Flaxseed Idly Podi : இந்த விதைகளை வைத்து இட்லி பொடி செய்ங்க! எக்ஸ்ட்ரா 2 இட்லி மட்டும் உள்ளே போகல; ஆரோக்கியமும்தான்!
Flaxseed Idly Podi : ப்ளாக்ஸ் சீடில் அதிகளவில் உள்ள தியாமைன் மற்றும் வைட்டமின் பி ஆகியவை வளர்சிமை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. செல்களை இயங்கவும் வைக்கின்றன.

தேவையான பொருட்கள்
Flax seed அல்லது ஆளி விதைகள் – ஒரு கப்
கருப்பு முழு உளுந்து – அரை கப்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மல்லிவிதைகள் – ஒரு ஸ்பூன்
கருப்பு எள் – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 5
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
பூண்டு – 10
பெருங்காயம் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – கால் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஆளி விதைகளை ஒரு கடாயில் சேர்த்த நன்றாக வெடித்து வரும் வரை வறுத்து எடுத்து ஒரு அகலமான ப்ளேட்டில் வைத்து ஆறவிடவேண்டும்.
அடுத்து கருப்பு உளுந்தை வறுக்க வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் வெள்ளை உளுந்தையும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் கருப்பு உளுந்து வறுபட்டுவிட்டதா என்பதை அறியமுடியும்.
வெள்ளை உளுந்தில் சிவந்து வருவது தெரியும். அந்த நேரத்தில் மிளகு, சீரகம், மல்லி விதைகள், கருப்பு எள் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இவற்றையும் எடுத்து ஆளி விதையுடன் சேர்த்து ஆறவைக்கவேண்டும்.
வறுக்கும்போது அடுப்பு குறைவான தீயில்தான் இருக்க வேண்டும். அதிகம் வைத்தால் கருகிவிடும். பொறுமையாக நன்றாக வறுத்து எடுத்தால்தான் பொடி கருகிய வாசம் இல்லாமல் நன்றாக இருக்கும்.
அடுத்து கடாயில் எண்ணெய் சேர்த்து மிளகாயை வறுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் கறிவேப்பிலையை சேர்த்து வறுக்க வேண்டும். இரண்டும் மொறுமொறுவென வரும் பதத்தில் அதனுடன் பூண்டை சேர்த்து வறுக்க வேண்டும். கடைசியில் கல்உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்த்து உடனே இறக்க வேண்டும்.
வறுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து ஆறவிடவேண்டும். ஆறியபின், அனைத்தையும் ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான பதம் கொரகொரப்பாகவோ அல்லது நைசாகவோ எப்படி வேண்டுமானாலும் அரைத்து எடுத்துக்கொள்ளலாம்.
இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்க வேண்டும். இதை இட்லி, தோசைக்கும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம். சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம். சுவை மட்டுமின்றி, ஆரோக்கியமும் நிறைந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆளிவிதையின் நன்மைகள்
ஒரு ஸ்பூன் ஆளி விதையில் 2 கிராம் கார்போஹைட்ரேட்கள், 3 கிராம் கொழுப்பு, 2 கிராம் நார்ச்சத்துக்கள், 1.3 கிராம் புரதம், 10 சதவீதம் தியாமைன், 9 சதவீதம் காப்பர், 8 சதவீதம் மாங்கனீஸ், 7 சதவீம் மெக்னீசியம், 4 சதவீதம் பாஸ்பரஸ், 3 சதவீதம் செலினியம், 3 சதவீதம் சிங்க், 2 சதவீதம் வைட்டமின் பி6, இரும்பு மற்றும் ஃபோலேட் ஆகியவை உள்ளன.
ப்ளாக்ஸ் சீடில் அதிகளவில் உள்ள தியாமைன் மற்றும் வைட்டமின் பி ஆகியவை வளர்சிமை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. செல்களை இயங்கவும் வைக்கின்றன.
இது காப்பர் நிறைந்தது. அது மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் இரும்பு வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.
இதில் அதிகளவில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பை அமைக்கிறது. நார்ச்சத்துக்கள் நிறைந்தது.
கொழுப்பு குறைந்தது. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். ரத்த சர்க்கரை அளவை நிலையாக்க உதவுகிறது. உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
ஆளி விதைகளை பயன்படுத்துவதும் எளிது. இதை ஸ்மூத்திகளில் தூவி சாப்பிடலாம். சாலட்களிலும் சேர்த்து உட்கொள்ளலாம். பருப்பில் பொடித்த ஆளி விதைகளை சேர்த்து சாப்பிடலாம். யோகர்டுடன் கலந்து உட்கொள்ளலாம்.
பிஸ்கட்கள், பிரட்களில் கலந்தும் சாப்பிடலாம். முட்டையுடனும் எடுத்துக்கொள்ளலாம். கட்லட், வடைகளில் சேர்த்தும் சாப்பிடலாம். இதுபோல் பொடியாக செய்தும் சாப்பிட சுவையுடன், ஆரோக்கியமும் கிடைக்கும்.

டாபிக்ஸ்