Cooking Tips: ‘இடிச்ச நண்டுக் கால்.. புடிச்ச ரசம்..’ சில நிமிடத்தில் நறுக்குனு நண்டு ரசம் செய்வது எப்படி?
Idicha Nandu Rasam : மழைக்காலம், பனிக்காலம் போன்ற குளிர்காலங்களில் நண்டு ரசம் உங்களுக்கு சளி தொல்லைகள், இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.
கடல் உணவுகளுக்கு எப்போதுமே கிராக்கி தான். நீங்கள் என்ன உணவு செய்தாலும், அதற்கு செரிமானத்திற்கு, ரசம் சாப்பிடுவது வழக்கம். இந்த முறை ரசமே, மெயின் குழம்பாக இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு பாரம்பரிய அசைவ ரசத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம். நண்டு ரசம். நண்டு என்றாலே அதன் மருத்துவ குணங்களுக்காக அறியப்படும் அசைவ உணவாக உள்ளது. அப்படியிருக்க நண்டு ரசம் என்பது ருசிக்கு மட்டுமல்லாமல், சில மருத்துவ குணங்களுக்கும் பெயர்போனதாக அறியப்படுகிறது. அந்த வகையில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலும் சமைக்கப்படும் நண்டு ரசம் தயாரிக்கும் முறை பற்றியும், அதற்கு தேவையான பொருட்கள் குறித்தும் இன்று பார்க்கலாம்.
நண்டு ரசம் தயாரிக்க தேவையான பொருட்கள்
நண்டு கால்கள்
தக்காளி
புளி கரைசல்
சீரகம்
மிளகு
காய்ந்த மிளகாய்
சின்ன வெங்காயம்
பூண்டு
சிறிது எண்ணெய்
கடுகு, உளுந்தம் பருப்பு
கருவேப்பிலை
மஞ்சள் தூள்
உப்பு
கொத்துமல்லி
நண்டு ரசம் செய்யும் முறை இதோ:
சுத்தம் செய்யப்பட்டு நறுக்கிய நண்டு கால்களை தனியாக எடுத்துக் கொள்ளவும். அவற்றை அம்மி அல்லது இடிப்பான் மூலம் இடித்து எடுத்துக் கொள்ளவும். பழுத்த தக்காளி ஒன்றை எடுத்துக் கொள்ளவும். கரைசலாக்கப்பட்ட சிறிதளவு புளியை எடுத்துக் கொள்ளவும். தலா ஒரு ஸ்பூன் சீரகம், மிளகு, ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து, பொடியாக எடுத்துக் கொள்ளவும். கரைத்த புளியோடு தக்காளியையும் சேர்த்து கரைக்கவும்.
மிக்ஸியில் அரைத்த சீரக, மிளகு, மிளகாய் பொடியையும் அதனுடன் சேர்த்து கலக்கவும். எந்த அளவுக்கு ரசம் வேண்டுமோ, அந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதன் பின் மிக்ஸி ஜாரியில் 10 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பூண்டு தோல் நீக்க வேண்டும் என்று அவசியமில்லை.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும், கடுகு உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதன் பின் மிக்ஸில் அரைத்த பூண்டு, வெங்காயத்தை அதனுடன் போடவும். இது ரசத்திற்கு நல்ல ஃப்லேவர் தரும். அதன் பின் கரைத்து வைத்திருக்கும் புளி-தக்காளி கரைசலை அதுடன் சேர்க்கவும். இப்போது சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
அதன் பின், இடித்து வைத்திருக்கும் நண்டு கால்களை அதில் சேர்க்கவும். அவை வேக நிறைய நேரம் எடுக்காது. 10 நிமிடத்தில் வேக்காடு ஆகிவும். எனவே 10 நிமிடமே போதுமானது. இடித்திருப்பதால், அதன் எசன்ஸ் எல்லாமே ரசத்தில் இறங்கிவிடும். ரசம் கொதி நிலைக்கு வரும் போது, சிறிது கொத்துமல்லியை அதன் மீது தூவி, ரசத்தை இறக்கிவிடவும்.
மழைக்காலம், பனிக்காலம் போன்ற குளிர்காலங்களில் நண்டு ரசம் உங்களுக்கு சளி தொல்லைகள், இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. எனவே பெரியவர்கள், குழந்தைகள் அனைவருக்கும் அடிக்கடி நண்டு ரசம் செய்து கொடுத்து, அவர்களை சளி தொல்லையிலிருந்து பாதுகாக்கலாம் என்கிறார்கள் பெரியவர்கள்.
மேலும் பயனுள்ள சமையல் குறிப்புகள் மற்றும் செய்முறை விளக்கம் குறித்து அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். மேலும் எங்களின் சமூக வலைதள பக்கங்களை பின்தொடருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்