Chickpea Dosa : புரதம் நிறைந்த டேஸ்டான கொண்டைக்கடலை தோசை.. சும்மா மொறு மொறுன்னு கிரிஸ்பியா சுடலாமா.. சத்தானதும் கூட!
Chickpea Dosa : அரிசியோடு சம அளவு கொண்டைக்கடலையும் சேர்த்து அரைச்சு தோசையை சுட்டு பாருங்கள். சுட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறிவிடும் அதிசயம் உங்கள் வீட்டில் நிகழும். விரும்பும் உணவாக மட்டும் இல்லை புரதம் நிறைந்த ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.

Chickpea Dosa : தோசை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பெரும்பாலான வீடுகளில் தோசை இன்று தினமும் செய்யப்படும் டிபன் வகைகளில் ஒன்று. ஆனால் அரிசி மாவு மட்டுமே வைத்து தோசை சுட்டு வீட்டில் எல்லோருக்கும் அலுத்து போச்சு என்று தோன்றுகிறதா.. அரிசியோடு சம அளவு கொண்டைக்கடலையும் சேர்த்து அரைச்சு தோசையை சுட்டு பாருங்கள். சுட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாறிவிடும் அதிசயம் உங்கள் வீட்டில் நிகழும். விரும்பும் உணவாக மட்டும் இல்லை புரதம் நிறைந்த ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்.
கொண்டைக்கடலை தோசை தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை - 2 கப்
அரிசி - 2 கப்
மிளகாய் வத்தல் - 5
வெந்தயம் - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
நெய் - தோசை சுட தேவையான அளவு
கொண்டை கடலை தோசை செய்முறை
இரண்டு கப் கொண்டைக்கடலையை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும். அதேபோல் இரண்டு கப் இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசியை கழுவி ஊற வைக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் கொண்டைக் கடலை, அரிசி, வெந்தயம் அனைத்தையும் அரை கிரைண்டரில் சேர்த்து அரைக்க வேண்டும். அதில் 5 மிளகாய் வத்தல், ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். மாவு நன்றாக அரைந்த பிறகு கடைசியாக ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்க்க வேண்டும். சீரகம் சேர்த்த 2 நிமிடத்தில் மாவை கிரைண்டரில் இருந்து எடுத்து விட வேண்டும். பிறகு அந்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மூடி வைக்க வேண்டும்.
குறைந்தது தோசை மாவை 8 மணி நேரத்திற்கு புளிக்க வைக்க வேண்டும். பின்னர் மாவில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த மாவை மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் தண்ணீர் சேர்த்தோ ஊற்ற கூடாது. பிறகு வழக்கம் போல் தோசை கல்லை சூடாக்கி தோசையை ஊற்ற வேண்டும். தோசை வேகும் போது நெய் விட்டு முறுகலாக வேக விட வேண்டும். நெய்க்கு பதிலாக எண்ணெய் விட்டு தோசையை சுட்டுக்கொள்ளலாம். ஆனால் நெய் விட்டு இந்த தோசையை செய்யும் போது அதன் ருசி அருமையாக இருக்கும். தோசை இரண்டு பக்கமும் வெந்த பிறகு சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.
இந்த தோசையை தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் எது கூட வேண்டுமானாலும் சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
குறிப்பு : இந்த தோசைக்கு நீங்கள் வெள்ளை கொண்டை கடலை, பிரௌன் கொண்டைக்கடலை என எதை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து தோசையை ஊற்றலாம். இல்லை என்றால் வெங்காயத்தை மேலே தூவியும் சமைக்கலாம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்