Cyclone and Fishermen : கடலோர மக்களின் வாழ்கையை பாதிக்கும் புயல்கள்! அதிகமாகும் வாய்ப்பு! எச்சரிக்கும் நிபுணர்கள்!
Cyclone and Fishermen : கடலோர மக்களின் வாழ்கையை பாதிக்கும் புயல்களின் எண்ணிக்கை அதிகமாகும் வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

தற்போது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 2024ம் ஆண்டின் முதல் புயலாக இந்தியாவில் உருவெடுத்துள்ளது. (ரெமெல்-மண் (ஓமன் மொழி) என பெயரிடப்பட்டுள்ளது)
இப்புயல், மே, 26ம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் அருகே நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல், 2024ல் இருந்து, கடல் மேற்பரப்பு வெப்பம் வங்காள விரிகுடா பகுதியில் அதிகமாகி வரும் சூழலில், இப்புயல் வங்காள விரிகுடா பகுதியில் இருந்து, அதிக ஆற்றலை கிரகித்துக்கொள்ளும் (இதனால் தமிழகத்தின் வெப்பம் உயரும்) என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வங்காள விரிகுடா பகுதியில் கடலின் மேற்பரப்பு வெப்பம் வழக்கமான அளவைவிட, கடந்த 3 ஆண்டுகளாக 1°Cக்கு அதிகமாக உள்ளது. வழக்கமாக, அதன் மேற்பரப்பு சராசரி வெப்பம் 28-30°C ஆக இருக்கும்.
வழக்கமான அளவை விட வங்காள விரிகுடாவின் மேற்பரப்பு வெப்பம் 1°C அதிகமாக உள்ள நாட்கள், லட்சத்தீவுகள், கேரளா, கர்நாடகா பகுதியில் 3 மடங்கு அதிகமாகவும், அந்தமான் பகுதியில் 2 மடங்கு அதிகமாகவும், கடந்த 2 ஆண்டுகளில் உள்ளது.
கடந்த 2 மாதங்களில், கடல் வெப்ப அலையின் தாக்கம், வங்காள விரிகுடாவைக் காட்டிலும், அரபிக்கடலில் அதிகமாக உள்ளது என Indian National Centre for Ocean and Information Services (INCOIS) தெரிவித்துள்ளது.
5 நாட்களுக்கு மேலாக, கடல் வெப்ப அலைகள் அதிகம் நிகழ, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், வளி மண்டலத்தில் ஏற்படும் சுழற்சி, பருவநிலை மாற்றம் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.
புவி வெப்பமடைதல்
புவிவெப்பமடைதல் காரணமாக, கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகமாவது புயல்களின் உருவாக்கத்தை துரிதப்படுத்துவதோடு, அதன் காரணமாக, கடலோர மக்களுக்கும், மீன் வளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
2020ல், வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பம் மிக அதிகமாக 34°C என இருந்த போது, "ஆம்பன்" புயல் உருவாகி, பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது.
நிபுணர்கள், கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகமாவதால், வங்காள விரிகுடா, அரபிக்கடல் பகுதியில், அதிக புயல்கள் உருவாகும் என எச்சரிக்கின்றனர்.
அதன் காரணமாக மீன்களின் இனப்பெருக்க காலத்தில் நிகழும் இடப்பெயர்ச்சி பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.
கடலின் மேற்பரப்பு வெப்பம் அதிகமாவதால் (33°C), ஏப்ரலில் மன்னார் வளைகுடா பகுதியில் 50 சதவீதம் Porites பவளப்பாறைகள் அழிவை சந்தித்துள்ளன. இதனால் மீன் வளம் பாதிக்கப்படுவதோடு, கடல் உயிரினங்களின் வளர்ச்சி அல்லது இனப்பெருக்கம் (Mariculture) பெரிதும் பாதிக்கப்படும்.
கடல் மேற்பரப்பு வெப்பம் - Sea Surface Temperature-SST-0-0.5°C அதிகமானால் அதை கண்காணிக்க வேண்டும்-Watch-என்றும், 0.5-1°C அதிகமானால்- விழிப்புடன் தயார் நிலையில் ('Alert') இருக்க வேண்டும் என்றும், 1°C க்கு அதிகமானால் எச்சரிக்கை - (Warning)யுடன் இருக்க வேண்டும் என்பது விதிமுறைகளாக உள்ளது.
எல்நினோ காலங்கள்
எல் நினோ காலங்கள், Indian Ocean Dipole காலங்களில் கடலின் மேற்பரப்பு வெப்பம் உயரும் என ஆய்வுகள் சொல்கின்றன.
தற்போது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆண்டுக்கு 20 நாட்கள் வெப்ப அலைகளாக, பரவலாக பிரிந்து காணப்படுகிறது. ஆனால் 2050ல் புவிவெப்பமடைதல் காரணமாக, இந்தியப் பெருங்கடலின் அனைத்து பகுதிகளிலும், ஆண்டுக்கு 220-250 நாட்கள், கடல் வெப்ப அலைகளாக மாறும் அபாயம் நிறைய உள்ளது என நிபுணர்கள் (IITM-பூனா) எச்சரிக்கின்றனர்.
சுருக்கமாக, புவிவெப்பமடைதலை நாம் கட்டுப்படுத்தாவிடில், கடலின் மேற்பரப்பு வெப்பம் அதிகமாகி, புயல்கள் விரைந்து உருவாவதோடு, மீன் வளமும், கடலோர மக்களும் பாதிக்கப்படுவர்.
இதை உணர்ந்து தமிழக அரசு விரைந்து, செயல்பட வேண்டும்.
அரசு என்ன செய்யவேண்டும்?
பரந்தூர் விமானநிலைய பகுதியில் 27 சதவீதம் பரப்பு ஈரநிலங்கள் (ஈர நிலங்கள் கார்பனை உள்வாங்கி, புவிவெப்பமடைதல் பாதிப்பை குறைக்கும்) என இருக்க, தமிழக அரசு, அதைத் தெரிந்தே அழிக்க முற்படுவது எப்படி சரியாகும்? தமிழக அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய முன்வருமா?
நன்றி – மருந்துவர். புகழேந்தி.

டாபிக்ஸ்