Curry Leaves Thokku : ஆறு மாதம் ஆனாலும் கெடாது! இப்டி ஒரு தொக்கு செய்து வைத்துவிட்டு, ரிலாக்ஸா இருங்க!
Curry Leaves Thokku : ஆறு மாதம் ஆனாலும் கெடாமல் இருக்கும் கறிவேப்பிலை தொக்கு. இப்படி செஞ்சு வெச்சுடுங்க. சாதம் வடித்து, அப்பளம் பொரித்தாலே லன்ச் எளிமையாக முடிந்துவிடும்.
ஆறு மாதம் ஆனாலும் கொடாத கறிவேப்பிலை தொக்கு செய்து வைத்துக்கொண்டு நிம்மதியாக இருங்கள். தினமும் சாதம் மட்டும் வைத்துக்கொண்டு, இதை சேர்த்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – ஒரு கட்டு
(கழுவி, சுத்தம் செய்து, ஆய்ந்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்)
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
வரமல்லி – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
(இதை கடாயில் வறுத்து, ஆறியவுடன். பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்)
தொக்கு செய்ய தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 6
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
கல் உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் -ஒரு ஸ்பூன்
பூண்டு – 15 பல் (பொடியாக நறுக்கியது)
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அதில் கறிவேப்பிலை, புளி, வரமிளகாய், கல் உப்பு என அனைத்தையும் நன்றாக வதக்கவேண்டும். பின்னர் ஆறியவுடன் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
ட்ரையாக வறுத்து அரைக்கவேண்டிய பொடியும் தயாராக உள்ளது.
அடுத்து கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து தாளித்து, பெருங்காயத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு பல் சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள விரும்பவில்லையென்றால் தண்ணீர் சேர்த்தாலே போதுமானது.
பின்னர் அரைத்து வைத்துள்ள ட்ரை பொடியையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான கறிவேப்பிலை தொக்கு தயார்.
குறிப்புகள்
நீண்ட நாட்கள் பயன்படுத்த எண்ணெய் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
கறிவேப்பிலையை நல்ல முறுகலாகும் வரை வறுக்கவேண்டும். கறிவேப்பிலையை கழுவி தண்ணீரில்லாமல் நன்றாக உலர்த்திக்கொள்ளவேண்டும்.
இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடும்போது, கொஞ்சம் சின்ன வெங்காயங்களை தட்டி சேர்த்து, நல்லெண்ணெயுடன் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.
நன்றாக ஆறியபின் ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்து, காற்றுப்புகாமல் அடைத்து வைத்துக்கொண்டால் ஃபிரிட்ஜில் வைத்து 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.
சூப்பரான சுவை நிறைந்தது இந்த கறிவேப்பிலை தொக்கு. இதேபோல் மல்லித்தழை, புதினா தொக்கும் செய்துகொள்ளலாம்.
கறிவேப்பிலையின் நன்மைகள்
கறிவேப்பிலை பச்சையாகவும், காயவைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பல்வேறு வகை அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
5 கிராம் கறிவேப்பிலையில் 0.1 கலோரிகள் உள்ளது. இதில் பொட்டாசியம் 1.5 மில்லிகிராம், வைட்டமின் ஏ 0.50 சதவீதம், கால்சியம் 0.001, வைட்டமின் சி 0.10 சதவீதம், வைட்டமின் பி6 0.10 சதவீதம் உள்ளது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, பி2, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இதன் சுவையும், மணமும் வித்யாசம் நிறைந்ததாக இருக்கும். இது வயிற்றுப்போக்கு, நீரிழிவு, காலை நேர சோம்பல், வாந்தி, மயக்கம் ஆகிய அனைத்தையும் குணப்படுத்த உதவுகிறது. உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
கறிவேப்பிலை உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது.
கல்லீரலுக்கு சிறந்தது.
தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
கண் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.
பாக்டீரியாவை போக்குகிறது.
எடையை குறைக்க உதவுகிறது.
பக்கவிளைவுகளை தடுக்கிறது.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
நீரிழிவை குணப்படுத்துகிறது.
காயங்களை குணப்படுத்த உதவுகிறது.
டாபிக்ஸ்