வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் சென்னை; அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள்; - நிபுணர் வருத்தம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் சென்னை; அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள்; - நிபுணர் வருத்தம்!

வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் சென்னை; அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள்; - நிபுணர் வருத்தம்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 03, 2025 05:00 AM IST

இந்தியாவில் வெப்ப அலைகளால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் சென்னை 5வது இடத்தில் உள்ளது. இந்த முடிவு Counsil for Energy Environment and Water நிறுவனத்தால் செய்யப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் சென்னை; அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள்; - நிபுணர் வருத்தம்!
வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் சென்னை; அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள்; - நிபுணர் வருத்தம்!

தமிழகத்தில் கோடைக் காலத்தில், 3 இரவுகள் கடந்த பத்தாண்டுகளாக கூடுதல் இரவு வெப்பநிலை உயர்வால் (வழக்கத்தை விட) பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அது 4 இரவு கூடுதல் வெப்பநிலையுடன் (வழக்கத்தை விட) உள்ளதாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இரவு வெப்பநிலை உயர நகர்புற வெப்பத்தீவு விளைவே முக்கிய காரணமாக உள்ளது. அதற்கு கான்கிரீட் கட்டிடங்களின் பெருக்கமே முக்கிய காரணமாக உள்ளது.

புவிவெப்பமடைதல் காரணமாக பொதுவான வெப்ப உயர்வைக் காட்டிலும், இரவு வெப்பநிலை உயர்வு அதிகம் காணப்படுகிறது. எல் நினோ ஆண்டுகளில், சென்னையில், 1997, 2016 பகல், இரவு வெப்பநிலை இரண்டுமே உயர்ந்து காணப்பட்டது. 2023ல் சென்னையில் வெப்ப அசவுகர்ய நாட்கள் 153 நாட்களாக உயர்ந்துள்ளது.

1991-2016 இடைப்பட்ட காலத்தில் சென்னை 70.35 சதவீதம் விரிவாக்கம் அடைந்துள்ளது. (வெப்பத் தீவு விளைவு) சென்னையின் இரவு வெப்பம் 2001-2023 இடைப்பட்ட காலத்தில் 1.5°C உயர்ந்துள்ளது. அதாவது 23°C யில் இருந்து சராசரியாக 24.5°C என உயர்ந்துள்ளது. தற்போது இரவு வெப்பநிலை சென்னையில் 27°C ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக 28°C வரை அது உயர்ந்துள்ளது.

சென்னையில் 3 முக்கிய பிரச்சனைகள் உள்ளன.

• பகல் வெப்பநிலை உயர்வு

• இரவு வெப்பநிலை உயர்வு

• அதிக ஈரப்பதம் (கடற்கரையை ஒட்டி இருப்பதால், ஈரப்பதம் 30-60 சதவீதம் இருந்தால் பாதிப்பு குறைவு)

• தாமதமான கடற்காற்று

மேற்கூறிய 3ம் சென்னையில் இருப்பதால் இரவில் வெப்பம் வெளியேற முடியாமல் பல சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது.

அவை

• வெப்ப அழுத்தம் (Heat Stress), வெப்ப சோர்வு போன்றவை.

• வெப்ப உயர்வு காரணமாக உயிரிழப்பு (Mortality) அதிகமாகிறது.

• இதய பிரச்னைகள்,

• ஆஸ்துமா போன்ற சளித்தொல்லைகள்

• பாரிசவாதம் பாதிப்பு 7 சதவீதம் அதிகமாகிறது.

• உறக்கமின்மை

• மன நோய்கள், மன அழுத்தம்

• தமிழகத்தில் பலர் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு வெப்ப உயர்வு அவர்களுக்கு உயிரிழப்பு உட்பட கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அகில இந்திய அளவிலும் 76 சதவீத மாவட்டங்கள் மக்கள், வெப்ப அலைகளால் அதிகம் பாதிக்கப்படுவர். ஏனென்றால் இப்பகுதி அதிக வெப்ப பாதிப்பு, மிக அதிக வெப்ப பாதிப்பு பகுதிகளாக உள்ளது.

எனவே, புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்தாமால், சென்னையின் பகல், இரவு வெப்ப நிலையை கட்டுப்படுத்த முடியாது.

ஒரு சிலர் குளிர்விப்பான்களை (AC) பயன்படுத்தி தற்காலிகமாக தப்பித்துக் கொண்டாலும், குளிர்விப்பான் பயன்பாடே பசுமைக்குடி வாயுக்களை அதிகம் வெளியேற்றி, புவிவெப்பமடைதல் பாதிப்பு இன்னமும் மோசமாக, ஒரு முக்கிய காரணமாக இருக்கப்போகிறது. பகல்-இரவு வெப்பநிலை வேறுபாடும் புவிவெப்பமடைதல் பாதிப்பால் குறைந்து வருகிறது.

எனவே, சென்னையை காப்பாற்ற, இரவு வெப்ப நிலை உயர்வின் காரணமாக எழும் சுகாதார சீர்கேடுகளை குறைக்க, புவிவெப்பமடைதல் பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைககளில் அரசு, மக்கள் பங்களிப்புடன் உடனே இறங்கி செயல்பட வேண்டும்.

சென்னை பெருநகர கார்ப்பரேஷன் நாளொன்றுக்கு வெளியாகும் 1,000 டன் கட்டுமானக் கழிவுகளை பாதிப்பின்றி அகற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமே பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது. இது எப்படி சரியாகும்?

நன்றி – மருத்துவர். புகழந்தி.