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Flood What Are The Lessons Of Tamiraparani Flood History

Thamirabarani River : தாமிரபரணி வெள்ள வரலாறு உணர்த்தும் பாடங்கள் என்ன?

Priyadarshini R HT Tamil
Jan 07, 2024 07:30 AM IST

Flood : வடகிழக்கு பருவமழையின் கடந்த 200 ஆண்டு புள்ளிவிவரங்களை ஆராயும்போது, தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய தகவல் இருப்பதை தமிழக அரசு மற்றும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறையும் மறந்துவிட்டது.

Flood : தாமிரபரணி வெள்ள வரலாறு உணர்த்தும் பாடங்கள் என்ன?
Flood : தாமிரபரணி வெள்ள வரலாறு உணர்த்தும் பாடங்கள் என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

1847, ஏப்ரலில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தவிர, 1810, 1827, 1847, 1867, 1869, 1874, 1877, 1880, 1895, 1914, 1923, 1925, 1931, 1992களில் ஏற்பட்ட தாமிரபரணி வெள்ள பாதிப்பு வடகிழக்கு பருவமழையின்போது ஏற்பட்ட பாதிப்புகளே.

1877ம் ஆண்டு HR Pate's Madras District Gazeteers - Tinneveli Volume 1ன் படி அந்த ஆண்டில் திருநெல்வேலியில் 2 முறை வெள்ள பாதிப்பும், ஒருமுறை கடும் வறட்சியும் (Famine-54,000 பேர் உயிரிழந்துள்ளனர்) காலரா பாதிப்பும் (14,400 பேர் உயிரிழந்துள்ளனர்) ஏற்பட்டதால் 1881 மக்கள்தொகை கணக்கீட்டில் இறப்புகளின் காரணமாக பெரும் மாற்றம் ஏற்பட்டது.

1877ல் டிசம்பர் 5ல் பெருமழையின் காரணமாக திருநெல்வேலி பாலத்தில் நீர் 27 அடி உயர்ந்தது. மீண்டும் டிசம்பர் 17ல் பெய்த கனமழையின் காரணமாக முந்தைய டிசம்பர் 5 அளவை விட 15அங்குலம் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது பதிவாகியுள்ளது. (திருநெல்வேலியில் இதுவே மிக அதிகமாக பதிவுசெய்யப்பட்ட வெள்ள பாதிப்பு)

100 ஆண்டுகளுக்கு முன்னரே Pateன் பதிவில், வடகிழக்கு பருவமழையின்போது, தாமிரபரணி பள்ளத்தாக்கு கடும் மழைப்பொழிவை சந்திக்கும் என்பது தெளிவாக உள்ளது.

திருநெல்வேலி கூட்டு மாவட்டத்தில்,

1871- 1880- 670.81 மி.மீ. (சராசரிமழைப்பொழிவு)

1881-1890 -689.86 மி.மீ.

1891-1900- 605.28 மி.மீ.

1901-1910 - 666.45 மி.மீ. மழை, வடகிழக்கு பருவமழையின்போது பெய்துள்ளது.

Ministry of Earth and Science தகவலின்படி, வடகிழக்கு பருவமழை 300 மி.மீ.க்கு கூடுதலாக இருந்தாலே திருநெல்வேலி மாவட்டம் வெள்ள பாதிப்புகளை சந்திக்கும் என்ற செய்தி உள்ளது.

வடகிழக்கு பருவமழை திருநெல்வேலியில் 700 மி.மீக்கு கூடுதலாக இருந்தாலோ, தூத்துக்குடியில் 500 மி.மீக்கு கூடுதலாக இருந்தாலோ, அந்த பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியில் 1914,1923,1925,1931,1992ல் பெருமழை காரணமாக கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக டிசம்பர் மாதத்தில் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.

1914, 2023 வெள்ள பாதிப்புகளில் சில ஒற்றுமைகள் உள்ளன. ஸ்ரீவைகுண்டம் -ஆத்தூர், ஆழ்வார்திருநகரி-திருச்செந்தூர் இடையே உள்ள நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2023ல் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதோடு, மாட்டத்தின் தூரப் பகுதிகள், மையப் பகுதிகளுக்கிடையே உள்ள தகவல் தொடர்பு பெருவாரியாக துண்டிக்கப்பட்டுள்ளது.

1914ல் திருநெல்வேலியில் வடகிழக்கு பருவமழை அதிகபட்சமாக 1,365.5 மி.மீ. என மிக அதிகமாகவும், 2008ல் தூத்துக்குடியில் 1,353.3 மி.மீ. என மிக அதிகமாகவும் மழை பதிவாகியுள்ளது.

நெல்லையில்,1914ல் வடகிழக்கு பருவமழை 2 மடங்கு அதிகமாகவும்,1902,1914,1940ல் தூத்துக்குடியில் 2 மடங்கு அதிகமாகவும் பெய்துள்ளது.

2023ல் தூத்துக்குடியில் டிசம்பர் 18-19ல் ஒரே நாளில் 200 மி.மீ. மழைப்பொழிவும், காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 960 மி.மீ. மழைப்பொழிவும் பதிவாகி பெரும் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1992, 2023களில் திருநெல்வேலி பேருந்து நிலைய வெள்ள பாதிப்பு காட்சிகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருப்பதை புகைப்படங்கள் உறுதிசெய்துள்ளன.

புவிவெப்பமடைதல் காரணமாக வங்கக்கடல், அரபிக்கடல், கன்னியாகுமரி கடல் பகுதிகளின் மேற்பரப்பு வெப்பம் அதிகமானதாலும், 2023ல் எல்நினோ பாதிப்புடன், Positive Indian Ocean Dipole (+IOD) சேர்ந்ததால் (இந்தியக் கடலின் மேற்குப் பகுதியில், கிழக்குப் பகுதியை விட அதிக வெப்பம் இருப்பதால் ஏற்படும் வானிலை மாற்றம்) திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்தமிழகத்தில் இதற்கு முன்னர் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பின்போது Positive IODன் தாக்கம் இருந்துள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

புவிவெப்பமடைதல் காரணமாக அதிதீவிர வானிலை மாற்றங்கள் (Extreme Rains) தவிர்க்க முடியாத நிகழ்வாக இன்றைய சூழலில் மாறியுள்ளது.

அணைகள் 20ம் நூற்றாண்டில் வெள்ள பாதிப்பை குறைத்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தின் தற்போதைய உள்கட்டமைப்பு தீவிர மழைப்பொழிவை தாங்கும் சக்தியற்றவையாக உள்ளது. தென் தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

எனவே, உடனடித் தேவை என்பது அரசு பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தும்போது தொலைதூரப் பார்வையுடனும், வரலாற்று வெள்ள பாதிப்பு புள்ளிவிவரங்களை மனதில் கொண்டும், திட்டங்களை வகுத்து, அதை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை உடனே மேற்கொண்டால் மட்டுமே வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை காக்க முடியும்.

தமிழக அரசு மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் உரிய பாடங்களை இனியாவது கற்றுக்கொள்ளுமா? வரலாற்றுப் புள்ளிவிவரங்களை கணக்கில்கொண்டு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமா? என மருத்துவர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்