Cow Urine : கோமியம் – மாட்டின் சிறுநீர்; கழிவா? மருந்தா? அறிவியல் கூறுவது என்ன? – மருத்துவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!
மாட்டின் சிறுநீர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவர்கள். மாட்டின் சிறுநீர் குறித்த என்ன சொல்கிறார்கள் கேளுங்க.

கோமியம் – மாட்டின் சிறுநீர் குறித்த சர்ச்சை அவ்வப்போது எழுந்துகொண்டேதான் இருக்கிறது. அண்மையின் ஐஐடி இயக்குனர் காமகோடி மாட்டின் சிறுநீர் குறித்து பேசியது முதல் இந்த சர்ச்சை விவாதத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து பல்வேறு துறையினரும் கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் நாம் இயற்கை, சித்தா மற்றும் ஆங்கில மருத்துவர்கள் சிலரை தொடர்புகொண்டு கருத்துக்களை கேட்றிந்தோம். அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் கூறுகையில்,
சித்த. ஆயுர்வேத மருந்துகளில் மாட்டின் சிறுநீர் பயன்படுத்தப்படுவது உண்மைதான். சித்த மருந்து நிறுவனங்களில் சில மருந்துகளின் உட்பொருட்களின் பட்டியலில் அவை வெளிப்படையாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. முழுவதும் அப்படியேவும் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. முறையாக சுத்தி (சுத்தி என்றால் சுத்தம் செய்வது) செய்து அது தேவையான மருந்துகளில் மட்டும் தேவையான அளவு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. சித்த மருத்துவ புத்தகங்களிலும் சிறுநீரின் பயன்பாடுகள் குறித்த குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. நம் முன்னோர்கள், மாட்டின் சாணத்தைக் கொண்டுதான் வீடுகளையும், வாசல்களையும் மெழுகி சுத்தம் செய்தார்கள். மாட்டின் சிறுநீர் கோமியம் என்று அழைக்கப்படுகிறது. அதை கிருமி நாசினியாக வீடுகளில் தெளித்தார்கள். ஆனால், அவர்கள் வேறு எந்த விலங்குகளின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தவில்லை. எனவே இதுகுறித்து நாம் சிந்திக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.