Diabetes Control : சர்க்கரை வந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இதையெல்லாம் கடைபிடித்தாலே கட்டுப்படுத்தலாம்!
Diabetes Control : சர்க்கரை நோயாளிகள் பழைய இயல்பு நிலைக்கு திரும்புவது அல்லது நோயை குணப்படுத்துவது என்பது கடினம் என்றே ஆங்கில மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் சர்க்கரையின் அளவை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது (Remission) சாத்தியம் என்றே அந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
HbA1cன் அளவு மருந்துகள் ஏதும் எடுக்காத நிலையில், 5.8 என இருந்தால், நீங்கள் Remission பிரிவின் கீழ் வந்துவிட்டீர்கள் என அர்த்தம். அது 6.5க்கு கீழ் இருந்தால் Partial Remission கீழ் நீங்கள் உள்ளீர்கள் என அர்த்தம்.
ட்ரெண்டிங் செய்திகள்
சர்க்கரை நோயை பொறுத்தமட்டில் உணவு கட்டுப்பாடும் (அரிசி போன்ற மாவுச்சத்து பொருட்களை அறவே தவிர்த்து, நார்ச்சத்து அதிகம் உள்ள சிறுதானியங்களை (Millets) உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்), உடற்பயிற்சியும், (குறைந்தது 30 நிமிடங்கள் மிடுக்கான நடை வாரத்தில் 5 நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டும்) நல்ல தூக்கமும் (6 முதல் 7 மணி நேர இடைவெளி இல்லாத ஆழ்ந்த நித்திரை) மிகவும் முக்கியம். மருந்தின் பங்கு இதற்கு அடுத்தே வரும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். (மருத்துவர்கள் மருந்தை மட்டுமே ஊக்கப்படுத்துவது தவறு)
உடல் எடையை கட்டுக்குள் வைப்பதும், BMI-23.5க்கு கீழ் இருந்தால் 5 ஆண்டு வரை எளிதில் Remission phaseல் சிரமமின்றி இருக்க முடியும்.
பெண்கள் இடுப்பின் (Waist) சுற்றளவு 80 செமீக்கு மிகாமலும், ஆண்கள் இடுப்பின் சுற்றளவை 90 செமீக்கு மிகாமலும் பார்த்துக்கொண்டால் சர்க்கரை நோய் பாதிப்பு குறையும்.
வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்தலை தவிர்த்தும் (இதனால் இன்சுலினுக்கு எதிர்ப்புத்தன்மை ஏற்படுவது குறையும்), சரியான நேரத்தில் குறைந்த கலோரி அளவு, குறைந்த Glycemic Index, உணவு (மாவுச்சத்துப் பொருட்களை(அரிசி)தவிர்க்க வேண்டும்) உட்கொள்வதை உறுதிசெய்தும், மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியுடன் இருப்பதை உறுதிபடுத்தியும், தேவையான அளவு நிம்மதியான உறக்கத்தை உறுதிசெய்தும், உடலுழைப்பைப் பேணுவதும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.
பரம்பரையில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலும், குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து பொருட்களை உண்பதும், மாவுச்சத்துப் பொருட்களை முடிந்த வரை தடுப்பதும், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும்.
சமீபத்திய உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பு மற்றும் நியூகேசில் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில், புகைபிடித்தலை (கைவிட்டால்) கட்டுப்படுத்தினால், 35 முதல் 40 சதவீதம் சர்க்கரை நோய் 2ம் வகை பாதிப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும் என தெரியவந்துள்ளது.
அரசுகள் மக்கள் நலனில் அக்கறைகொண்டு, உள் அரங்குகள், பணியிடங்கள், பயண இடங்கள், பொது வெளிகளில் புகைபிடிப்பதை தடை செய்வது சிறந்த பலனை அளிக்கும் என உலக சுகாதார நிறுவன நிபுணர் ரூடிஜர் கிரெக் தெரிவித்துள்ளார்.
சிறு தானியங்களை (அரிசியை தவிர்த்து, ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள் வழங்கப்பட வேண்டும்) உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை நோய் வராமலும், வந்தால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் அவை பெருமளவு உதவும். பாரம்பரிய அரிசி வகைகளில் வடித்த சாதத்தை சாப்பிட்டாலும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
புகைபிடித்தலை நிறுத்தினால் சர்க்கரை நோயால் ஏற்படும் இதய, சிறுநீரக, கண் பிரச்னைகள் குறையும்.
சமீபத்தில் காற்று மாசுபாட்டால் (PM 2.5 நுண்துகள்களால்) சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், அடிப்படை உரிமையான சுத்தமான காற்றை மக்கள் சுவாசிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்சொன்ன கருத்துகளை கவனத்தில்கொண்டு செயல்படுவது சிறப்பாக இருக்கும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
டாபிக்ஸ்