Flax Seeds Idli Podi: ஆளி விதை இட்லி பொடி.. வித்தியாசமான டேஸ்டில் அசத்தலாக இருக்கும்.. ஒரு முறை டிரை பண்ணுங்க!
ஆளிவிதையில் வித்தியாசமாக இட்லி பொடி செய்து சாப்பிடலாம். இதன் ருசி அருமையாக இருக்கும். உடலுக்கும் மிகவும் நல்லது. காரம் குறைத்து செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

ஆளிவிதை உடலுக்கு மிகவும் நல்லது. சமீபகாலமாக உடல் எடை பராமரிப்பில் ஆளி விதையை பலரும் விரும்பி எடுத்து கொள்கின்றனர். அந்த ஆளிவிதையில் வித்தியாசமாக இட்லி பொடி செய்து சாப்பிடலாம். இதன் ருசி அருமையாக இருக்கும். உடலுக்கும் மிகவும் நல்லது. காரம் குறைத்து செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்
தேவையான பொருட்கள்
ஆளிவிதை - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
மிளகாய் வத்தல் - 10
பூண்டு - 50 கிராம்
பெருங்காயம் - 1 ஸ்பூன்
புளி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கைபிடி
செய்முறை
ஒரு கடாயை அடுப்பில் சூடாக்கி அதில் ஒரு கப் ஆளி விதையை சேர்த்து வறுக்க வேண்டும். ஆளி விதை வறுக்கும் போது பொரிய ஆரம்பிக்கும். பின்னர் அதை வேறு ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிட வேண்டும் அதே கடாயில் கால் கப் உளுந்தம் பருப்பை சேர்த்து வறுக்க வேண்டும். உளுந்து சிவந்து வாசம் வர ஆரம்பிக்கும் போது அதையும் ஆளி விதையுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.
10 வர மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 50 கிராம் முதல் 75 கிராம் வரை பூண்டு பற்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்பூன் சீரகத்தையும் தனியாக வறுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு கடாய் சூட்டில் ஒரு கருவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும்.
வறுத்த பொருடகள் நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜார்ருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த பொடியை ஆற விட்டு ஒரு காற்று புகாத பாட்டிலில் இந்த பொடி இட்லி தோசை உடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அதை சூடான சாதத்துடனும் சேர்த்து சாப்பிட ருசி அருமையாக இருக்கும்.
சுவை மட்டுமல்ல நம் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
ஆளி விதையின் நன்மைகள்
செரிமானத்தை மேம்படுத்துகிறது
ஆளி விதைகளை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த விதைகளில் நல்ல நார்ச்சத்து உள்ளது. இது தவிர, இந்த விதைகளை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், அஜீரணம், வயிற்று வாயு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.
புற்றுநோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும்
ஆளி விதைகள் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஈஸ்ட்ரோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த விதை மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பிற வகையான புற்றுநோய்களைத் தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
ஆளி விதைகள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். கூடுதலாக, இது தோல் மற்றும் முடிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மூளையைத் தூண்டுகிறது
ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை மூளையை அதிகரிக்க உதவுகின்றன.
