இட்லி மாவு இல்லையா? எதுக்கு கவலை? உடனே செய்யலாம் ஓட்ஸ் இட்லி! சத்தான பிரேக்பாஸ்ட் ரெசிபி!
காலையில் அனைவரும் சாப்பிடும் பிரதான உணவாக இட்லி இருந்து வருகிறது. சில சமயங்களில் இட்லி மாவு இல்லாமல் போகலாம். அது போன்ற சமயங்களில் வெளியே மாவு வாங்காமல் நாமே எளிமையாக மாவு செய்யலாம். சத்தான ஓட்ஸ் வைத்து சுவையான இட்லி செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

தமிழ்நாட்டில் பெரும்பாலானவரின் வீட்டில் காலை உணவாக இருப்பது இட்லி தான். இட்லி என்றால் அனைவருக்கும் மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவாகவும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அதிக ஹோட்டல்களில் இட்லியை காலை உணவாக இருந்து வருகிறது. இட்லி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சாப்பிடக்கூடிய உணவாகவும் இருக்கிறது. இத்தகைய இட்லியை செய்வதற்கு நாம் முந்தைய நாள் இரவே அரிசியை ஊறவைத்து மாவை அரைத்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் மாவு நன்கு புளித்து இட்லி சிறப்பாக வரும். சில சமயங்களில் நமக்கு இருக்கும் வேலைப்பளு காரணமாக இட்லி மாவு அரைக்காமல் இருப்போம்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் வெளியில் கடைகளில் விற்கும் இட்லி மாவினை சிலர் வாங்கி சமைப்பார்கள். ஆனால் கடைகளில் விற்கப்படும் எல்லா இட்லி மாவும் சுத்தமான மற்றும் சரியான முறையில் அரைக்கப்பட்டு இருக்காமல் இருக்கலாம் . இதனை தவிர்க்க நாம் வீட்டில் உள்ள மாவினை பயன்படுத்துவதே சிறப்பான வழியாகும். ஆனால் மாவினை அரைக்காமல் இருக்கும் பட்சத்தில் எளிமையாக உடனடியாக செய்யக்கூடிய இட்லிகள் உள்ளன. அதுதான் சத்தான ஓட்ஸை வைத்து சுவையான இட்லி செய்ய முடியும். இதனை செய்வதும் மிகவும் எளிமை தான். உடனடியாக செய்யக்கூடிய இந்த ஓட்ஸ் இட்லி செய்முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருள்கள்
ஒரு கப் சம்பா கோதுமை ரவை
அரை கப் ஓட்ஸ்
தேவையான அளவு உப்பு
கால் கப் புளித்த தயிர்
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
அரை டீஸ்பூன் கடலை பருப்பு
அரை டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
2 பச்சை மிளகாய்
ஒரு சிட்டிகை பெருங்காயம்
தேவையான அளவு எண்ணெய்
10 முதல் 15 முந்திரிப் பருப்பு
தாளிக்க
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
செய்முறை
முதலில் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.இப்பொழுது பொடித்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு கப் கோதுமை ரவை, புளித்த தயிர் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு, சிறிது தண்ணீரும் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கரைத்த மாவுடன் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும்.
நன்றாக ஊறிய பிறகு இட்லி தட்டில் மாவை ஊற்றி முந்திரியை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான ஓட்ஸ் டயட் இட்லி தயார். இதை தேங்காய் மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். நீங்களும் இதனை உங்களது வீட்டுகளில் முயற்சி செய்து பாருங்கள்.

டாபிக்ஸ்