'சிறுதானியங்களை சமைக்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க’: மருத்துவர் அருண் கார்த்திக் பேட்டி
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  'சிறுதானியங்களை சமைக்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க’: மருத்துவர் அருண் கார்த்திக் பேட்டி

'சிறுதானியங்களை சமைக்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க’: மருத்துவர் அருண் கார்த்திக் பேட்டி

Marimuthu M HT Tamil Published Mar 15, 2025 02:30 PM IST
Marimuthu M HT Tamil
Published Mar 15, 2025 02:30 PM IST

சிறுதானியங்களை சமைக்கும்போது எவ்வாறு அதனைப் பின்பற்ற வேண்டும் என மருத்துவர் அருண் கார்த்திக் பேட்டிளித்துள்ளார்.

'சிறுதானியங்களை சமைக்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க’: மருத்துவர் அருண் கார்த்திக் பேட்டி
'சிறுதானியங்களை சமைக்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க’: மருத்துவர் அருண் கார்த்திக் பேட்டி

சிறுதானியங்களை எப்படி உண்ணவேண்டும் என்பது பற்றி மருத்துவர் அருண் கார்த்திக், அவரது யூடியூபில் பிப்ரவரி 17, 2023-ல் கூறியிருப்பதாவது, ‘’நெல் முதலில் உமியுடன் வருகிறது. அதற்குள் இருப்பது தான் அரிசி. அது மூன்று படிநிலைகளாக உள்ளது. முதலில் இருப்பது பிரான் (Bran). அடுத்து இருப்பது எண்டோஸ்பெர்ம். அடுத்து இருப்பது ஜெர்ம்.

அது மாதிரி தான், சிறுதானியங்கள் என்று சொல்லக்கூடிய தினை, வரகு, சாமை, குதிரை வாலியிலும் மூன்று நிலைகள் உள்ளன. இதில் பிரச்னை என்னவென்றால், பழுப்பு அரிசி என்று சொல்லக்கூடிய கைக்குத்தல் அரிசியில் முதலில் இருக்கக் கூடிய முதல் படியை மட்டும் நீக்கிவிட்டு, அடுத்து இரண்டு நிலைகளோடு வருவது தான் கைக்குத்தல் அரிசி விற்பனைக்கு வருகிறது.

அதேபோல் தான் சிறுதானியங்களிலும் வருகிறது. பிரான் என்று சொல்லக்கூடிய பகுதியில் தான் ஃபேட்டி ஆசிட்ஸ், மினரல்ஸ், நியூட்ரி ஆசிட்ஸும் இருக்கிறது.

ஒரு ஆய்வின்படி, மேல் இருக்கும் பிரான் உரிக்கப்பட்டு, உள்ளிருக்கும் கெர்னலுடன் தான் சிறுதானியங்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இதனை உண்டால் அரிசியில் இருக்கும் சர்க்கரையைவிட அதிகம். கெர்னல் என்பது விதை. மேல் இருக்கும் பிரானுடன் தின்றால் தான், சர்க்கரை குறையும். ஆனால், சந்தைப்படுத்தும்போது மேல் இருக்கும் பிரானை நீக்கிவிட்டால் அது அதிகநாட்கள் தாங்கும் என்பதால், இதைச் செய்கின்றனர். எனவே, வாங்கும்போது முழுதானியமாக வாங்கினால் தான், சிறுதானியமும் பிரயோஜனம்.

’சிறுதானியங்களை முடிந்தளவு நேரில் சென்று வாங்குங்கள்': மருத்துவர்

முடிந்தளவு, விளைவிக்கும் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் நேரில் வாங்கிக்கொள்ளலாம். ஆர்கானிக் கடைகளுக்குச் சென்று வாங்கலாம். இதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், ரொம்ப வெளிர் நிறத்தில் இருந்தால் அது பாலீஷ் செய்யப்பட்ட அரிசி என்று அர்த்தம்.

அப்படி வாங்கப்பட்ட சிறுதானியங்களை, ஆறு மணி முதல் 7 மணிவரை நீரில் ஊறவைத்து சமைத்தால் நமக்கு இன்னும் சிறுதானியங்கள் பயன்கொடுக்கும்.

இரத்த சர்க்கரை இருக்கிறது என்று அறிந்தபின், கொஞ்சம் கொஞ்சமாக சிறுதானிய உணவுகளுக்குப் பழக்கப்படுங்கள். மூன்று வேளையும் எடுத்த எடுப்பில் சிறுதானிய உணவுகளை உண்ணாதீர்கள். மதிய நேரத்தில் முதலில் உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், கூழாக எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால், கூழாக செய்யும்போது, நன்மைதரும் பாக்டீரியாக்கள் அதில் இருக்கும். வெயில் காலத்துக்கும் அது ஏற்றது.

'சத்துமாவுக் கஞ்சியாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது’: மருத்துவர்

சிறுதானியத்தை மிக்ஸ் செய்வதில் தவறு செய்துவிடுகின்றனர். சத்து மாவில் எந்தவொரு பொருளும் முழுதாக இல்லாமல் போய்விடும். எனவே, எதைச் சாப்பிட்டாலும் சத்துமாவுக் கஞ்சியாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

இதில் ஒவ்வொன்றுக்கும் ஜீரண நேரம் மாறுபடும். எனவே, சிறுதானிய சத்துமாவை எடுக்கும்போது, ஜீரண நேரம் வித்தியாசப்படுத்தும்.

ஒரே நாளில் மூன்று வெவ்வேறு சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டாம். ஒரு நாளைக்கு ஒரு சிறுதானியம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரே நாளில் மூன்று வித சிறுதானியங்களை உண்ணாதீர்கள்.

மிக முக்கியமாக, சுவீட்ஸ் எல்லாம் சிறுதானியத்தில் விற்பனைக்கு இருக்கும். ஸ்நாக்ஸ் எல்லாம் சிறுதானியத்தில் விற்பனைக்கு இருக்கும். நமக்கு என்னதோணும் இதையெல்லாம் சாப்பிட்டால் நல்லது என்று, அது முழுதாக அதன் நற்பண்புகளைத் தராது. அதற்கு, பேசாமல், சாதாரண முறுக்குகளையே சாப்பிட்டுவிடலாம்.

திரும்பவும் சொல்கிறேன். முழு தானியங்களாக சிறுதானியத்தை வாங்க வேண்டும்; பாலீஷ் செய்த சிறுதானியங்களை வாங்கக் கூடாது. அடுத்து, முதல்நாளில் சிறுதானியங்களை ஊறவைத்துவிட்டு மறுநாள் உண்பது நல்லது. அப்படி சிறுதானியங்களுக்கு உடலைப் பழக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளுங்கள். சிறுதானியங்களை மிக்ஸ் செய்து கஞ்சிபோலோ, உருண்டைபோலோ சாப்பிடக்கூடாது. கடைசியாக சிறுதானிய நொறுக்குத்தீனிகளை முற்றிலும் தவிருங்கள்'' என்று மருத்துவர் அருண் கார்த்திக் கூறுகிறார்.

நன்றி: டாக்டர் அருண் கார்த்திக் யூடியூப் சேனல்

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.