Cold Kashayam : மழைக்காலம் துவங்கிவிட்டது! சளி, இருமல், காய்ச்சலை கட்டுப்படுத்தும் கசாயம்!
Cold Kashayam : மழைக்காலம் துவங்கிவிட்டது. சளி, இருமல், காய்ச்சலை கட்டுப்படுத்தும் கசாயம். மழைக்காலத்திற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தேவையான பொருட்கள்
சுக்கு – 1 துண்டு
மிளகு – கால் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
திப்பிலி – 1 துண்டு
வர கொத்தமல்லி – கால் ஸ்பூன்
துளசி – 10 இலைகள்
ஓமவல்லி இலை – 2
பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது தேன் – தேவையான அளவு
தண்ணீர்
கூடுதலாக கிடைத்தால் சேர்த்துக்கொள்ள வேண்டியவை
அதி மதுரம் – அரை இன்ச்
சித்தரத்தை – அரை இன்ச்
தூதுவளை இலை – சிறிதளவு
குப்பைமேனி – சிறிதளவு
புதினா இலை – 5
செய்முறை
வர கொத்தமல்லி, திப்பிலி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை நன்றாக இடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
அடுப்பில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து இடித்த பொருட்களை முதலில் சேர்க்க வேண்டும்.
அடுத்ததாக மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்க வேண்டும். அனைத்தையும் குறைவான தீயில் வேக வைத்து அதன் சாறு இறங்கும் வரை பொருக்க வேண்டும்.
பனங்கற்கண்டு, கருப்பட்டி, வெல்லம் சேர்த்தால் இப்போதே சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் தேன் சேர்க்கிறீர்கள் என்றால் பருகும்போது சேர்த்துக்கொள்ளவேண்டும்.
சிறிது நேரம் மிதமான தீயிலும், பின்னர் குறைவான தீயிலும் வைத்து நன்றாக அனைத்து பொருட்களின் சாறும் இறங்கியவுடன் வடிகட்டி சூடாக பருகினால், அப்படியே சளி, இருமல், தலைவலி, காய்ச்சல் என அனைத்தும் குறையும்.
மழைக்கு இதமான இந்த கசாயத்தை வாரத்தில் ஒரு நாள் குளிர் காலங்களில் எடுத்துக்கொண்டால், உடலுக்கு கதகதப்பையும், நோய் எதிர்ப்பையும் கொடுக்கிறது.
சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் வழக்கமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துடன் இந்த கசாயத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் நிலை விரைவில் மேம்படும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.
தேவைப்பட்டால் மஞ்சள் தூள், ஏலக்காயெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கு கூடுதல் நன்மையும், நோய் எதிர்ப்பு சக்தியும் பெருக வாய்ப்பாகும்.
மழைக்காலத்தில் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் தொல்லைகளால் இனி அவதிப்பட தேவையில்லை. இதுபோன்ற இயற்கை முறை மருத்துவமே போதுமானது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்