செட்டிநாடு கந்தரப்பம் இல்லாமல் தீபாவளியா? கொண்டாட்டத்தை தித்திக்கவைக்க இதோ ரெசிபி!
செட்டிநாடு கந்தரப்பம் இல்லாமல் தீபாவளியா? கொண்டாட்டத்தை தித்திக்கவைக்க வேண்டுமா? இங்கு கந்தரப்பம் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
செட்டிநாடு உணவுகளுக்கு எப்போது தனியிடம் உண்டு. அவை வித்யாசமான ருசி நிறைந்ததாக இருக்கும். செட்டிநாடு சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கு எங்கு சென்றாலும் தனி மவுசு உண்டு. தீபாவளிக்கு அங்கு தயாரிக்கப்படும் பலகாரங்களும் வித்யாசமானவைதான். செட்டிநாடு பணியாரம், கந்தரப்பம் என அனைத்துக்கும் தனி ருசி உண்டு. இந்த ஆண்டு உங்கள் வீட்டு தீபாவளி பலகாரத்தில் கந்தரப்பமும் இடம்பெறவேண்டுமா? இதோ உடுமலையைச் சேர்ந்த செஃப் சுகன்யா உங்களுக்கு கந்தரப்பம் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறார். நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களே போதும் கந்தரப்பம் செய்வதற்கு. இது சுவையானதும், ஆரோக்கியமானதும் ஆகும். வீட்டிலே செய்வதால் எவ்வித கலப்படமும் இல்லாமல் இருக்கும். உங்கள் தீபாவளியைக் கொண்டாட இந்த ஸ்வீட் சூப்பரான ஜோடியாக இருக்கும் என்று சுகன்யா மேலும் தெரிவித்தார்.
செட்டி நாடு கந்தரப்பம் செய்ய தேவையான பொருட்கள்
பச்சரிசி – 200 கிராம்
உளுந்து – 100 கிராம்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
ஏலக்காய் – 2
தேங்காய் துருவல் – ஒரு கப்
வெல்லம் – 200 கிராம்
கல் உப்பு – சிட்டிகை
எண்ணெய் – அப்பத்தை பொரிக்க தேவையான அளவு
செய்முறை
அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்றையும் சுத்தம் செய்து அலசிவிட்டு, ஒன்றாக ஊறவைத்துக்கொள்ளவேண்டும். இவற்றை இரண்டு மணி நேரம் நன்றாக ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
ஊறிய அனைத்தையும் கிரைண்டரில் சேர்த்து ஒன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். அப்பம் செய்ய மாவை நல்ல மையாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து துருவிய தேங்காய் மற்றும் வெல்லத்தையும் அரையும் மாவிலே சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். கடைசியாக ஏலக்காய் மற்றும் கல்உப்பு சேர்த்து அரைத்து மாவை கிரைண்டரில் இருந்து வழித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
மாவு தயாரானவுடன், கடாயில் தாராளமாக எண்ணெய் ஊற்றி நல்ல சூடாக்கிக்கொள்ளவேண்டும். குழிக்கரண்டியில் மாவை எடுத்து ஒவ்வொரு அப்பமாக ஊற்றி எடுத்துக்கொள்ளவேண்டும்.
தீபாவளியைக் கொண்டாட கந்தரப்பம் தயார். இது செட்டிநாட்டு பலகாரம் ஆகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்கத்தூண்டும். எனவே உங்கள் வீட்டில் இந்த ஆண்டு தீபாவளிக்கு கந்தரப்பம் செய்துகொண்டாடுங்கள். இனிய தீபாவளி வாழ்த்துக்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சுகன்யா.
குறிப்புகள்
மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை. உடனடியாக ஊற்ற வேண்டும்.
மாவை அரைக்கும்போது நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். தேங்காய், ஏலக்காய், வெல்லம் ஆகியவற்றை இறுதியில் சேர்க்கவேண்டும். சேர்த்து இரண்டு சுற்றுகள் சுற்றியவுடன் கிரைண்டரை நிறுத்தி மாவை எடுத்துவிடவேண்டும்.
தண்ணீரே சேர்க்கக்கூடாது. ஏனெனில் தேங்காய் மற்றும் வெல்ல கசிவே போதுமானது. தண்ணீராகிவிட்டால் அப்பங்கள் நன்றாக வராது. மாவு அரைக்கும்போது மிகவும் கவனமாக அரைத்த எடுக்கவேண்டும். அப்போது தான் கந்தரப்பம் நன்றாக வரும்.
எந்த ஒரு ஸ்வீட் செய்யும்போதும், அதில் ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்க்கவேண்டும். அப்போதுதான் அந்த இனிப்பு சுவையானதாக இருக்கும். இனிப்பின் சுவையை தூக்கி காட்டுவதே அந்த உப்புதான். எனவே இதிலும் கல் உப்பு சேர்ப்பது கட்டாயம்.
இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்