கிடைத்துவிட்ட உரிமை தொகைகளும், விடியல் பயணமும்; கிடைக்காத கூலியும் – பெண் தொழிலாளர்களின் நிலை - ஓர் அலசல்!
எடுத்துக்காட்டாக கேரளாவில் தொழிற்சாலைகள் அதிகம் இல்லை. ஆனால் அங்கு குழந்தைகள் இறப்பு விகிதம் 6 ஆகத்தான் உள்ளது. தமிழகத்தில் அது 8 ஆக உள்ளது. (1000 உயிருடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இது கணக்கிடப்படுகிறது) தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதற்கும், மக்கள் நலனுக்கும் சம்மந்தம் இல்லை.

தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறியுள்ளதாகவும், அதில் இந்தியாவிலே மற்ற மாநிலங்களை விட 9.6 சதவீதம் வளர்ச்சி தமிழகத்தில்தான் ஏற்பட்டுள்ளது என்று அண்மையில் விளம்பரப்படுத்தி அரசு மார்தட்டிக்கொண்டது. தமிழகத்தின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலை என்ன என்பது குறித்து சமூக செயற்பாட்டாளர் மருத்துவர் புகழேந்தி விளக்குகிறார்.
இதுகுறித்து அவர் கூறிய விவரங்களும், விளக்கங்களும்
புள்ளி விவரங்கள்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இந்தியாவில் 15.6 சதவீதம் ஆகும். கிட்டத்தட்ட 40 ஆயிரம் தொழிற்சாலைகள் ஆகும். செயல்பட்டுக்கொண்டிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்களும் தமிழகத்தில் தான் அதிகம். இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தில்தான் உள்ளனர். பொருளாதார வளர்ச்சி என்றால் அது சமச்சீரான வளர்ச்சியாக உள்ளதா என பார்க்கவேண்டும்.
தொழிற்சாலைகள் தமிழகத்தில் அதிகம் இருந்தாலும், அவற்றில் இருந்து உற்பத்தியாகும் பொருட்களின் சந்தை மதிப்பில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்தில்தான் உள்ளது. மற்றொன்று, தொழிற்சாலைகள் இருந்தால்தான் வாழ்வு மேம்படும் என்பதல்ல. எடுத்துக்காட்டாக கேரளாவில் தொழிற்சாலைகள் அதிகம் இல்லை. ஆனால் அங்கு குழந்தைகள் இறப்பு விகிதம் 6 ஆகத்தான் உள்ளது. தமிழகத்தில் அது 8 ஆக உள்ளது. (1000 உயிருடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இது கணக்கிடப்படுகிறது) தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதற்கும், மக்கள் நலனுக்கும் சம்மந்தம் இல்லை.
ஆண்-பெண் சமத்துவம்
ஒரு ஆய்வில் தினக்கூலி தொழிலாளர்கள் ஆண்களுக்கு நாளொன்றுக்கு 437 ரூபாயும், பெண்பளுக்கு 259 ரூபாய்தான் உள்ளது. நகர்புறத்தில் 488 ரூபாய் ஆண்களின் ஒரு நாள் வருமானமாக உள்ளது. ஆனால் பெண்களுக்கு அது 325 ரூபாயாக உள்ளது. பல துறைகளிலும், இந்த வித்தியாசம் உள்ளது. கிராமப்புறங்களில் 556 ரூபாய் ஆண்களுக்கு கிடைக்கும் ஒரு நாள் வருமானம் என்றால், அது பெண்களுக்கு 297 ரூபாய்தான் கிடைக்கிறது. நகர்புறங்களில் ஆண்களின் ஒரு நாள் வருமானம் 576 ரூபாய் என்றால், அது பெண்களுக்கு 375 ரூபாய்தான் கிடைக்கிறது.
மயிலாடுதுறையில் வாழைத் தோட்டத்தில் வேலை செய்யும் ஆண்களுக்கு ஒரு நாளைய கூலி ரூ.600 ஆகவும், பெண்களின் கூலி 250 ஆகவும் உள்ளது. இவை புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது பெண்கள் சில பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க முடியும். இதனால் அவர்களுக்கு பலன் என்பது மேலோட்டமாகத் தெரியலாம். ஆனால் அவர்களுக்கும் ஆண்களுக்கு இணையான கூலி கிடைத்தால், அவர்களுக்கு விடியல் பயணத்தில் சேமிக்கும் தொகை கிடைத்துவிடும். இந்த வருமான வேறுபாட்டை களைந்தால் ஆறு நாட்களிலே அவர்கள் மாதம் முழுவதும் பேருந்தில் பயணித்து சேமிக்கும் தொகை கிடைத்துவிடும் என்பதுதான் உண்மை.
தற்காலிகப் பணியாளர்கள் மத்தியில் ஆண்களுக்கு 615 ரூபாய் ஒரு நாளில் கிடைக்கும் கூலியாகவும், பெண்களுக்கு அது 465 ரூபாயாகக் கிடைக்கிறது. ரூ150 வேறுபாடு உள்ளது. எனில் பெண்கள் முக்கிய பங்களிப்பு கொடுத்தும் அவர்களுக்கு சமமான வருமானம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை நிலவரமாக உள்ளது.
நோபல் பரிசு பெற்றவரின் கருத்து
அமெரிக்காவைச் சேர்ந்த 2023ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற கிளாடியா கோல்டின் என்பவர் வரையறுத்துக் கூறுகிறார். அமெரிக்காவில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு மற்றும் ஊதிய வித்யாசம் குறித்து அவர் கூறுகிறார். பெண்கள் உரிய பங்களிப்பு கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை என்று அவர் கூறுகிறார். இந்தியாவிலும் அந்த நிலைதான் உள்ளது.
விவசாயத் துறையில் ஆண்-பெண் கூலி வேறுபாடு 25 முதல் 40 சதவீதம் உள்ளது. சில இடங்களில் அது 44 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் 112 சதவீதம் என இந்த வேறுபாடு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் உள்ளது. சம வேலை, சம நேரம் வேலை இருந்தும், ஊதியத்தில் வேறுபாடு உள்ளது. சட்டப்படி ஒரே கூலி தான் கொடுக்க வேண்டும். பல தீர்ப்புகள் இதை உறுதி செய்துள்ளன.இது நிரந்தர பணியிலும் உள்ளது. பெண்களுக்கு மாத ஊதியமாக இருந்தால், 12,969 ரூபாய் கிடைக்கும் இடத்தில் அது ஆண்களுக்கு 17,476 ரூபாயாக உள்ளது. தமிழத்தில் விவசாயத் துறையில் தினக்கூலி தொழிலாளர்களில் 62 சதவீதம் பெண்கள்தான் உள்ளனர். 51 சதவீதம் தான் ஆண்கள் உள்ளனர். எனவே விவசாயத் துறையில் உள்ள இந்த வேறுபாடு சமூக நீதி பயணத்தில் தமிழகம் தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறு மருத்துவர் புகழேந்தி தெரிவித்தார்.

டாபிக்ஸ்