DIY Computer Sambrani : காய்ந்த பூக்களை குப்பையில் வீசப்போகிறீர்களா? அதை மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாமா? அது எப்படி?
DIY Computer Sambrani : காய்ந்த பூக்களை குப்பையில் வீசப்போகிறீர்களா? வேண்டாம் அதை மீண்டும் பூஜைக்கு பயன்படுத்தலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் தினமும் பூஜைக்கு புதிய மலர்களை பயன்படுத்திவிட்டு, அது காய்ந்தவுடன் குப்பையில் தூக்கி வீசிவிடுவீர்களா? வேண்டாம் அதை இனி செய்யாதீர்கள். அந்த பூக்களில் இருந்தே பூஜைக்கான பொருள் தயாரிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
வீட்டில் நீங்களாவே செய்ய முடியும் இந்த எளிய கண்டுபிடிப்பை நீங்கள் நன்றாகக் கற்றுக்கொண்டால் இதை வணிபமாகவும் செய்யமுடியும். எப்படி என்று தெரிந்துகொள்ளலாமா?
தேவையான பொருட்கள்
காய்ந்த பூக்கள் – 6 கப் (காம்புகளை நீக்கிவிடவேண்டும்)
(வீட்டில் பூஜையறையில் சாமிக்கு சாற்றி அல்லது அலங்காரத்திற்காக வைக்கப்பட்டு காய்ந்த எந்த பூவாக இருந்தாலும் சரி, அதை எடுத்துக்கொள்ளலாம். அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அதை நன்றாக வெயிலில் வைத்து உலர்த்திக்கொள்ளவேண்டும்)
கிராம்பு – ஒரு கைப்பிடியளவு
ஏலக்காய் – ஒரு கைப்பிடியளவு
வெட்டி வேர் – ஒரு கைப்பிடியளவு
(பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும்)
காய்ந்த வெற்றிலை – 6
ரோஸ் வாட்டர் – சிறிதளவு
(சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தும் பன்னீர்)
நெய் – சிறிதளவு
சம்மங்கிரி – சிறிதளவு
(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை சாம்பிராணி)
பச்சை கற்பூரம் – சிறிதளவு
(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாசனைப் பொருள்)
செய்முறை
காய்ந்த பூக்களை வெயிலில் நன்றாக உதிரியாக வரும் வரை காயவைத்துக்கொள்ளவேண்டும். அதில் உள்ள காம்புகளை நீக்கிவிட்டு, அதனுடன் கிராம்பு, ஏலக்காய், வெட்டிவேர், காய்ந்த வெற்றிலை சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
அது கொரகொரப்பாக உதிரியாக பொடியாக வரும், அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர், நெய், சம்மங்கிரி, பச்சை கற்பூரம் என அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து, கம்ப்யூட்டர் சாம்பிராணிபோல் அடியில் தட்டையாகவும், நுணியில் கூம்பு வடிவிலும் பிடித்துக்கொள்ளவேண்டும்.
ஈரமான இருப்பதை நல்ல மொட்டை மாடி வெயிலில் 2 நாட்கள் காயவைத்தால் நன்றாக கெட்டியாகிவிடும். அதை எடுத்து தண்ணீர், காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது, பூஜைக்கு சாம்பிராணியாக ஏற்றலாம் அல்லது வீட்டிற்கு மணம் சேர்க்கவும், வீட்டில் ஏதேனும் நாற்றம் ஏற்பட்டாலும் இதை பயன்படுத்தலாம். நல்ல ஒரு சுகந்த மணத்தை வீட்டிற்குள் பரப்பி, உங்கள் மனதை அமைதிப்படுத்தும்.
இதை நீங்கள் ஒரு தொழிலாகவும் துவங்கலாம். அதற்கு நீங்கள் கோயில்களில் இருந்து மலர்களை பெறுக்கொள்ளலாம். நீங்கள் சேர்க்கும் வாசனை பொருட்களுக்கு ஏற்ப இந்த சாம்பிராணி எரியும்போது உங்கள் வீட்டுக்குள் வாசம் பரவும்.
மேலும் இதில் உள்ள உட்பொருட்கள் வீட்டில் உள்ள கிருமிகளை அகற்றும் ஆற்றலும் பெற்றவை என்பதால், இதை நீங்கள் வீட்டில் ஏற்றி வைக்கலாம். உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசினாலும் அது காணாமல் போய் வீட்டில் ரம்மிமான சூழல் உருவாகும்.
இதை நீங்கள் தொழிலாக துவங்க உங்களுக்கு பெரிய முதலீடும் தேவைப்படாது. வீட்டில் இருந்துகொண்டே சம்பாதிக்க விரும்பும் பெண்களுக்கு இது ஒரு நல்ல பிசினஸ் ஐடியாதான் .
காய்ந்த பூக்களில்தான் இதை தயாரிக்க முடியும். புதிய பூக்கள் கொண்டு முயற்சித்து விடாதீர்கள். அதன் ஈரத்தன்மையால் இதை சரியாக தயாரிக்க முடியாமல் போய்விடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்