Chettinadu Rangoon Puttu : செட்டிநாடு ரங்கூன் புட்டு – பத்தே நிமிடத்தில் செய்து திடீர் விருந்தாளிகளை அசத்தலாம்!
Chettinadu Rangoon Puttu : செட்டிநாடு ரங்கூன் புட்டு – பத்தே நிமிடத்தில் செய்து திடீர் விருந்தாளிகளை அசத்தலாம்!
செட்டிநாடு உணவு வகைகளுள் செட்டிநாடு ரங்கூன் புட்டு என்ற இனிப்பு வகையைசேர்ந்த புட்டு மிகவும் பிரபலம். இதை செய்வதற்கு வறுத்த ரவை, தேங்காய், வெல்லம் ஆகியவை போதுமானது. இதை நீங்கள் அரை மணி நேரத்தில் செய்து முடித்துவிடலாம். எனவே நீங்கள் அவசரமாக இருக்கும்போது, ஒரு சுவையான உணவு சாப்பிட நினைத்தீர்கள் என்றால், இதை நீங்கள் எளிதா செய்து முடித்துவிடலாம்.
உங்கள் வீட்டிற்கு வரும் திடீர் விருந்தினருக்கும் இதை நீங்கள் உடனடியாக செய்து கொடுத்துவிடலாம். நாம் வழக்கமாக சர்க்கரை வைத்து செய்யும் கேசரிக்கு சிறந்த மாற்றது. புட்டு என்று பெயர் வைத்திருந்தாலும், இது கேசரிபோல் குழைவாகத்தான் இருக்கும். எனவே நீங்கள் எளிமையாக ஒரு இனிப்பு செய்ய நினைத்தால், இதை முயற்சித்து பாருங்கள்.
செட்டிநாடு ரங்கூன் புட்டு செய்ய தேவையான பொருட்கள்
ரவை - ஒரு கப்
துருவிய தேங்காய் - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
தண்ணீர் - மூன்று கப்
ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
முந்திரி - கைப்பிடி
திராட்சை - கைப்பிடி
செய்முறை -
கடாயை சூடாக்கி, அதில் சேர்த்து முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே கடாயில் நெய் சேர்த்து துருவிய தேங்காயையும் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் வதங்கி நல்ல பொன்னிறத்தில் திரண்டு வரும். அப்போது அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரை கொதிக்கவிடவேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் நெய் சேர்த்து ரவையை நன்றாக வாசம் வரும் வரை பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதில் கரைத்த வெல்லப்பாகை சேர்த்து கிளறவேண்டும். சூடான வெல்லப்பாகு வறுத்த வரையில் சேரும்போது, ரவையும் நன்றாக வெந்து கேசரி பதத்துக்கு வரும். அப்போது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராட்சை மற்றும் வறுத்த தேங்காய் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
பிறகு நெய் சேர்த்து கிளறி கடாயை மூடி 5 நிமிடம் வேகவிட்டால், ருசியான செட்டிநாடு ரங்கூன் புட்டு சாப்பிட தயாராகிவிட்டது.
கேசரியில் நாம் வெள்ளை சர்க்கரை சேர்த்து செய்வோம். ஆனால் இதில் வெல்லம் சேர்த்து செய்யப்படும். வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாகவும் அமையும்.
நன்றி - பத்மா சுப்ரமணியம்