Chicken : காரசரமான சிக்கன் கிரேவி.. பார்த்தாலே சாப்பிட தூண்டும்.. குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிக்கும்
Chicken : மசாலா சேர்த்து ஊற வைத்த சிக்கனை சேர்த்து கலந்து விட வேண்டும். அதில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சிக்கன் வேகும் வரை மூடி வைத்து வேக விட வேண்டும். சிக்கன் வெந்த பிறகு அதில் பச்சை கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலையையும் சேர்த்து மூடி வைக்க வேண்டும். அவ்வளவுதான் ருசியான சிக்கன் குழம்பு ரெடி
பொதுவாக சனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலே கிட்டத்தட்ட அனைத்து அசைவ பிரியர்களுக்கும் குஷிதான். சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை வீட்டில் தயாரித்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உண்பதே ஒரு தனி சுகம் தான். பொதுவாக இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரிதும் விரும்புவது சிக்கன்தான். உங்கள் வீட்டிலும் ருசியாக இப்படி ஒரு சிக்கன் குழம்பு செய்து பாருங்கள். ருசி அட்டகாசமாக இருக்கும். சாதம், சப்பாத்தி, ரொட்டி, இட்லி தோசை போன்ற உணவுகளுக்கு சரியான காம்பினேஷன். மசாலா பொருட்களை வறுத்து அரைத்து இப்படி ஒரு சிக்கன் கிரேவி செய்து பாருங்க ருசி அருமையாக இருக்கும்
சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
கோழி - 1 கிலோ,
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 1,
இஞ்சி - 2 சிறிய துண்டுகள்,
பூண்டு - 10 முதல் 15 பல்,
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3,
ஏலக்காய் - 4
கருப்பு மிளகு - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி - 3 டீஸ்பூன்,
சீரகம் - 1 தேக்கரண்டி,
சோம்பு - 1 தேக்கரண்டி,
கசகசா - ¼ தேக்கரண்டி,
வர மிளகாய் - 1
தேங்காய் - 3 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி இலை - சிறிதளவு,
சமையல் எண்ணெய்- சிறிதளவு,
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள்- 1
கரம் மசாலா 1 ஸ்பூன்
தயிர் 3 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
சிக்கன் கிரேவி செய்முறை:
முதலில் கோழியை தண்ணீரில் நன்றாகக் கழுவி எடுக்க வேண்டும். அதில் மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கொஞ்சம் உப்பு, தயிர் சேர்த்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்
ஒரு கடாயில் கிராம்பு, பட்டை , ஏலக்காய், சோம்பு, மிளகு, சீரகம், மல்லி விதை வர மிளகாய், கசகசாவை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். மிதமான தீயில் வறுக்கும் போது வாசம் வர ஆரம்பித்த உடன் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஆற விட வேண்டும். பின்னர் அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் வதங்கிய பின்னர் அதில் ஒரு தக்காளி மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
முதலில் வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் அதில் வதக்கிய வெங்காயம், தக்காளி, தேங்காய் அனைத்தையும் சிறுது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் சோம்பு பவுடர் சேர்க்க வேண்டும். 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அதில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் ஏற்கனவே மசாலா சேர்த்து ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அதில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சிக்கன் வேகும் வரை மூடி வைத்து வேக விட வேண்டும். சிக்கன் வெந்த பிறகு அதில் பச்சை கொத்த மல்லி இலை மற்றும் கறிவேப்பிலையையும் சேர்த்து மூடி வைக்க வேண்டும். அவ்வளவுதான் ருசியான சிக்கன் குழம்பு ரெடி
அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்