HT Tamil Book SPL: ‘எளிய நடை, மிதக்கும் நகைச்சுவை’- தமிழில் சிறுகதைக்காக சாகித்ய அகாடமி வென்ற முதல் எழுத்தாளரின் நூல்!
'அபார ஞாபகம்' கதையில் வரும் பிரதான கதாபாத்திரம், என்னதான் வாரிசுகளுடன் மோதல் போக்கைக் கொண்டிருந்தாலும், மனித மனம் குறிப்பாக தந்தையின் மனம் அவர்களுக்குத்தான் தனக்குப் பிறகு அனைத்து சொத்துகளும் சேர வேண்டும் என கருதுவதை நகைச்சுவையுடன் கலந்து எழுதியிருக்கிறார்.

'ராஜா வந்திருக்கிறார்'. இதுவொரு சிறுகதையின் தலைப்பு. தமிழில் சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதி ஒரு சிறுகதையின் தலைப்பு தான் இந்த 'ராஜா வந்திருக்கிறார்'. இதுவே இந்நூலின் தலைப்புமாக அமைந்திருக்கிறது. இந்நூலில் இவர் எழுதிய 18 சிறுகதைகள் உள்ளன. அதில் 'ராஜா வந்திருக்கிறார்' எனும் சிறந்த சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.
சில சிறுகதைகளை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். ஆனால், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தால் 'ஆஹா' என்ன இவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கிறார் என எண்ணம் தோன்றும்.
'ரச விகாரம்', 'கல்யாணகிருஷ்ணன்', 'குமாரபுரம் ஸ்டேஷன்', 'அன்பளிப்பு' உள்ளிட்ட கதைகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன.
'திருவொற்றியூர் வல்லி' என்ற கதையில் கம்பரையும் ஒரு கதாபாத்திரமாக சித்திரித்து அவர் வாழ்ந்த காலத்தில் கதையை அமைத்து இருக்கிறார் எழுத்தாளர் அழகிரிசாமி. 'ராஜா வந்திருக்கிறார்' கதை தலைப்புக்கு நியாயம் சேர்ப்பது போல அமைந்திருக்கிறது. அந்தக் கதையில் ஏழை, பணக்கார பாகுபாடு, முதலாளித்துவம் ஆகியவற்றை அலசியிருக்கிறார்.
'முகக்களை' கதையில் அழகு இல்லாத பெண்ணை 'அழகி' என பொய் கூறி, திருமணம் முடிக்கும் கணவன் படும்பாட்டை நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார்.
'அபார ஞாபகம்' கதையில் வரும் பிரதான கதாபாத்திரம், என்னதான் வாரிசுகளுடன் மோதல் போக்கைக் கொண்டிருந்தாலும், மனித மனம் குறிப்பாக தந்தையின் மனம் அவர்களுக்குத்தான் தனக்குப் பிறகு அனைத்து சொத்துகளும் சேர வேண்டும் என கருதுவதை நகைச்சுவையுடன் கலந்து எழுதியிருக்கிறார்.
யார் இந்த கு.அழகிரிசாமி?
கோவில்பட்டிக்கு அருகிலுள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமி. எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பால்ய நண்பர். எஸ்.எஸ்.எல்.சி முடித்து ஆசிரியராகவும் பின்னர் பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராகவும் பணியாற்றினார். பின்னர் பத்திரிகையாளராகி தமிழ் மணி, சக்தி மற்றும் பிரசண்ட விகடன் போன்ற தமிழ் இதழ்களில் எழுதினார். 1953 ஆம் ஆண்டு, தமிழ் நேசனில் வேலை செய்ய மலேசியா சென்றார். 1955 ஆம் ஆண்டு சீதாலட்சுமி என்பவரை மணந்தார்.
1967 ஆம் ஆண்டில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அவரது 'கவிச்சக்கரவர்த்தி' நாடகத்திற்கு பரிசு வழங்கியது. அன்பளிப்பு என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்கு மரணத்திற்குப் பின் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
சிறுகதைக்காக பிரதானமாக அறியப்படும் இவர், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகியவற்றையும் படைத்துள்ளார்.
கு.அழகிரிசாமி குறித்து எழுத்தாளர் சுந்தர ராமசாமி
‘அழகிரிசாமி, கு.ப.ரா.வின் வலிமையான வாரிசு. மனித இயல்பைப் புதுமைப்பித்தனைப் போல் ஒரு சிடுக்காகக் காணாமல் அமைப்பின்மீது அதிகக் குறைகளைக் கண்டவர். ஆட்டிக் குலைக்கும் வாழ்விலும் மனித ஜீவன்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மேன்மைகள் இவரைப் புல்லரிக்கச் செய்கின்றன. கு.ப.ரா.வைப் போல் எளிமையான சாயல்களும், மென்மையான குரலும் மிகுந்த சிறுகதைப் பிரக்ஞையும் கொண்டவர்’ என இவரைப் பற்றி பிரபல எழுத்தாளர் சுந்த ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'ராஜா வந்திருக்கிறார்' நூலின் விலை ரூ.340. இந்நூல் பதிப்பு சிறப்பாக வந்துள்ளது. அதிகம் எழுத்துப்பிழை என்பது இல்லை. மொத்தம் 270 பக்கங்கள் கொண்ட நூல் இது. சிறுகதையை படைக்க விரும்புபவர்களும், சிறுகதைகளைப் படிக்க விரும்புபவர்களும் இந்நூலை கட்டாயம் வாசிக்க வேண்டும்!

டாபிக்ஸ்