Coriander Leaves Kadayal : வாசனைக்காக மட்டும் சேர்க்கும் மல்லித்தழையில் கீரை கடைசல் செய்யலாமா? இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Coriander Leaves Kadayal : வாசனைக்காக மட்டும் சேர்க்கும் மல்லித்தழையில் கீரை கடைசல் செய்யலாமா? இதோ ரெசிபி!

Coriander Leaves Kadayal : வாசனைக்காக மட்டும் சேர்க்கும் மல்லித்தழையில் கீரை கடைசல் செய்யலாமா? இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jan 28, 2025 10:54 AM IST

Coriander Leaves Kadayal : கொத்தமல்லித்தழையில் கடையல் செய்வது எப்படி என்று பாருங்கள்.

Coriander Leaves Kadayal : வாசனைக்காக மட்டும் சேர்க்கும் மல்லித்தழையில் கீரை கடைசல் செய்யலாமா? இதோ ரெசிபி!
Coriander Leaves Kadayal : வாசனைக்காக மட்டும் சேர்க்கும் மல்லித்தழையில் கீரை கடைசல் செய்யலாமா? இதோ ரெசிபி!

கொத்தமல்லித்தழையின் நன்மைகள்

நீரழிவு அளவை கட்டுப்படுத்துகிறது - நீரழிவு பாதிப்புக்கான அபாயம் இருந்தால் உங்கள் உணவில் கொத்தமல்லி தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள என்சைம்கள் உடல் ரத்தத்திலுள்ள குளுகோஸ் அளவை நிர்வகிப்பதுடன், அதிலுள்ள சர்க்கரை அளவை நீக்குகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் நீரழிவு பாதிப்பானது கட்டுப்படுத்தப்படுகிறது.

செரிமானத்தை எளிதாக்குகிறது - கொத்தமல்லியில் அதிகப்படியான நார்ச்சத்துகளும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிரம்பியுள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதேபோல் வயிறு உப்புசம் ஆவது தவிர்க்கப்படுவதுடன், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. உங்களுக்கு நிறைவான உணர்வை தருவதுடன், குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது - கொத்தமல்லியை உணவில் சேர்ப்பதால் மனஅழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. செரிமானத்தை எளிதாக்கி, உடலில் ஏற்படும் மனஅழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து நல்ல மனநிலையை ஏற்படுத்துகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - இதயத்துக்கு நண்பனாக திகழும் கொத்தமல்லி இலை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய் பாதிப்புக்கான அபாயம் குறைவாக உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது - கொத்தமல்லி இலையில் டெர்பினீன், க்வெர்செடின் மற்றும் டோகோபெரோல்ஸ் உள்பட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இவை செல்களின் பாதிப்பு ஏற்படாமல் போராடி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இவை வீக்கத்தை குறைத்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

கண்களுக்கு நன்மை தருகிறது - கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி, ஈ காரோடெனாய்ட்ஸ் போன்றவை இருப்பதால் உங்கள் பார்வையை கூர்மையாக்குகிறது. வயது முதிர்வின்போது பார்வைக் குறைபாடு ஏற்படுத்தும் மாகுலர் நோய் சிதைவு ஏற்படுத்துவதை தாமதப்படுத்துகிறது.

எலும்புகளை வலுப்படுத்துகிறது - கொத்தமல்லியில் கால்சீயம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதுடன், மூட்டு வலிகளிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – சிறிதளவு

பச்சை மிளகாய் – 2

பூண்டு – 6 பல்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மல்லித்தழை – 2 கைப்பிடியளவு

வேக வைத்து துவரம் பருப்பு – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

நெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து- அரை ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு

வரமிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவேண்டும். மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து மல்லித்தழையை சேர்த்து வதக்கிவிட்டு, அடுத்து ஒரு கடையும் சட்டிக்கு மாற்றிவிட்டு, அதனுடன் வேக வைத்த பருப்பு சேர்த்து மசித்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அனைத்தும் பொரிந்தவுடன், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். அதில் வரமிளகாயைக் கிள்ளி சேர்க்கவேண்டும்.

பெருங்காயத் தூள் சேர்த்து, கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழையைத் தூவி இந்த தாளிப்பை எடுத்து அந்த கீரை கடையலில் கலந்து விட்டு, ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சூப்பர் சுவையான கொத்தமல்லிக்கீரை கடையல் தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து அப்பளம் மற்றும் ஊறுகாயுடன் சாப்பிட சுவை அள்ளும்.

வீட்டில் மல்லித்தழையை தூக்கி வீசுபவர்களுக்கு இதுபோல் செய்துகொடுத்தால், அவர்களுக்கு மல்லித்தழையின் நன்மைகள் கிடைக்கும். அருமையான சுவை நிறைந்ததாக இருக்கும். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டுப்பாருங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.