Deepavali Special Sweet : செட்டிநாடு கந்தரப்பம்! இந்த தீபாவளிக்கு கட்டாயம் செஞ்சு அசத்துங்க!
Deepavali Special Sweet : செட்டிநாடு கந்தரப்பம். இந்த தீபாவளிக்கு கட்டாயம் செஞ்சு அசத்துங்க.
கந்தரப்பம், அரிசியை வறுத்து, உளுந்து, வெல்லம் என அனைத்தும் சேர்த்து செய்ய வேண்டும். இதில் ஏலக்காய் தனிச்சுவைக்காக சேர்க்கப்படுகிறது. கந்தரப்பத்தை சிறப்பான பண்டிகை நாட்கள், வழிபாடு நடைபெறும் நாட்கள் என குறிப்பிட்ட விசேஷ நாட்களில் செய்வது சிறந்தது.
கந்தரப்பம் செய்ய தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
உளுந்து – 3 டேபிள் ஸ்பூன்
பாசிபருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 1 கப்
தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
ஏலக்காய்ப்பொடி – ஒரு சிட்டிகை
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
ஒரு கப் பச்சரிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனனுடன் பாசிபருப்பு, உளுந்து, கடலை பருப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக ஊறவைக்க வேண்டும்.
இவையனைத்தும் குறைந்தது 2 மணி நேரமாவது ஊறவேண்டும்.
நன்றாக அலசி, ஒரு மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு மட்டுமே தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது. மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.
கொரகொரப்பாக மாவு இருக்கும்போதே வெல்லம் சேர்த்து, நல்ல மையாக அரைத்துக்கொள்ள வேண்டும். இப்போது தண்ணீர் சிறிதளவு கூட சேர்க்கக்கூடாது. வெல்லத்தின் கசிவிலே அது அரைந்து வரும். எனவே தண்ணீர் சேர்ப்பதில் கவனம் தேவை.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி, மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றும் பதத்திற்கு கரைத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, ஒரு கரண்டி மாவை எடுத்து அதில் ஊற்றி, அது நன்றாக உப்பி வரவேண்டும்.
இருபுறமும் பிரட்டிபோட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்க வேண்டும். அனைத்து மாவையும் இதுபோல் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை 5 நாட்கள் வரை வைத்துக்கொள்ளலாம். எனவே தீபாவளிக்கு முதல் நாள் இதை செய்தால் நான்கு நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிட வசதியாக இருக்கும்.
குறிப்புகள்
ஒருவேளை மாவில் அதிகம் தண்ணீர் சேர்த்துவிட்டீர்கள் என்றால் பச்சரிமாவை சேர்த்துக்கொள்ளலாம்.
சிறிய குழி கடாயில் எண்ணெய் ஊற்றி, ஒவ்வொன்றாக தனித்தனியாக பொரித்து எடுக்க வேண்டும்.
ஊறவைத்த பொருட்களை அரைத்து எடுக்கும்போது, சிறிதளவு மட்டுமே தண்ணீர் சேர்க்க வேண்டும். ஏனெனில் வெல்லம் சிறிதளவு கசிந்து வரும். மாவு தண்ணீராக இருந்தால் அதிகம் எண்ணெய் குடிக்கும். எனவே கவனமாக செய்து இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.