Pregnancy Tips: கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ
கோடைகாலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கர்ப்பிணிகளுக்கு நீர்சத்து குறைபாடு இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளும், நீரிழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நாளுக்கான நாள் வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. கோடை காலம் இன்னும் உச்சத்தை எட்டிராத நிலையிலே வெயிலின் தாக்கமானது அதிமாகவே உள்ளது. சுட்டெரிக்கும் வெப்பத்தால் அனைத்து வயதினரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக கோடை காலத்தில் அதிக பாதிப்புகளை சந்திக்ககூடியவர்களாக கர்ப்பிணிப் பெண்கள் உள்ளார்கள். இரண்டு உயிர்களை சுமக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கோடை காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பெங்களூரில் உள்ள அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் மூத்த ஆலோசகர் மகப்பேறு இயல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் மீனாட்சி காமத் இந்துஸ்தான் டைம்ஸ் லைஃப்ஸ்டைலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கர்ப்பிணி பெண்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் நீரிழப்புக்கான அறிகுறிகள் பற்றியும், அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய ஊட்டச்சத்து பரிந்துரைகளையும் வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க: கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உலர் பழங்கள் லிஸ்ட்
கர்ப்ப காலத்தில் வழக்கமான உடல் வலி, எடை அதிகரிப்பு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உடல் மாற்றங்களை கர்ப்பிணி தாய்மார்கள் எதிர்கொள்கிறார்கள். வெப்பமான வானிலை மற்றும் மோசமான ஊட்டச்சத்து போன்றவை உடல் தேவைகளை நிர்வகிப்பதில் அவர்களை கடினமாக்குகிறது. வியர்வை காரணமாக திரவ இழப்பு மேலும் நீரிழப்பு மற்றும் ஆற்றல் இழப்புடன் தொடர்புடைய அபாயங்களும் அதிகரிக்கின்றன. எனவே, கோடையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சரியான நீர் உட்கொள்ளல் மற்றும் சீரான உணவைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்று டாக்டர் மீனாட்டி காமத் கூறியுள்ளார்.
தொடர்ந்து, "கர்ப்ப காலத்தில் நீரேற்றத்தை பராமரிப்பது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. நீரிழப்பு குறைப்பிரசவம், குறைந்த அம்னோடிக் திரவம் மற்றும் குறைந்த பிறப்பு எடைக்கு வழிவகுக்கும். தினமும் 8 முதல் 12 கப் (64 முதல் 96 அவுன்ஸ்) தண்ணீர் குடிப்பது உடல் வெப்பநிலையை பராமரிக்கவும் உறுதிப்படுத்தவும் உதவுகிறது" எனவும் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் நீரிழப்பு அறிகுறிகள்
கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நீரிழப்பு தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும், இதனால் நீரேற்றத்தை தீவிரமாக பின்பற்றுவது மிகவும் முக்கியம். கர்ப்பிணிப் பெண்களில் நீர்ச்சத்து குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகள்
● வறண்ட வாய் அல்லது தாகம்
● வழக்கத்தை விட குறைவாக சிறுநீர் கழித்தல் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல்
● சோர்வு அல்லது தலைச்சுற்றல்
● தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி
● வறண்ட, சிவந்த தோல்
● மலச்சிக்கல் அல்லது மலம் கழிப்பதில் சிரமம்
● பிடிப்புகள் அல்லது தசைப்பிடிப்பு
● வீங்கிய கணுக்கால் அல்லது பாதங்கள் (இது பெரும்பாலும் கர்ப்பமாக இருப்பது அல்லது நீரிழப்பு காரணமாக வீங்கியிருப்பதால் ஏற்படுகிறது)
உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள சிறிய அளவில் உணவுகளை அடிக்கடி உட்கொள்வதன் மூலம், ஆற்றல் மட்டங்களை பராமரிக்கவும், அதிக வெப்பத்தை தடுக்கவும் செய்யலாம்.
வெள்ளரிகள், தர்பூசணிகள் மற்றும் ஆரஞ்சுகள் நீரேற்றம் மற்றும் நீர்ச்சத்து நிறைந்தவை. அவை வைட்டமின்களால் நிரம்பியுள்ளன. இவை எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானத்தை ஆதரிக்கின்றன.
தேங்காய் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது, ஏனெனில் இது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கவும் தசைப்பிடிப்பைத் தடுக்கவும் உதவுகிறது.
பசலைக் கீரை என்பது ஊட்டச்சத்து நிறைந்த பச்சை நிற தவாரமாக உள்ளது. இதில் ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது கருவின் வளர்ச்சி மற்றும் இரத்த சோகை தடுப்புக்கு மிகவும் முக்கியமானது.
சோடா/சாறுக்கு பதிலாகவும், தேவையற்ற சர்க்கரை உட்கொள்ளல் மற்றும் ஆற்றல் வீழ்ச்சியை தவிர்க்கவும் தண்ணீர், மூலிகை தேநீர் அல்லது தேங்காய் நீர் ஆகியவற்றைக் கொண்டு நீரேற்றமாக இருங்கள்.
எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பது முக்கியம் என்றாலும், அதிகப்படியான உப்பைக் கவனத்தில் கொள்ளுங்கள். அதிகப்படியான சோடியம் உடலில் வீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.
ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்திருக்கும் அவகோடா பழம், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்றவற்றை சேர்ப்பது வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஆதரிக்கும். கோடை வெப்பத்தின் போது கர்ப்பிணி பெண்களுக்கு ஆற்றலை வழங்கும்.
குறிப்பு: இந்தக் கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இவை பொது அறிவு மற்றும் இணையத்தில் காணப்படும் தகவல்கள், ஆய்வுகள் மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. இந்த தகவல் முற்றிலும் உண்மை என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கூறவில்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கு தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்
