தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Check Out The Full Details About Which Foods Take How Long To Digest

காய்கறிகள் முதல் இறைச்சி வரை.. எந்தெந்த உணவுகள் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுக்கும் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Jan 18, 2024 07:52 PM IST

Heath Tips: நாம் சாப்பிடக்கூடிய உணவு செரிமானம் ஆவதற்கு பொதுவாக எவ்வளவு நேரம் எடுத்து கொள்ளும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

காய்கறிகள் மற்றும் இறைச்சி உணவு
காய்கறிகள் மற்றும் இறைச்சி உணவு

ட்ரெண்டிங் செய்திகள்

உண்ணும் உணவு விரைவாக செரிமானமாக வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவின் வகை உள்ளிட்டவற்றை பொறுத்து செரிமான செயல்முறை அமையும். இருப்பினும் சாப்பிடும் உணவை பொறுத்து செரிமான செயல்முறை 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நடைபெறலாம் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே, இந்த கட்டுரையில் எந்தெந்த உணவுகள் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

காய்கறிகள்

தக்காளி, முள்ளங்கி, குடை மிளகாய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் கொண்டவைகள் செரிமானமாக குறைந்தபட்சம் 30-40 நிமிடங்கள் ஆகும். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள் ஆகும்.

பழங்கள்

ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப் பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும்.

கிழங்கு வகைகள்

காய்கறிகளை காட்டிலும் கிழங்கு வகைகளின் செரிமான நேரம் சற்றே மாறுபடுகிறது. உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் 1 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

முட்டை

முட்டையின் மஞ்சள் கரு மட்டும் சொிமானம் அடைய 30 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அதேநேரம், முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.

பால் பொருட்கள்

பாலில் புரதம், கால்சியம், கொழுப்பு, வைட்டமின்கள் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக் கட்டிகள் செரிமானம் அடைவதற்கு சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக் கட்டிகள் செரிமானமாக 5 மணி நேரம் கூட ஆகலாம்.

தானிய வகைகள்

கோதுமை, பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோளம் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் 90 நிமிடங்கள் வரை ஆகலாம். அதேபோல் பருப்பு வகைகள், பட்டாணி, பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.

இறைச்சி

எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். ஆடு, கோழி, மாடு, போன்ற இறைச்சி உணவுகள் செரிமானம் ஆவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரம் கூட எடுத்துக்கொள்ளும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்து.

பொறுப்பு துறப்பு:

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

WhatsApp channel

டாபிக்ஸ்