Drinking Water : தாகத்தின்போது மடமடவென குடிப்பது மட்டும் போதாது; தண்ணீரை எப்போது பருகுவது உடலுக்கு நல்லது?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Drinking Water : தாகத்தின்போது மடமடவென குடிப்பது மட்டும் போதாது; தண்ணீரை எப்போது பருகுவது உடலுக்கு நல்லது?

Drinking Water : தாகத்தின்போது மடமடவென குடிப்பது மட்டும் போதாது; தண்ணீரை எப்போது பருகுவது உடலுக்கு நல்லது?

Priyadarshini R HT Tamil
Mar 09, 2024 04:16 PM IST

உங்கள் உடலுக்கு போதிய நீர்ச்சத்து கிடைப்பதற்கு, தண்ணீர் அதிகம் தேவை. எப்போது தண்ணீரை பருகினால் உங்கள் உடலுக்கு நன்மை தரும் என்பதை பாருங்கள்.

Drinking Water : தாகத்தின்போது மடமடவென குடிப்பது மட்டும் போதாது; தண்ணீரை எப்போது பருகுவது உடலுக்கு நல்லது?
Drinking Water : தாகத்தின்போது மடமடவென குடிப்பது மட்டும் போதாது; தண்ணீரை எப்போது பருகுவது உடலுக்கு நல்லது?

நாம் நமது உடலை போதிய நீர்ச்சத்துடன் பராமரித்தால்தான், அது நாள் முழுவதும் நாம் நன்றாக இயங்க உதவுகிறது. குறிப்பிட்ட சில நேரங்களில் நாம் பருகும் தண்ணீர் நமது உடலுக்கு தேவையான நன்மைகளை கொடுக்கிறது. அது எப்போது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தண்ணீரை பருகுவதற்கு சரியான நேரம்

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில்

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குளிர்ந்த நீரை பருகுவது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இரவு முழுவதும் நாம் எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. 

உடலுக்கு தேவையான வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. உடலின் செயல்பாடுகளை புத்துயிர் பெறச்செய்கிறது. எச்சரிக்கை உணர்வு, சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவே காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது மிகவும் நல்லது.

சாப்பிடுவதற்கு முன்

சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக தண்ணீர் பருகவேண்டும். அது உங்கள் வயிற்றை சாப்பிட்டதற்குப்பின் செரிமானம் செய்ய தயார்படுத்துகிறது. மேலும் அதிக உணவு உட்கொள்வதையும் தடுக்கிறது. வயிறு நிறைந்த உணர்வு இருப்பதால் நாம் குறைவான அளவு உணவு உட்கொள்கிறோம். சாப்பிடும்போது சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.

உணவுக்கு இடையில்

சாப்பிடும்போது கட்டாயம் அதிக தண்ணீர் பருகக்கூடாது. ஆனால் சிறிது மட்டும் பருகலாம். அது நீர்ச்சத்து அளவை அதிகரிக்கிறது. மேலும் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. செரிமானத்துக்கு உதவுகிறது. 

உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. ஊட்டச்சத்துக்களை செல்களுக்கு அனுப்ப உதவுகிறது. வெறும் தண்ணீராகவும் பருகலாம் அல்லது வெந்தயம், சீரகம் ஊறிய தண்ணீரும் பருகலாம் அல்லது சிட்டரஸ் பழங்கள், துளசி, ஓமவல்லி போன்ற மூலிகைகளை ஊறவைத்த தண்ணீரும் பருகலாம்.

உடற்பயிற்சிகளின்போது

உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படாமல் தடுப்பதற்கு தண்ணீர் பருகவேண்டும். தசை வலிகள் ஏற்படாமல் தடுக்கும். உடற்பயிற்சியின்போது அதிகம் தண்ணீர் பருகக்கூடாது. 

ஆனால் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அது உடற்பயிற்சியால் உடல் இழக்கும் தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட்களை கொடுப்பதற்கு உதவுகிறது. பயிற்சிகளுக்கு பின்னர் நீர்ச்சத்துக்களை சேகரிக்கவும் உதவுகிறது. தசைகளை சரிசெய்யவும் உதவுகிறது.

காலைக்கு இடையிலும், மதியத்துக்கு இடையில்

காலை வேளை முடிந்த இடைவேளையிலும், மதிய வேளை முடிந்த இடைவேளையிலும் தண்ணீர் பருகுவது நல்லது. அது உங்கள் உடலை நீர்ச்சத்துடன் இருக்க வைக்க உதவுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் தண்ணீர் பருகும்போது அது உங்கள் உடல் வேலை மற்றும் வியர்வையால் இழக்கும் தண்ணீரை ஈடுகட்ட உதவுகிறது.

படுக்கச் செல்லும் முன்

இரவு உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீரை கட்டாயம் பருகவேண்டும். அது இரவில் உங்கள் உடல் நீர்ச்சத்தை இழக்காமல் இருக்க உதவுகிறது. இரவு முழுவதும் உடலின் கழிவுநீக்க வேலைகளுக்கு உதவி நச்சுக்களை வெளியேற்றுகிறது. ஆனால் இரவு உறங்கச்செல்லும்முன் அதிகளவு தண்ணீர் பருகக்கூடாது. அது உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வை ஏற்படுத்தி, உறக்கத்தை கலைக்கும்.

இதை தவிர தாகம் ஏற்படும்போது

உடலில் தண்ணீர் சத்து குறையும்போது உடல் தாகத்தின் மூலம் நமக்கும் அதை தெரிவிக்கிறது. எனவே தாகம் ஏற்படும்போது போதிய அளவு தண்ணீரை கட்டாயம் பருகவேண்டும். அப்போதுதான் உங்கள் உடல் நீர்ச்சத்தை இழக்காது. எனவே தாகத்தின்போது தண்ணீர் பருகுவதை மட்டும் தவிர்த்துவிடாதீர்கள்.

எவ்வளவு தண்ணீர் பருகவேண்டும்?

சுத்தமான, காய்ச்சி நன்றாக வடிகட்டிய, மாசு, தூசி இல்லாத தண்ணீரை குறைந்தபட்சம் ஒரு நாளில் 8 முதல் 10 டம்ளர் பருகவேண்டும். அதாவது கிட்டத்தட்ட 3 லிட்டர் தண்ணீரை ஒரு நாளைக்கு பருகுவது அவசியம். ஒவ்வொருவரின் தேவை மற்றும் வேலையின் அளவு, வானிலை மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கான தேவையைப்பொறுத்து பருகும் நீரின் அளவை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.