தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Do You Know What Are The Main Reasons Why The Family Is Financially Poor

Financially Poor: குடும்பம் நிதிநிலையில் சரிய முக்கியக் காரணங்கள் என்ன தெரியுமா?

Marimuthu M HT Tamil
Feb 22, 2024 04:14 PM IST

குடும்பம் கடனில் மூழ்க சில காரணங்களை நிதி நிலை வல்லுநர்கள் பல்வேறு தளங்களில் எழுதியுள்ளனர். அதன் தொகுப்பு இங்கே..

குடும்பம் கடனில் மூழ்க சில காரணங்கள்
குடும்பம் கடனில் மூழ்க சில காரணங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

கீழ்க்கண்ட செயல்பாடுகள் நிகழ்ந்தால் சிலரது குடும்பம் நிச்சயம் கடனாளி ஆகும் என நிதிநிலை வல்லுநர்கள் கூறுகின்றனர். எந்தெந்த விஷயங்களில் நிதிநிலை மோசமாகும் என நிதிநிலை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் தெரியுமா? 

1. சமூக மதிப்புக்காக, வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைப்பதற்காக அடிக்கடி ஊர் சுற்றுவது என்பது இன்றைய கலாசாரமாக மாறியிருக்கிறது. இந்த கலாசாரம் மனநிம்மதிக்காக நடந்தால் பரவாயில்லை என்றாலும்; அதிகமுறை இப்படி செய்வது நம் வீட்டின் பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்துவிடும்.

2. குறைந்த தேவை இருந்தாலும் புதிய வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவற்றை அடிக்கடி வாங்க வேண்டும் என நினைக்கும் எண்ணம் நம்மை கடனாளியாக்கிவிடும். என்னதான், இந்த மாதிரிப் பொருட்கள் நம் சொசைட்டியில் மிகப்பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுப்பவை என்றாலும் இந்த புத்தி நம்மை வீழ்ச்சியில் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

3. வீட்டில் சமைத்து சாப்பிடாமல் வாரத்தின் இரண்டு, மூன்று நாட்கள் உணவகங்களில் உண்பது என்பது முதலில் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இரண்டாவது நமது பர்ஸை பதம்பார்த்து இருக்கும் கொஞ்சநஞ்ச சேமிப்பையும் ஒன்று இல்லாமல் கரைத்துவிடும்.

4.நிரந்தர சந்தோஷத்துக்குப் பணம் செலவழிக்காமல், பிரமாண்ட திருமணங்கள், குடும்ப விழாக்கள் போன்ற சமூக மதிப்பினை அதிகரிக்கும் பழக்கங்களுக்காகச் செலவு செய்வதனால் குடும்பம் கடனில் மூழ்கும். ஒருநாள் கூத்துக்கு மீசையை எடுத்த கதையாக, நாம் கடுமையாக உழைத்து சம்பாதித்த ஒருவருட உழைப்பினை கரைத்துவிடும்.

5. சலூன்கள், பார்லர்கள் ஆகியவற்றுக்கு அடிக்கடி செல்வது, தேவைக்கு அதிகமாக ஆடைகள் வீட்டில் இருந்தாலும் விலையுயர்ந்த விலையில் ஆடைகளை வாங்குவது, அதனைப் பிறரிடம் கெத்தாக சொல்லவேண்டும் என்பதற்காக அடிக்கடி இவ்வாறு செய்வது ஆகியவை, நம் வாழ்க்கை வரைமுறையில்லாமல் சீரழியப்போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணிகள்.

6. வரவுக்குத் தகுந்த செலவு செய்யாமல், சேமிப்பினை மேற்கொள்ளாமல், அன்றைய சம்பாத்தியத்தை அன்றே செலவாக்கும் எண்ணம் கொண்டிருந்தால் குடும்பம் கண்டிப்பாக சீரழியும்.

7. உணவு மற்றும் ஆடம்பர நுகர்வு கலாசாரத்தால் மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். எனவே, அடிப்படையில் இதனை மாற்றவேண்டும். 

8. கேட்கும் நபர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்துவிட்டு, அதனை திரும்ப வாங்க சங்கடப்படுவது, குடும்பத்தின் பொருளாதார நிலையை வீழ்த்தும். 

9. எதையெடுத்தாலும் பார்த்தவுடன் வாங்க நினைப்பது, அதற்காக மாதவருமானத்தின் பெரும்பகுதியை செலவழிக்க நினைப்பது, கடன் அட்டைகளை பெற்றுச் செலவழிப்பது ஆகியவை ஒருவரை எளிதில் கடனாளி ஆக்கிவிடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்