Easy Biriyani Tips : பிரியாணியின் மணம் நீண்ட நேரம் இருக்க வேண்டுமா? அப்ப இந்த டிப்ஸ்லாம் முயற்சி செய்ங்க!
Easy Biriyani Tips : சுவையான வெஜ் பிரியாணியை குக்கரில் ஈசியாக செய்துவிடலாம். ஆனால், அதில் சேர்க்கப்படும் பொருட்களைப் பொருத்துதான் அதன் சுவை இருக்கும். எனவே பிரியாணி செய்வதற்கு சில குறிப்புகளை பின்பற்றினால் நல்லது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி – ஒரு கப்
தண்ணீர் – ஒன்னே முக்கால் கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கேரட் – கால் கப் (அரை வட்டங்களாக நறுக்கியது)
பீன்ஸ் – கால் கப் (நீளமாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 சிறியது
பச்சை பட்டாணி – கால் கப்
சோயா உருண்டைகள் – 10
புதினா – கைப்பிடியளவு
கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு
மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
மல்லித்தூள் – அரை ஸ்பூன்
பிரியாணி மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
கெட்டியான தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
பிரிஞ்சி இலை – 2
ஏலக்காய் – 3
ஸ்டார் சோம்பு – 1
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
சீரக சம்பா அரிசியை 3 முறை நன்றாக கழுவி 20 முதல் 30 தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும். சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிட்டு, நன்றாக பிழிந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, நட்சத்திர சோம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவேண்டும்.
பின் கீறிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து தொடர்ந்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
இஞ்சி-பூண்டு சேர்த்தபின் அது பாத்திரத்தில் ஒட்டும் அதனால் கையை எடுக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
இஞ்சி-பூண்டு விழுது வதங்கியதும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து வதக்கவேண்டும். பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.
தக்காளி நன்றாக குழைய துவங்கியவுடன், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து பிரட்டி நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி மற்றும் பிழிந்த சோயா உருண்டைகளை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
காய்கறிகள் சிறிது வதங்கியதும், கெட்டித்தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும். இப்போது ஊறவைத்த சீரக சம்பா அரிசியை தண்ணீரை முழுவதும் வடிகட்டி காய்கறிகளோடு சேர்ந்து கிளறவேண்டும்.
அவை எல்லாம் ஒன்றாக சேர்த்து வந்ததும் ஒன்னே முக்கால் கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும். அதில் ஒரு ஸ்பூன் பிரியாணி மசாலா தூள் சேர்த்து கலந்து கடைசியாக எலுமிச்சை சாறை சேர்த்து குக்கரை மூடிவைத்து மிகக் குறைவான சூட்டில் சரியாக 12 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவேண்டும்.
பத்து நிமிடங்களுக்கு பின் குக்கரை திறந்து ஓரங்களிலிருந்து மெதுவாக கிளறி பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும். பிரியாணியை எப்போதும் செய்த பாத்திரத்திலே வைக்கக்கூடாது.
எந்த உணவையும் செய்த பாத்திரத்திலே வைத்தால் அதன் சுவை மாறும். எனவே அதை வேறு பாத்திரத்துக்கு ஆறியவுடன் மாற்றிவிடவேண்டும்.
ஒரு வேளை 12 நிமிடத்திற்குள் குக்கரில் விசில் வந்துவிட்டால் ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவேண்டும். விருப்பப்பட்டால் கடைசியில் சிறிது நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்புகள்
காய்கறிகள் நறுக்குவது, இஞ்சி-பூண்டு விழுது அரைப்பது, அரிசி ஊறவைப்பது போன்ற எல்லா வேலைகளையும் தயார் செய்துவிட்டு சமைக்க ஆரம்பித்தால் சரியாக 20 நிமிடத்தில் இந்த வெஜ் பிரியாணி தயார் செய்திடலாம்.
பிரியாணிக்கு மஞ்சள்தூள் சேர்க்கக்கூடாது, பிரியாணிக்கு மிக முக்கியமானது இஞ்சி-பூண்டு விழுது. பூண்டு பற்களின் தோலை முழுவதும் உரிக்காமல் சேர்த்தால் பிரியாணி மணமாக இருக்கும். திருமண விருந்துகளில் செய்யும் பிரியாணியில் இஞ்சி மற்றும் பூண்டை தனித்தனியாக அரைத்து சேர்ப்பார்கள்.
அப்படி செய்யும்போது பிரியாணி நீண்ட நேரம் மணமாக இருக்கும். வெஜ் பிரியாணி என்றால் பூண்டு அதிகம் சேர்க்க வேண்டும். நான் வெஜ் பிரியாணி என்றால் இஞ்சி அதிகம் சேர்க்க வேண்டும். இஞ்சி-பூண்டு விழுதை மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக சேர்ப்பதைவிட, உரலில் தட்டி சேர்த்தால் இன்னும் பிரியாணியின் சுவையையும், மணத்தையும் அது அதிகரிக்கச் செய்யும்.
இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை அரைத்து நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளக்கூடாது. கொஞ்சம் மட்டுமே அரைத்து ஒரு வாரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அதன் மணமும், சுவையும் தக்கவைக்கப்படும் அல்லது தேவைப்படும்போது ஃபிரஷ்ஷாக அரைத்துக்கொள்வது நல்லது.
ஃபிரஷ்ஷாக தயார் செய்யும்போது தேவைக்கு ஏற்ப அதில் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம் என்பது அவ்வப்போது செய்துகொள்வதில் உள்ள நன்மை. இது செஃப் தாமுவின் பிரியாணி குறிப்புகள்.
நன்றி – விருந்தோம்பல்.