Electoral Bonds : தேர்தல் பத்திரங்களை வாங்கிய மருந்து நிறுவனங்கள் – மருந்துகளின் தரம் – ஓர் அலசல்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Electoral Bonds : தேர்தல் பத்திரங்களை வாங்கிய மருந்து நிறுவனங்கள் – மருந்துகளின் தரம் – ஓர் அலசல்!

Electoral Bonds : தேர்தல் பத்திரங்களை வாங்கிய மருந்து நிறுவனங்கள் – மருந்துகளின் தரம் – ஓர் அலசல்!

Priyadarshini R HT Tamil
Mar 21, 2024 05:58 AM IST

Electoral Bonds : மத்திய அரசு, அந்த சோதனையில், விதிமுறைகளை மீறிய செயல்பாடுகளில் Micro Labs நிறுவனம் ஈடுபட்டு, வணிக ரீதியாக Dolo-650 மருந்தை ஊக்குவிக்க மருத்துவர்களுக்கு 1,000 கோடி ரூபாய் இலவசங்களை அள்ளித்தெளித்துள்ளது ஆதாரங்களுடன் தெரியவந்தது.

Electoral Bonds : தேர்தல் பத்திரங்களை வாங்கிய மருந்து நிறுவனங்கள் – மருந்துகளின் தரம் – ஓர் அலசல்!
Electoral Bonds : தேர்தல் பத்திரங்களை வாங்கிய மருந்து நிறுவனங்கள் – மருந்துகளின் தரம் – ஓர் அலசல்!

அதிகளவில், தேர்தல் பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு (குறிப்பாக ஆளும் கட்சிக்கு) கொடுத்த முக்கிய மருந்து குழுமங்களில் பல, சட்ட விதிகளை பின்பற்றாமல் போனதால், அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறைகளின் கண்காணிப்பில் கடந்த 5 ஆண்டுகளில் இருந்து வந்துள்ளன என்பது முக்கிய செய்தியாகும்.

மருந்துக் குழுமங்களில் பல, சட்ட விதிமுறை மீறல்களுக்காக நடவடிக்கைகள் அவற்றின் மீது தொடங்கப்பட்ட நிலையில், நடவடிக்கைகள் தொடராமல் இருக்க, தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொடுத்துள்ளதாலும், அரசும் பின்னர் அந்த மருந்துக் குழுமங்களின் மீது, விதிமீறல்களுக்காக நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்ததிலிருந்து அரசு என்பது மருந்துகளின் தரம் மற்றும் மக்கள் நலன் மீது அக்கறை செலுத்தாமல், மருந்து வணிக நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதிலிருந்து, அரசு அல்லது அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் மருந்து நிறுவனங்களின் நலன்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது தெளிவாகிறது.

ஜூலை 6, 2022 அன்று வருமான வரித்துறையினர் பெங்களூருவை மையமாகக்கொண்டு, காய்ச்சலுக்கான Dolo-650 மாத்திரையை உற்பத்தி செய்யும், (Dolo-500 விலைக் கட்டுப்பாட்டிலும், Dolo-650 கட்டுப்பாட்டில் இல்லாமலும் உள்ளது) 40க்கும் மேற்பட்ட Micro Labs அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டது.

Micro Labs உரிமையாளர் இல்லத்திலும் பின்னர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய அரசு, அந்த சோதனையில், விதிமுறைகளை மீறிய செயல்பாடுகளில் Micro Labs நிறுவனம் ஈடுபட்டு, வணிக ரீதியாக Dolo-650 மருந்தை ஊக்குவிக்க மருத்துவர்களுக்கு 1,000 கோடி ரூபாய் இலவசங்களை அள்ளித்தெளித்துள்ளது ஆதாரங்களுடன் தெரியவந்தது.

உடனே, மருந்து விலையை தீர்மானிக்கும், அரசின் NPPA அமைப்பு, Indian Pharmaceutical Alliance (IPA) என்ற நிறுவனத்தை, இதுகுறித்து விசாரித்து அறிக்கை சம்ர்பிக்க உத்தரவிட்டது.

செப்டம்பர், 2022ல் IPA நிறுவனம், ஓராண்டில் ஒரே ஒரு மருந்து விற்பனைக்கு Micro Labs நிறுவனம்,1,000 கோடி செலவழித்தது எனும் கணக்கு சரியானதல்ல என அறிக்கை சமர்ப்பித்தது.

ஒரு மாதம் கழித்து Micro Labs நிறுவனம் 6 கோடிக்கான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. நவம்பர் 15, 2022ல் மேலும் 3 கோடிக்கான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அக்டோபர் 9, 2023ல் மேலும் 7 கோடிக்கான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. மொத்தம் அவை 16 கோடி அந்த பத்திரங்கள், முக்கியமாக ஆளுங்கட்சிக்கு போயுள்ளது.

அக்டோபர் 6, 2021ல் 6 மாநிலங்களில் Hetero Pharmaceuticals Groupஐ, வருமான வரித்துறையினர் சோதனையிட்டபோது, கணக்கில் வராத 550 கோடி இருந்ததையும், அதில் 142 கோடியை பணமாகவும், வருமான வரித்துறை கைப்பற்றியது.

டிசம்பர் 2021ல், விசாகப்பட்டினத்தை சேர்ந்த கிராமத்தினர் மேற்சொன்ன Hetero Drugs Ltd மீது, முறையான அனுமதியின்றி, 4 கி.மீ. தொலைவிற்கு சட்டவிரோதமாக குழாய் பதித்ததை எதிர்த்து அரசிடம் மனுதாக்கல் செய்தனர்.

ஏப்ரல் 2022ல், Hetero Drugs Ltd, Hetero Labs Ltd, தலா 20 கோடிக்கான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

Hetero Groupன் உரிமையாளரான பந்தி பார்த்தசாரதி ரெட்டி, Hazelo Lab, Hindys Labலும் முதலீடுகளை செய்துள்ளார்.

மேற்சொன்ன 2 நிறுவனங்களும், ஜூலை 6, 2022ல், தலா 2.5 கோடிக்கு ரூபாய் மதிப்பு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. மேலும், ஏப்ரல் 12, 2023ல் 2 நிறுவனங்களும் தலா ரூ.10 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. ஜூலை 12, 2023ல் Hindys Lab மட்டும் மேலும் ரூ.5 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

அவை அனைத்தும் ஆளுங்கட்சிக்கு (முக்கியமாக) சென்றுள்ளன.

பிப்ரவரி 2021ல், வருமான வரித்துறையினர், MSN Pharma Groupஐ சோதனை செய்ததில், கணக்கில் வராத 400 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஏப்ரல் 2022ல், அந்த நிறுவனம் 20 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியும், பின்னர் நவம்பர், 2023ல் மேற்படி, 6 கோடிக்கான தேர்தல் பத்திரங்களையும் வாங்கியுள்ளது.

அவையும் (முக்கியமாக) ஆளுங்கட்சியான BJPக்கு சென்றுள்ளது.

அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) நிறுவனம், இந்தியாவில் Intas, Lupin, Natco மருந்து குழுமங்களில், இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்தின் தரம் விதிகளை பின்பற்றி சரியாக இல்லை என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியது.

அக்டோபர் 10, 2022ல் Intas நிறுவனம் ரூ.20 கோடிக்கான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. டிசம்பர், 2022ல் அமெரிக்க FDA நிறுவனம், Intasன் அகமதாபாத் மருந்து ஆலையில், மருந்து தரக்கட்டுப்பாடு விஷயத்தில் நிறைய பிரச்னைகள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

2022ன் இறுதியில் FDA, இந்தியாவிலுள்ள Lupin மருந்து குழுமத்திற்கு சொந்தமான இந்திய இடங்கள் சிலவற்றில் ஆய்வு மேற்கொண்டதில், மருந்தின் தரம் குறைப்பாடுகளுடன் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து ஜனவரி 25, 2023ல் Lupin நிறுவனம் ரூ.18 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி, அவை முக்கியமாக ஆளுங்கட்சிக்கு சென்றுள்ளன.

ஆகஸ்ட் 5-9, 2019ல் FDA, ஹைதராபாத் அருகிலுள்ள Natco மருந்து நிறுவனத்தை ஆய்வு செய்து, 6 குறிப்புகளை (குறைப்பாடுகளை) பதிவு செய்தது. Natco நிறுவனமும் 2 வாரத்திற்குள் தேவையான சீர்செய்யும் நடவடிக்கைகள் எடுப்பதாக பதிலளித்தது.

அக்டோபர் 9-18, 2023ல் FDA, ரெங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள மற்றுமொரு Natco நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டதில், தூய்மையற்ற மருந்து தயாரிக்கும் உபகரணத்தை கண்டறிந்ததாக அறிக்கை வெளியிட்டது.

FDAன் முதல் ஆய்விற்குப் பின், அக்டோபர் 5, 2019ல், ரூ.25 லட்சத்திற்கான தேர்தல் பத்திரங்களை Natco நிறுவனம் வாங்கியும், பின்னர் அக்டோபர்-நவம்பர் 2023ல், ரூ.32 கோடிக்கான தேர்தல் பத்திரங்களை வாங்கியும், அப்பத்திரங்கள் முக்கியமாக ஆளுங்கட்சியை சென்றடைந்துள்ளது.

நவம்பர் 11, 2022ல் Mankind Pharma ரூ.24 கோடிக்கான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

பங்குச் சந்தையில் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்ட அம்மருந்து நிறுவனத்தில், சில தினங்கள் கழித்து வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பிற்காக, சோதனை மேற்கொண்டனர்.

அந்நிறுவன தேர்தல் பத்திரங்களும் முக்கியமாக ஆளுங்கட்சிக்கு சென்றுள்ளது.

மேற்கூறப்பட்ட விசயங்களில் இருந்து அரசுக்கு, மருந்தின் தரம் மற்றும் மக்கள் நலன் குறித்து அக்கறையில்லை என்பதும், முக்கிய அரசியல் கட்சிகள் கார்பரேட் மருந்து நிறுவனங்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வருவதும் தெளிவாகிறது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து மருந்துகளின் தரத்தையும் பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வுசெய்து, தரத்தை உறுதிபடுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.