இட்லி பஞ்சு போல வர வேண்மா? எதுவுமே சேர்க்கத் தேவையில்லை; ஆனால் எப்படி சாத்தியம்? இதோ பாருங்கள்!
பந்துபோல் மாவை எடுத்து ஊற்றி வேகவைத்தால் பஞ்சுபோல் இட்லி வரும். எப்படி என்று பாருங்கள்.
இட்லியைக் குறித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவு இட்லி. இலங்கையிலும் இது பிரபலம். அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த மாவை புளிக்கவைத்து இட்லி தயாரிக்கப்படுகிறது. வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து இரண்டும் இட்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை உளுந்தை அப்படியேவும், கருப்பு உளுந்தென்றால் அதன் தோலை கொஞ்சம் நீக்கிவிட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். புளிக்க வைக்கும்போதும் அதில் உள்ள மாவுச்சத்துக்கள் மற்றும் கஞ்சிப்பதம் நீக்கப்படுகிறது. இதனால் உடல் இதை எளிதாக செரித்துவிடுகிறது. இட்லியில் ரவை, ஜவ்வரிசி, சம்ம ராவை, சேமியா ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது. கன்னட மொழியில் வரலாற்று புத்தங்களில் இட்லி வெறும் கருப்பு உளுந்தை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளது.
கருப்பு உளுந்தை மோரில் ஊறவைத்து அரைத்து இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தயிரின் தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இட்லி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் நவீன இட்லி நமக்கு இந்தோனேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் புளிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறை பாராம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் இந்து அரசர்கள் அமர்த்திய சமையல் கலைஞர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம். அங்கிருந்து இந்த உணவு இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் கெட்லி என்ற உணவு இட்லிபோலேவே இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் புளிக்கவைக்கும் செயல்பாடு இயற்கையில் நடக்கும் ஒன்று என்பதால் அது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இங்கு அனைத்து கலாச்சாரங்களிலும் புளிக்க வைக்கும் பழக்கம் உள்ளது.
தேவையான பொருட்கள்
ரேஷன் அரிசி – 5 டம்ளர்
கல் உப்பு – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு டம்ளர்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
(இட்லியை மிருதுவாக்கவும், சுவையாக்கவும் வெந்தயம் உதவுகிறது)
செய்முறை
ரேஷன் அரிசியில் ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கைகளால் தேய்த்து கழுவினால், அதில் இருந்து பழுப்பு நிறம் போய் அரிசி நல்ல வெள்ளையாகிவிடும். இதை தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும்.
அடுத்து வெள்ளை உளுந்தையும், வெந்தயத்தையும் ஒன்றாக சேர்த்து ஊறவைத்துக்கொள்ளவேண்டும். அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் 5 மணி நேரம் ஊறவிடவேண்டும்.
அடுத்து ஊறியவுடன், மிக்ஸி அல்லது கிரைண்டரில் உளுந்தை போட்டு அரைத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் சேர்க்கக்கூடாது, ஐஸ் கட்டி சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். இதனால் உளுந்து நன்றாக பொசுபொசுவென அரைந்து வரும். பந்துபோல் இருக்கும். உளுந்து மாவை தண்ணீரில் சேர்த்தால் மாவு மிதக்கவேண்டும். அந்த பக்குவத்தில் அரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து அரிசி மாவை அரைத்துக்கொள்ளவேண்டும். இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து நன்றாக சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலந்துகொள்ளவேண்டும். நல்ல மெத்தாக இளகும் வரை தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவேண்டும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது. குறைவாகவும் இருக்கக்கூடாது. சரியாகன அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க வைத்துக்கொள்ளவேண்டும்.
8 மணி நேரம் கழித்து நன்றாக பொங்கி வந்திருக்கும். மாவை நீங்கள் எடுத்தால் நன்றாக பஞ்சுபோல் இருக்கும். அதில் கரண்டி வைத்து ஒரே பக்கத்தில் மெதுவாக மீண்டும் ஒருமுறை கரைத்துக்கொள்ளவேண்டும். இப்போது அடிக்கக்கூடாது. மாவை மிருதுவாக கையாளவேண்டும்.
இதைச் செய்தாலே இட்டி பஞ்சுபோல் வரும். பந்துபோல் எடுத்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் பஞ்சுபோல் இட்லி வரும். வழக்கமாக 4 இட்லி சாப்பிடுபவர்கள், இதுபோல் இட்லி செய்தால் 10 கூட சாப்பிடுவார்கள். நல்ல சட்னி மட்டும் இருந்தால் போதும். இதுபோன்ற இட்லிகளை சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்